நாகேந்திர பாரதி

: இன்றைய நவீன விருட்சம் நிகழ்வில் எழுத்தாளர் ‘ ஆட்டனத்தி ‘ அவர்களின் கதை ‘ அன்பின் வழியது ‘ பற்றிப் பேசிய குரல் பதிவின் விரல் பதிவு .
நண்பர்களே.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு திருக்குறளின் முதல் வரியில் ‘ அன்பின் வழியது ‘ என்பதை இந்தக் கதையின் தலைப்பாக எடுத்துக் கொண்டு அன்பின் பெருமையை அருமையாகச் சொல்லியுள்ளார், நவீன எழுத்தாளர்கள் வரிசையில் முக்கியமான நமது ஆட்டனத்தி அவர்கள்.
பல வருடங்கள் வனத்துறையில் பணி புரிந்த ஆட்டனத்தி அவர்கள் இந்தக் கதை மூலம் அவர் அறிந்த அந்த காட்டையையும் , களிறையும் நம் முன் காட்சியாக அறிமுகப்படுத்துகிறார் .இந்தக் கதையை அந்த யானையே சொல்வதாக எடுத்துச் செல்வது மிகவும் அருமையான உத்தி. .
ஆரம்பத்திலேயே நமக்கு அந்த யானை அதன் கண்ணோட்டத்தில் ஒரு பின்னோட்டமாகச் சொல்லுவதாக அருமையாக ஆரம்பிக்கிறார். அது நினைக்கிறது ‘ எத்தனை நாட்களுக்குத்தான் 12 பேரைக் கொன்றவன் என்று சொல்வார்களோ. இப்போதெல்லாம் அந்த மாதிரி வார்த்தைகளை கேட்கவே காதுகள் கூசுகின்றன ‘என்று அந்த யானை நினைத்து ஆரம்பிக்கும் போதே கதையைப் படிக்கும் ஆவலை நமக்குத் தூண்டி விடுகிறார்.
அதற்குப் பிறகு அவர் அந்த காட்டைப் பற்றி வர்ணிப்பதும் அந்த யானையின் பசியைப் பற்றி வர்ணிப்பதும் நாம் படித்து படித்து அனுபவிக்க வேண்டிய இலக்கியக் காட்சிகள்.
. ‘காட்டில் தீப் பிடித்துக்கொண்டதால் தப்பி ஓடி வந்தேன். இங்கே பசி வயிற்றை கிள்ள, தாகம் கொல்ல . உணவு தேடி தண்ணீர் தேடி , அலை ந்தபோது முதலில் கிடைத்தது ஒரு தர்பூசணி. .அதை உண்ணும்போது சிலர் பேசும் சத்தம். யானை காட்டில் இருந்து வந்திடுச்சு. தர்பூசணி எல்லாம் நாசமாப் போச்சு’ என்று கத்தியபடி, டமாரம் அடித்து, என்மீது டார்ச் லைட் அடித்து என்னைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முயற்சிக்கும் பொழுது நான் திருப்பித் தாக்கி அவர்களில் சிலரை மிதித்துக் கொன்றேன்.
அங்கிருந்து தப்பியது என்று தொடர்ந்து யானை செல்லும் இடங்களை , காட்சிகளை, யானையின் வலியை எவ்வளவு அருமையாக வர்ணிக்கிறார்.கதையைப் படித்துப் பாருங்கள்.
‘குண்டின் வலி தாளாமல் தும்பிக்கையை ஆட்டுகிறேன். அது அங்கும் இங்குமாக போய் வருகிறது. முன்னாடி கால்களைத் தூக்கிக் கொண்டு இருக்கிறேன் மனித வாடை வருகிறது. மறுபடியும் துப்பாக்கியால் சுடுகிறார்கள். ‘
யானைக்கு வேறு வழியில்லை துப்பாக்கியால் சுட்டவனிடம் போய் அவனை தும்பிக்கையால் வளைத்து பிடித்து முன்னங்காலை தூக்கி அவன் மீது அழுத்துகிறது. தென்னைமரத்தின் மீது முட்டி முட்டி முட்டித் தள்ளுகிறது பெரும் சப்தத்துடன் சாய்கிறது தென்னை. ஓலைகளைப் புசிக்கிறது.
