சுரேஷ் ராஜகோபால் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள்

கவிதை – 1

மழை நாளில் குடை

குடையோடு கிளம்பினேன்
லேசான தூறல்
பெரும் மழையானது
குடை பாதுகாப்பில் சாலையில்
கணுக்கால் நீரில் நடந்தேன்
மழைக்கு ஒதுங்கினேன்
குடையை மடித்து கீழே
சொட்ட வைத்தேன்
மழை நின்றவுடன்
குடை மறந்து
வீட்டுக்கு கிளம்பினேன்.
மறுபடி போய் தேட முடியாது
மழை வெள்ளம் அதிகம்
மனதில் குடைய
ஆரம்பித்தது குடை.

கவிதை – 2

வேகம் விவேகமன்று

வேகமாக நடந்தான்
போக வேண்டிய தூரம்
மிக அதிகம் நேரத்துக்கு
ரயில் வண்டியை பிடிக்க வேண்டும்
அது போகுமிடத்தில்
மிக முக்கிய வேலை இருக்கு
அவனால் அந்த ரயிலை
பிடிக்க முடியாது ஆனாலும்
நடையென்னமோ வேகம்தான்
ரயிலை கோட்டை விட்டான்
ஆயினும் கவலைப்படவில்லை
எப்போதும் வேகம் விவேகமன்று.

கவிதை – 3

வெள்ளம் வடியுமா?

நீளமான கால்வாய் நிரம்பி ஓடுது
மீன் பிடிக்க சிலர்
தூண்டிலோடு காத்திருக்க
கால்வாய் கலங்கியதால்
நீளமான தண்ணிப் பாம்பு
ஓரமாக ஓடியது,
இவையெல்லாம் வடியாத
தண்ணியிலே சகஜம் தானே
அதன் வாயிலே தவளை பிடிபட்டது
ஓட்டமும் நின்றது, சுருண்டு படுத்தது
அதனை யாரும் சீண்டவில்லை.
அதுவும் யாரையும் சீண்டவில்லை
நீர்மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது.

கவிதை – 4

என் செருப்பு

என்னுடலை சுமப்பதற்கு
செருப்பொன்றை வாங்கினேன்
அது அடிக்கடி அறுந்து போனதால்
தைத்து மறுபடி போட
அதனுடலை சுமக்கிறேன்.