
அந்த இடம் – 1
அது
என்னை விழுங்கிய பிறகும்
நான் அதே இடத்தில்தான்
இருந்தேன்
ஆனால் அது
வேறொரு இடத்தில் இருந்த
அதே இடமாக
இருந்தது
மண்ணெல்லாம்
மாபெரும் மலைகளாக
தாடும் நதியின்
இருந்த காலத்தில்
தோன்றிய இடமாக
அது இருந்தது
மயில்களும் மான்களும்
கூடிக் குலவும் வனமாக
அது விரிந்திருந்தது
கடல் செல்லும் வழியில்
நதி சற்று இளைப்பாறிச் செல்லும்
நந்தவனம் அது
என்று கல்லில்
பொறித்துவைக்கப்பட்டிருக்கிறது
பேரலைகள் சிற்றலைகளாக
மாறிய பின்
புதிதாய்த் தோன்றிய இடமாக
அது
இருந்துகொண்டிருக்கிறது
அந்த இடம் – 2
இங்கே
மறந்துபோனதெல்லாம்கூட
அங்கே
நினைவில் இருக்கிறது
பனிவெளிக்கு அப்பால்
குகைபுகுந்து வெளியேறி
ஒற்றைப் பாதையில்
ஒரு காதம் தாண்டி
நினைவும் மறதியும் கடந்த
அந்த இடம் இருக்கிறது
நீலவண்ண வெளிச்சம்
நிரம்பிய அந்த இடத்தில்
நதிக்கரையோரம்
நானே கட்டிய
என் குடிசை இருக்கிறது
