அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை – 168

ம. திருவள்ளவர்

இனிப்பும் எறும்பும்

இமைப்பொழுதுக்கு முன்
இல்லாதிருந்த இடத்தில்
சட்டேன
அணி வகுத்திருக்கின்றன
சாரை சாரையாய்

ஒரே தடத்தில்
எதிரும் புதிருமாய்
மோதிக் கொண்டாலும்
விபத்து நிகழ்வதில்லை

சுவரின் சிறுதுளை வழியாய்
நீண்டிருந்தது வெளியில் வால்

உள் நோயாளியின்
மேஜை மீதிருந்த
சர்க்கரைக் குடுவைக்குள்
நுழைந்திருந்தது
தலை

எல்லாம் அந்த –
மூடியும் மூடாதிருந்த
பாத்திரத்தின் விளைவு

சர்க்கரையின் ஈர்ப்பு
சக்தியும் –
எறும்புகளின் மோப்பசக்தியும்
எந்தப் புள்ளியில்
எந்த நொடியில்
சங்கமித்துக் கொண்டிருக்கக் கூடும்

(நன்றி : செதுக்கத் துடிக்கும் சிறகுகள் – ம.திருவள்ளுவர் – டிசம்பர் 2000 – விலை 30 – தாமரைச் செல்வி பதிப்பகம்.)

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை – 167 – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)