அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை – 167

புவியரசு

எனக்கான பஸ்

எனக்கான பஸ்
எப்போதும் காணாமல் போய் விடுகிறது!

வேண்டாத பஸ்களே
வரிசையாய் வந்துநின்று
ஏற்றிக் கொள்ள
எதிர் பார்த்து
எரிச்சலுடன் நகரும்
அசடு வழிய என்னை நிற்கவிட்டு!

எப்போதாவது கருணைகொண்டு
எனக்கான பஸ் வருகையில்
வேண்டாத பஸ்ஸின்
வாலில் முகம் புதைத்தே
வரும்!

முன்னதை விலக்கிப்
பின்னதில் தொற்ற முனைகையில்
வலம் சுற்றி விலகி, விரையும்
எனக்கான பஸ்’
என்னை நிற்கவிட்டு!

சில சமயம்
பொறுமை யிழந்து
வேண்டாத பஸ்ஸில் ஏறித்
துரத்துகையில்

அர்த்தமற்ற ஸ்டாப்பில்
அது நிற்கக் கண்டு
இறங்கி ஓடுகையில்
இரக்கமின்றிச்
சட்டென நகரும்,
எனக்கான பஸ்!

எனக்கும் அதற்கும்
எப்போதும் ஒத்துவரு வதில்லை.

ஆனால்,
அது ஏன்
எனக்கான பஸ்ஸாய்
இன்னும் இருக்கிறது
என்பதுதான் எனக்கு
இன்னும் விளங்கவில்லை!

நன்றி : ஒரு முக்கிய அறிவிப்பு – கவிஞர் புவியரசு – முதல் பதிப்பு 1988

One Comment on “அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை – 167”

Comments are closed.