
18/10/24 அன்று விருட்சம் அழகிய சிங்கர் நடத்திய ”கவிதை வாசிக்கலாம் வாங்க” இணைய கவியரங்கத்தின் 26 ஆவது கூட்டத்தில் வாசித்த
கவிதைகள்
- உறவு
உனக்கு என் மேல் நிறைய மதிப்பு
எனக்கு உன் பால்
அதீத பாசம்
இந்த உறவுக்கு
நல்ல பெயர் ஒன்று
தயார் நிலையில் உள்ளது
நான் பெண் என்பதால்
நாம் ஒருவரை ஒருவர் துல்லியமாக
புரிந்து கொள்கிறோம்
சகலத்தையும்
பகிர்ந்து கொள்கிறோம்
மௌனமாக
மணிக் கணக்கில்
அமர்கிறோம்
இயல்பாக
இது நட்பு என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்
இது வரை
இதில் ஃப்ராய்ட் எப்போது நுழைந்தார்!
- காரணம்
நேற்று
நாள் முழுவதும்
நீ என்னுடன் இருந்த நாட்களின் நினைவுகள்
சிரித்தும்
புன்னகைத்தும்
தொண்டையில் சிக்கிய அழுகையை முழுங்கியும்
கழிந்தது
வெகு நேரம் புரண்டு
தூங்கி எழுந்து
பல் துலக்கும் முன்
கதவு தட்டப்பட..
நீ!
உன் பாணியில்
மென்மையாய்
மன்னிப்பு கோரினாய்
என்னை விட்டு பிரிந்து போனதற்கு
காரணம் கூற இயலாது என்று கூறி விட்டு
சொன்னாய்
“தயவு செய்து புரிந்து கொள்”
ஒரு கணத்தில்
நான் சோகமற்றுப் போனேன்
விடுதலை தந்த
உற்சாகத்தில் சட்டென்று எழுந்து நின்றேன்
கண் விழித்தேன்
கனத்த கண்களுடன்
- பகுத்தல்
முதலாளி பகுத்தறிவாளர்
என்பதால்
தன் காசில்
வாங்கி வந்த பூமாலையை
காருக்கு அணிவித்து கற்பூர ஆரத்தி எடுப்பார்
ஆயுத பூசையன்று
அந்த ஓட்டுனர்
முதலாளி புன்முறுவலுடன் மௌனம் காக்க
நூலில் ஊஞ்சலாடும் திருப்பதி சாமிக்கு கூப்பிய பின்பே
கார் சாவியை ஓட்டையில் நுழைக்கும்
அவர் கை
செருப்பை கழற்றிய பின்பே ‘களச்’சில் பதியும் அவர் பாதம்
முதிர்ந்த வயதில் கணிசமான தொகையுடன்
ஓய்வு கொடுத்து அனுப்பி வைத்தார் முதலாளி
செருப்புடன் காரை ‘ஸ்டார்ட்’ செய்தார்
முதல் நாள்
புது ஓட்டுனர்
கவலையோடு காத்திருந்தார்
முதலாளி
- எடை
நேர்த்தியாக திட்டமிடப்பட்ட
அவளது உணவையும்
பயிற்சியாளர் சொல்படி அவள் செய்த உடற்பயிற்சியையும்
பரிகசித்தது
அவளது உடல் எடை
ஒவ்வொரு முறையும்
கண்ணுக்குத் தெரியாமல்
எடை இயந்திரத்தின் மேல்
அவளுடன் ஏறி நின்ற
அவள் சோகங்கள் காரணமாய்
