தங்கேஸ் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள்

1.

கல்வி வியாபாரமாகி விட்டது
மதம் வியாபாரமாகிவிட்டது
கலை வியாபாரமாகிவிட்டது
அரசியல் வியாபாரமாகிவிட்டது
நாடும் உலகமும் மனிதமும்
வியாபாரமாகிவிட்டன

யாவும் எவையும்
வியாபாரமாகிவிட்ட
இந்த உலகத்தில்
அன்பின் நிமித்தம்
நான் எதை உனக்கு பரிசளிப்பேன் ?

வேண்டுமானால்
இன்னும் வணிகமயாமாகிவிடாத
இந்தக் கவிதையின்
ஒரு நல்ல பகுதியை தேர்ந்து
நீ எடுத்துக்கொள்கிறாயா?

2. ஒற்றைச் சொல்

ஓர் ஒற்றைச் சொல்
நம் உயிரைப் பிழிந்தெடுக்கிறது

மூன்று எழுத்துக்கள் ஈரசையில்
ஓர் ஒற்றைச் சொல் அது

சில நேரங்களில் மழை மேகமாகவும்
சில நேரங்களில் கணப்பு அடுப்பாகவும்
அது இருந்தது

நம்மை அறியாமலேயே வழிந்தோடும்
கண்ணீர் துளிகளை துடைத்த படியே அது இருந்தது

ஒரு நாள் வானத்து விண்மீன் அகாலத்தில் உதிர்ந்த போது
குளத்தில் இருந்த தவளை குதித்து வெளியேறி போனது
வது எழுப்பி போன பேரலைகள் இன்னும் குளத்தை
உறுத்திக் கொண்டே தான் இருக்கின்றன
பச்சை பாசிகளுக் கடியில் நீரின் மூலக்கூறுகளும்
இன்னும் மாறிய வண்ணமே இருக்கின்றன
ஆனால் தவளை குதித்துப் போன மாயம் தான்
இன்னும் புரியவில்லை
எல்லாம் அந்த ஒற்றைச் சொல் தான்

3. ஹைக்கூ கவிதைகள்

நிலவைக் காணவில்லை
ஒரு நட்சத்திரம் மட்டும்
வானம் ஒன்றும்
ஏமாற்றி விடவில்லை

காற்றில்லாத இரவு
அரூப ஓவியங்களாகி விட்டன
வீட்டுத் தென்னைகள்

முன் பனி விழ ஆரம்பித்துவிட்டது
இந்த செம்பருத்திப் பூக்களுக்கு
நான் எதைப் போர்த்தி விட்டு செல்வேன்

வெள்ளி மலைச் சரிவுகளில்
புரண்டு வரும் அருவி
எத்தனை கோடி நீர்த்திவலைகள் கொண்டது

இருள் வளர ஆரம்பித்துவிட்டது
மீண்டும் ஒருமுறை தரிசித்து விடுகிறேன்
சூரிய அஸ்தமனத்தை

அசையாதே சூரியனே
மீண்டும் இதுபோல்
ஒர் ஓவியமாகி விட முடியாது நீ

காற்றடிக்கும் வரையிலும்
கண்ணுக்குத் தெரியவில்லை
நின்றிருக்கும் போன்சாய் மரங்கள்
.
செம்பருத்திப் பூவுக்குள்
மூழ்கிக் கிடக்கும் கருவண்டு
யார் நிறம் மாறப்போகிறார்களோ முதலில்

கவியும் இருள்
உலகம் மறைகின்றது
இனி நட்சத்திரங்களைப் பார்க்கலாம்

தனித்த பறவை
முன்னும் இல்லை பின்னும் இல்லை
பயணத்தில் நிறுத்தம்