
கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள்
பாத நிழல்
சிற்றகல களில் தீபங்கள் ஏந்தி தெரு வாசலுக்கு வந்தாள்
ஒளியில் மூக்குத்தியின் வண்ண ஜாலங்கள்
கன்ன
கதுப்புகளில்
மனை கோலத்தின் மீது வைத்து அழகு பார்த்தாள்.
நிமிர்ந்து மேலே நிலவைப் பார்த்து ஒரு புன்முறுவல்
யாரும் இல்லாத போதிலும் வாய் திறந்து ஏதோ பேசினாள்
காற்றிடமாக இருக்கக்கூடும்
அணைத்து விடாதே என்ற வேண்டுதலாய் இருக்கும்
உள்நோக்கி அவள் திரும்புகையில்
நீளும் நிழலின் பாதச்சுவட்டில் என் மனம்
முகமூடிகள்
பத்துக்கு பத்து என் அறை
நான் நானாக இருக்கும் என் வசிப்பிடம்
ஆய்ந்து ஓய்ந்து அறைக்குத் திரும்புகையில்
சுவரில் கழட்டி மாட்டுவேன் அன்றைய முகமூடிகளை
அவை என்னிடம் சொல்ல வருவதை
கேட்காமலும் உறங்கிப் போவேன்.
சில நாட்களில் முகமூடிகள் மாட்ட சுவற்றில் இடமில்லை
ஓரிடத்தில் போடும் மூடிகள் மற்றோர் இடத்தில்
தேவைப்படுவதில்லை
அனைத்தையும் வெளிநடப்பு செய்து புறக்கணித்தேன்
எனக்கும் தெரியும் மறுநாள் காலை அவற்றின் தயவு
வேண்டுமென்று.
திகைத்த இறைவன்
கிழக்கிலிருந்து அவன் கிளம்பினான்
மேற்கிலிருந்து மற்றொருவன் புறப்பட்டான்
செல்வம் தேடி முதலாம் அவனும்
கலைகள் தேடி இரண்டாம் அவனும்
நடுவழியில் சந்தித்து பேசினர்
இவனிடத்தை விட மேற்கில்
இன்னமும் செல்வம் இருக்கும் என்றும்
இவனை விட சிறந்த கலைஞர்கள்
கிழக்கில் கிடைப்பார்கள் என்றும்
இருவரும் எதிர் திசையில் நடக்கத் துவங்க
திகைத்து நடுவில் நின்றார் படைத்த கடவுள்.
அறிதல்
ஐவருமாக கிளம்பினோம்
உடல்வாகோ வேறு வேறு
இடையில் வந்தது சிறு ஆறு
விரைவில் கடக்கச் சொன்னார்கள்
குட்டி ஆற்றுப் பாலத்தின் மீது ஏறி நடந்தார்கள்
சரிவில் இறங்கி
நதியில் நனைந்து
மேடு ஏறும் என்னை பார்த்து சிரித்தார்கள்
நதி சுமந்த செய்திகள் அறிந்த
என் பாதங்களைப் போலவா
உங்களுடையதும்?
