வே.கல்யாண்குமார்/காண்பது கவிதையில்

கவிஞன் யானோர்
சின்னக் குழந்தை.!
கலைமகள் நீயோ..
அன்னை வடிவம்.!
உன்னைத் தெரியும்
உலகை அறியேன்..
இந்நாள் வரைக்கும்
எல்லாம் நீயே.!

எழுத்தில் பறப்பேன் !
கவியில் மிதப்பேன் !
எப்படி சேர்ப்பது..
என்பதை யறியேன்!
வரவும் செலவும்..
உன்னருள் அம்மா!
வரமாய்.. தமிழைத்
தந்திடு போதும்.!

காண்பது கவிதையில்
எழதுதல் என்வேலை..
எப்போது பசிக்குமோ..
ஆற்றுதல் உன்கடன்.!
பைகளில் புத்தகம்
கைகளில் எழுதுகோல்!
உய்வது உன்னருள்..
உதவுதல் உன்கடன்.!

விழித்தால் எழுத்து
விழாமல் தடுத்து
பழித்தோர் நடுவிலே
பாவலனை வழிநடத்து!
கரவும் களவும்
கவிஞன் அறியான்..
கைப்பொருள் தருவது
கலைமகள் பொறுப்பு!

தந்ததைத் தருவேன்
தமிழுக்கே வாழ்வேன்
நொந்ததை உரைப்பேன்
நொடிதோறும் நினைப்பேன்!
என்தாய் கலையே..
உன்மடி உறக்கம்..
என்மீது கலைமகளே
வையடி இரக்கம்.!