‘யானைப் பசிக்கு சோளப் பொரியா’ என்று கேள்விப்பட்டிருப்போம் அதுபோன்று கதை முழுக்க அந்த யானையின் பசியைப் பற்றிய வர்ணனைகள், அது சாப்பிடும் பழங்கள்,இலை தழைகள் வர்ணனைகள் அருமையாக இருக்கின்றன. மறுபடி அந்த இடத்தைவிட்டுத் தப்புகிறது.யானையோடு சேர்ந்தே நம்மையும் பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.
குண்டுகளால் ஏற்பட்ட வலி போக சேற்றை எடுத்துப் பூசிக் கொண்டு வேகமாக போகிறது. மரங்களை முறிக்கிறது . இப்படியே சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு கரும்புத் தோட்டத்தை பார்க்க அதை சுற்றி சோலார் மின்வேலிபோட்டிருக்க அதை இழுக்க, தும்பிக்கையால் பிடித்து இழுக்க,. ‘சுருக்’ இவ்வளவுதானா என்று உள்ளே சென்று கரும்பை ருசித்து சாப்பிடுகிறது அங்கிருப்பவர்கள் வருகிறார்கள் டமாரம் அடித்து தீப்பந்தங்கள் வந்து துப்பாக்கி குண்டுகள் மறுபடியும் உடலில் பாய்கின்றன திரும்புகிறது மறுபடியும் ஒருவனைத் தனது கால்களால் அவனை நசுக்கிறது.
அந்த இடத்தில், யானையின் மன உணர்வைக் காட்டும் ஒரு வரி. ‘எனக்கு உடலில் இருக்கும் குண்டுகள் ஏற்படுத்தும் வலியை விட இந்த மனிதர்கள் ஓலமிட்டு உயிரை விடுவது கண்டு என் மனதில் ஏற்பட்ட வலி இன்னும் அதிகமாக தெரிகிறது. நான் என்ன இந்த மாடுகளையும் மனிதர்களையும் கொல்லும் நோக்கிலா இங்கே வந்து இருக்கிறேன். பசியாற்றத் தானே வருகிறேன். இந்த மனிதர்கள் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் ‘
. போகும் வழியில் பல்வேறு காட்சிகள்.
அதாவது நமது குறிஞ்சி முல்லை மருதம் என்ற நமது மூன்று விதமான நிலங்களின் பண்பாட்டையும் அந்த நிலங்களில் விளையும் பயிர்களையும் மிகவும் அருமையாக சுட்டிக்காட்டி வருகிறார். மழை பெய்கிறது. எங்கோ ஒளிந்து கிடக்கிறது. . திருப்பி ஒரு நாள் வெளியே செல்ல வேண்டும் என்று பார்க்கும் பொழுது மறுபடியும் தீப்பந்தங்கள் .
காக்கிச்சட்டை அதிகாரிகள். பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் ‘கண்டதும் சுட உத்தரவு போட்டு இருக்காங்க’ என்று அவர்கள் பேசிக் கொண்டிருப்பது கேட்கிறது. இப்போது அவர்களைக் காணோம் யானைக்குக் குழப்பமாக இருக்கிறது நடந்து கொண்டே இருக்கிறது கொள்ளுக்காடு வருகிறது அந்த செடிகளில் வாசனையோடு மனித வாடை வருகிறது
அப்பொழுது ஏதோ வித்தியாசமாக அதன் உடலில் குத்துகிறது .அது ஒரு ஊசி அவர்கள் பேசும் உரையாடல் ‘அந்த ஊசி சரியாகாக் குத்தி விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இதற்கு கண் மயக்கம் . காது கேட்கவில்லை கால்களின் மீது அழுத்துகிறது சங்கிலி. சங்கிலியால் கட்டி முன்னால் , பின்னால் யானைகள். பக்கத்தில் 2பக்கம் யானைகள் என்று பல யானைகள் மீது மனிதர்கள் வந்திருக்கிறார்கள். எங்கும் எங்கும் ஓட முடியாதபடி சங்கிலிகள். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து பார்க்கிறது.
