
புத்தர் ஒரு மழை நாளில் ஒரு ஏழை வாயிலுக்கு உணவிற்காக வருகிறார். அந்தக் குடிசையில் இருந்த ஏழை வந்திருப்பது யார் என்று அறிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் அவரை ஒரு நிமிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு தோட்டத்தில் காளான் பறித்து வரச் செல்கிறான் . விருந்தினர் வந்த மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் பெரும் திரளாக காளான் பறித்து வந்து ஒரு இலையில் அன்புடன் புத்தருக்குக் கொடுக்கிறான் . எல்லாம் அறிந்த புத்தரும் அவன் ஆசைக்குக் கட்டுப்பட்டு அதைச் சாப்பிடுகிறார் . சற்று நேரத்தில் மயங்கி விழுகிறார் . ஏழை அப்போது தான் நடந்தது அறிந்து வருந்துகிறான். காளானில் சத்தான காளானும் உண்டு, விஷக் காளானும் உண்டு . அவசரத்தில் நல்ல விருந்தினரை பலி வாங்கி விட்டோமே என்று தலையில் கை வைத்து அழுகிறான் . அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விஷயம் அறிந்து ஏழையைச் சாட்டுகின்றனர். அதிர்ஷ்டவசமாக அப்போது புத்தர் மயக்கத்திலிருந்து எழுகிறார். கூட்டம் தனக்கு அமுது கொடுத்தவரைத் திட்டுவது கேட்டு அவர்களைத் தடுக்கிறார்.
“அனைவரும் அமைதியாக இருங்கள். நான் இந்த உணவில் விஷக் காளான் கலந்திருப்பது தெரிந்து தான் சாப்பிட்டேன் .”
“ஏன் அய்யா அப்படி ?”
“அவன் அன்பு அபரிமிதமானது. அதற்கு நான் கட்டுப்பட்டேன். தூய அன்பின் முன் விஷமும் தோற்கும் . இதோ தோற்று விட்டது. நான் எழுந்து விட்டேன். “
“ஐயா. தாங்கள் புத்தர். அதனால் இது சாத்தியமானது . இதே முட்டாள் ஒரு சாதாரண விருந்தினனை இப்படிச் செய்திருந்தால் …”
“கவலை வேண்டாம் . யாராக இருந்தாலும் என்னை மாதிரி “புத்தன் பெரியவனா தர்மம் பெரிதா என்று கேட்டுப் பாருங்கள் . தர்மம் உங்கள் பக்கம் இருந்தால் நீங்கள் தான் ஜெயிப்பீர்கள்.”
