
விருட்சம் நடத்திய இன்றைய இணைய கவியரங்கில் வாசித்த கவிதைகள்
1
ஒரு நொடி
இப்போதெல்லாம் மழையை
ரசிக்க முடிவதில்லை
குடைக்கு வெளியே
கைகளை நீட்டக்கூட
தயக்கம் எனக்கு
‘நேரம் கெட்ட நேரத்தில்’ –
என மனம்
சலித்துக் கொள்ளும்
நாற்பதைக் கடந்தபின்
இராமன் ஆண்டால் என்ன
இராவணன் ஆண்டால் என்ன
என்று இருக்கிறது
மழை வசீகரித்தாலும்
நாளையைப் பற்றிய
கவலைகள் அங்கேயே
நங்கூரமிட்டு நிற்கச் செய்கின்றது
கால்நடையாகத்தான்
அடிக்கடி கடைத்தெருவுக்கு
போய் வருவேன் ஆனால்
இன்று என் வீடு இருக்கும்
திசை நினைவிலில்லை
எதிரே சேலையணிந்த
ஒரு யுவதி என்னைக்
கடந்து சென்றாள்
மின்னல் வெட்டுவது போல்
ஒரு வினாடி
எனக்கு மட்டும்
தோன்றி மறைந்தது
ஏழு வண்ண வானவில்…
2
எனக்குள்
தேநீர் பருகிக் கொண்டிருந்த
என்னை மழை
வாவாவென அழைத்தது
எனது பெயர் அதற்கு
எப்படித் தெரிந்தது
ஆச்சரியம் தான்
நான் மழையை ரசிப்பவனில்லை
அண்ணாந்து வானத்தைப்
பார்த்தே
அரை நூற்றாண்டு ஆகிவிட்டது
மழை என்பது
வானத்தின் நிர்வாணம்
இயற்கையின் பேரதிசயம்
சுசீலா மழையையே
வெகுநேரமாகப் பார்த்துக்
கொண்டிருந்தாள்
நான் கூப்பிட்டதைக் கூட
பொருட்படுத்தாமல்
பார்க்கட்டும் போ என
விட்டுவிட்டேன்
இப்போதெல்லாம் நானும்
அவளுடன் சேர்ந்து
மழை பார்க்கிறேன்
கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
மழை மழை மழை
அது என்னை நனைக்காமல்
எனக்குள்ளும் பெய்யெனப்
பெய்து கொண்டிருந்தது…
3
ஞாபகநதி
இந்த மழை ஏனோ
பழைய ஞாபகங்களை
கிளறிவிட்டுச் செல்கிறது
தெருவிளக்குகளைச் சுற்றி
ஈசல் பறக்கும் இரவுகளை
செருப்பில்லாமல் தும்பியைத்
தேடித் திரியும்
சாக்கடை சந்தை
நடுங்கும் குளிரில்
முங்கிக் குளிக்கும்
கோயில் குளத்தை
கொஞ்சம் அச்சத்தோடு
எச்சில் விழுங்கியபடி
காளியாட்டத்தை அருகில்
பார்த்து ரசித்த
அந்த நாட்களை
பள்ளிக்குச் செல்ல
பஸ் படிக்கட்டில்
பயணம் செய்ததை
கல்லூரிக்கு மட்டம் போட்டு
மசாலா படம் பார்த்ததை
வாழ்வைப் பற்றி அறியாத
வெகுளித்தனமாக சுற்றித் திரிந்த
அப்போதும் கனவு இருந்தது
இப்போதும் கனவு இருக்கிறது
அது வாழ்வைப் பற்றியது
இது சாவைப் பற்றியது
4
நிலா பார்த்தல்
(ஜென் கவிதைகள்)
இங்கேயும் நிலா
அங்கேயும் நிலா
நானோ ஒரு நாடோடி
உறங்குகிறேன்
வீட்டின் கூரை மேல்
நிலவொளி
வாசல் கதவை
திறந்து வைத்திருக்கிறேன்
திருடன் பயமில்லை
அதான் நிலவிருக்கிறதே
நீரின்
அடியாழத்தில் நிலா
நானோ கரையில்
முன்னிரவு
வீடு திரும்புகிறேன்
நிலவோடு
மலையுச்சியில்
எழுகிறது நிலா
அழகு தான்
அக்கரைக்கு செல்வதற்கு
ஆற்றைக் கடக்க வேண்டும்
ஓடம் இருக்கிறது
வாருங்கள்
நதியைக் கடந்து
நிலவைப் பார்த்து
திரும்புவோம்
எப்படி
கழியப் போகிறது
நிலவை தொலைத்த
இந்த இரவு
நான் இருக்கிறேன்
நிலா இருக்கிறது
கூடவே
நிழலும் இருக்கிறது