இப்பொழுது அதன் முன்னால் இலை தழை மூங்கில் பசுந்தீவனம் தேங்காய் அரிசி மற்றும் ராகி கேக் என்று பல தினுசாக கிடக்கிறது. ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடுகிறது இப்படி சாப்பிடுவதற்காக தான் ராத்திரி பகலாய் அலைந்து, இப்போது, இருக்கும் இடத்திற்கே எனக்கான தீவனம் வந்து சேர்கிறது திடீரென்று ஒரு குரல். ‘ யானையிடம் அன்பா நடந்து கொள்ளுங்கள் அதற்கு புரிகிற மாதிரி சொல்லிக் கொடுங்கள்’ என்று யாரோ சொல்வது கேட்கிறது .மனம் ஆறுதல் அடைகிறது.
அதன் சிந்தனை இப்படி போகிறது ‘காதுகளை செவிடாக்கும் வண்ணம் டமாரம் அடித்து என்னை துப்பாக்கியால் சுட்டு தீப்பந்தங்களை வீசி எத்தனை துன்பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் சோலார் மின் கம்பிகளை கட்டி அதைத் தொட்டால் ஷாக்கடிக்கும் வண்ணம் செய்தார்களே ஆனால் இப்போது மூர்த்தி என்று அன்போடு கூப்பிட்டு ஓரிடத்தில் இருக்க வைத்து தீனி போடுகிறீர்கள், ஏன் என்னை சுட்டுக் கொல்ல உத்தரவு இருந்தும் அதைச் செய்யாமல் என்னை காப்பாற்றி ,இருக்க இடமும் உண்ண உணவும் கொடுக்கிறீர்களே காலில் சங்கிலியை கட்டுவதால் ஏற்படும் வலியைப் போக்க வேப்பெண்ணை தடவி வலியில்லாமல் செய்திருக்கிறீர்கள்’ என்று யானை யோசிக்கும் பொழுது அங்கே கதையின் தலைப்பு ‘அன்பின் வழியது’ என்ற அந்தக் குறள் வரி தாமாகவே நம் மனதில் வந்து விழுகிறது.
இப்பொழுது அது சொல்வதாக அருமையான ஒரு வார்த்தை சொல்கிறார் அந்த அன்பின் சக்தியானது அந்த யானையை எப்படி மாற்றி உள்ளது என்பதற்கு உதாரணம் இந்த வரிகள் .
முன்பிருந்த உடல் பலத்தை விட இப்போது பல மடங்கு பலத்தை பெற்றிருந்தும் என்னை சுற்றி இருக்கும் மரங்களை உடைத்துக்கொண்டு வெளியேற மனசு மறுக்கிறது. என் கால்களை சங்கிலிகளால் கட்டிப் போட்டு இருந்தீர்கள் ஒவ்வொன்றாய் கழட்டு கிறீர்கள். இத்தனை தளை களை அறுத்தும் வெளியேற மனசு மறுக்கிறது .இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.’ என்று எண்ணும் இடம் கதையின் தலைப்பின் தத்துவத்தை நம் மனதில் ஆழமாகப் பதிக்கிறது .
.அதுதவிர காடுகளை அழித்தல் , அதனால் மழை வருவது நின்று போதல் .அதனால்தான் காட்டு மிருகங்கள் நாட்டுக்குள் வருகின்றன. எனவே காட்டைக் காப்போம் இயற்கை வளத்தைக் காப்போம் என்பதையும் அருமையாக எடுத்துச் சொல்கிறார். . இப்படி ஒரு சிறப்பான கதையை வாசித்தமைக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு அழகியசிங்கர் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
–
