
கோரைப் பற்கள்
நான்கு கால்கள்
வளைந்த ஒரு வால்
நான்கு கோரைப் பற்கள்
எச்சில் வழிய
துடித்துத் தொங்கும்
நீண்ட நாக்கு
அனைத்தும் இருந்தது
பயத்துக்கு
நானென்னில்
அறியாதிருப்பதை அறியாதிருந்தான்
கரும்புக்கும் இனிப்புக்கும் இடையில்
வந்து போகாது நிற்கும்
சுவையறிந்ததும்
மொட்டை மரம் நின்ற இடத்தில்
முளைத்தெழுந்தது மலையொன்று
அறியாதிருப்பதை அறிந்தான்
புற்கள் காய்ந்து
தொடுவான் வரைக்கும்
விரிந்தது வெட்டவெளி
நிலைமாறியது அறியாமல்
அறிந்திருப்பதை அறியாதிருந்தான்
கவிந்தன மேகங்கள்
சூழ்ந்தது இருள்
அறிந்திருப்பதை அறியாதிருப்பதை
அறிந்த கணம் சூல்கொண்டது
புதிய நட்சத்திரம்
அறிந்திருப்பதை அறிந்திருந்தான்
கோடு கடந்த வெளியில்
போய்
உதித்தது நட்சத்திரம்
இருந்தான்
பின்
இல்லாமல் இருந்தான்
