தால் நிட்சன்/நான்கு பையன்கள்

தமிழில் : க.மோகனரங்கன்

நான்கு பையன்கள்,
ஒருவேளை ஐவராகவும் இருக்கலாம்


நான்கு பையன்கள்,
ஒருவேளை ஐவராகவும் இருக்கலாம்,
ஒரு காரை அசைக்கிறார்கள், அழிவின் பரவசத்தால்
அவர்களின் முகங்கள் கோணியிருந்தன.
அந்த சக்கரங்களுக்கு
அடியில் ஒரு பாதாளம் இருக்கிறது.
காருக்குள் உங்கள் மகன் இருக்கிறான்.
கார் சாய்கிறது.
சுற்றிலும் அழிவு,
உங்களுக்குள்ளும் அழிவு
முயற்சி எதுவுமின்றியே
முன்னமே நீங்கள் அறிவீர்கள்
உங்கள் தொண்டையிலிருந்து
எந்தக் குரலும் எழும்பாது.
என்ன செய்வீர்கள்?

நான்கு பையன்கள்,
ஒருவேளை ஐந்து பேராகவும் இருக்கலாம்,
ஒரு காரை அசைக்கிறார்கள்,
அதன் சக்கரங்களின் கீழாக
ஒரு பாதாளம் உள்ளது.
காரில் இருக்கும் பையன்
உங்கள் மகன் இல்லை.
உங்கள் மகன் வெளியே
அவர்களுடன் இருக்கிறான்,
அழிவின் பரவசத்தால்
அவனது முகம் கோணியுள்ளது.
என்ன செய்வீர்கள்?