வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

  1. எழுத்து-முதல் வருடம்

புதுக்கவிதை புதிய மறுமலர்ச்சியும் இயக்க வேகமும் வலிமையும் பெறுவதற்கு ‘எழுத்து’ தோன்ற வேண்டியிருந்தது.
சி.சு. செல்லப்பா 1959 ஜனவரியில் ‘எழுத்து’ மாசிகையை ஆரம்பித்தார். அப்போது அவர் புதுக்கவிதை சம்பந்தமாகத் தீவிரமான கொள்கைகளோ, ஆசை நிறைந்த எதிர் பார்ப்போ, ஆர்வம் மிகுந்த திட்டமோ கொண்டிருந்தார் என்று சொல்வதற்கில்லை.
அப்படி ஏதேனும் இருந்திருந்தால், அது அவசியம் முதல் இதழின் ஆசிரியப் பிரகடனத்தில் ஒலிபரப்பப்பட்டிருக்கும். ‘எழுத்து’ முதல் ஏட்டில் மட்டுமல்ல, முதல் வருடத்தின் எந்த ஏட்டிலுமே புதுக்கவிதை சம்பந்தமான அபிப்பிராயம் எதுவும்-ஆசிரியர் பக்கத்திலோ, கட்டுரையாகவோ, அல்லது படைப்பாளிகளின் அபிப்பிராயமாகவோ- பிரசுரிக்கப்படவில்லை.
5-வது இதழ் கு.ப.ரா நினைவு ஏடு. அதில். கு.ப.ரா பற்றி பலர் எழுதிய கட்டுரைகளோடு, கு.ப.ரா படைப்புகள் ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை, ஒரு விமர்சனம், ஐந்து கவிதைகளும் சேர்க்கப்பட்டன. கட்டுரை, ‘வசனகவிதை’ என்ற தலைப்பில் கு.ப.ரா. ‘கலாமோகினி’யில் எழுதியிருந்தது ஆகும்.
‘முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரிகையை’ ஒரு சோதனை முயற்சியாக நடத்த வேண்டும் என்ற எண்ணமே செல்லப்பாவிடம் மேலோங்கியிருந்தது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட சோதனை முயற்சியில், ‘இலக்கிய அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்வதுதான்’ முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என்ற நோக்கமும் அவருக்கு இருந்தது என்று கொள்ளலாம்.
‘எழுத்து இலக்கியக் கோட்பாடுகள் தத்துவக்கோட்பாடுகள் சம்பந்தமாக திறந்த கதவாகத்தான் இருக்கும். கருத்துப் பரிமாறுதல்களின் விளைவாகத்தான் இலக்கியப் படைப்பும் ரசனையும் ஏற்படமுடியும் என்ற நம்பிக்கையை எழுத்து தன் முன் வைத்துக் கொண்டுள்ளது’ என்று முதல் ஏட்டில் அறிவித்துள்ளது.
உடனடியாகவே இலக்கியப் படைப்பு பற்றிய தனது அக்கறையையும் பிரஸ்தாபித்திருக்கிறது.
‘கருத்துக்களைச் சொல்வதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபித்து இருப்பதால், இலக்கிய படைப்பு சம்பந்தமாக எழுத்து தனக்கு எல்லைக் கோடிட்டுக் கொண்டுவிடும் என்பதல்ல. சொல்லப்போனால் படைப்புதான் ‘எழுத்து’க்கு முதல் அக்கறையாக இருக்கும்’ என்றும்- ‘இலக்கிய அபிப்பிராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களுக்கு களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத் தரமான எத்தகைய புது சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும்’ என்றும் தெளிவுபடுத்திக் கொண்டது.
‘சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயல்கிறவர்களின் படைப்புகளை வரவேற்பது என்பதை ‘எழுத்து’ தனது லட்சியமாக வரித்துக்கொண்டது.
அதனால், கவிதைத் துறையில் புதுக்கவிதைக்கு அது இடம் அளிக்க முன் வந்தது.
முதல் இதழில், ந.பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற கவிதை வெளி வந்தது. அது ‘எழுத்து’க்காக விஷேசமாக எழுதப்பட்டு அல்லது பங்கீட்டு முறை அமுலில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கவிதை.
எப்படியும் பிழைப்பது என்று துணிந்து விட்ட நாரணன் பெட்டிக் கடை வைத்து, ஏற்றம் பெற்று மளிகைக் கடை முதலாளி ஆகி, மண்ணெண்ணெய்ப் பங்கீடு, அரிசிப் பங்கீடு ஆகியவற்றின் துணையோடு பெரும் பணக்காரன் ஆனதை அழகாக வர்ணிக்கும் கவிதை. வாழத் தெரிந்தோர் கையாளும் யுக தர்மங்களையும் அவர்களுடைய ‘வாழ்க்கை நோக்கையும் சுவையாகவும் கிண்டல் தொனியோடும் இக்கவிதை எடுத்துச் சொல்கிறது.
க.நா. சுப்ரமணியம் கவிதைகள் இரண்டு, ‘கவிதை’ என்ற சொந்தப் படைப்பும், ‘ஆங்கிலக் கவி ஒருவர் எழுதியதைப் பின்பற்றி, எழுதப்பட்ட ‘வர்ணம்’ என்பதும்- வந்திருந்தன.
முதல் வருடத்தில் ந.பி. கவிதைகள் மூன்றே மூன்றுதான் (பெட்டிக்கடை நாரணன், விஞ்ஞானி, கலீல் கிப்ரான் தமிழாக்கமான ‘ஜீவா! தயவுகாட்டு’) பிரசுரமாயின 1.2.3. ஏடுகளில்,
‘எழுத்து’ முதல் ஐந்து ஏடுகளில் க.நா.சுப்ரமண்யம் கட்டுரைகளும் கருத்துக்களும் மிக அதிகமான இடம் பெற்றிருந்ததைப் போலவே, முதல் வருடத்தில் (ஏழு ஏடுகளில்) அவரது கவிதைகளும் அதிகமாகப் பிரசுரமாகியிருந்தன.
க.நா.சு சோதனை முயற்சிகள் என்றே கவிதைகள் எழுதினார் என்பதற்கு அவருடைய வரிகளையே எடுத்தெழுதுவதுதான் நல்லது.
‘கவிதையில் நான் செய்ய முயற்சித்ததெல்லாம், விஷயத்தையும் வார்த்தைகளையும் உள்ளத்து உண்மையிலே குழைத்து காதும் நாக்கும் சொல்லுகிற கட்டுப்பாடுகளுக்கும் கண் தருகிற கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு எழுதுவது என்கிற காரியம்தான்; இன்றைய உண்மையை நிரந்தரமாக்குகிற காரியம்தான், இன்றைய என் அனுபவத்தை வார்த்தைகளால், பேசும் சந்தத்தில்இலக்கியமாக்க, கவிதையாக்க முயலுகிறேன். பயன், கழுதையா, குதிரையா, வசனமா கவிதையா, இலக்கியமா பிதற்றலா என்று கேலி செய்பவர் இருக்கலாம். சோதனை என்று சொல்லும் போது இதற்கெல்லாம் பயப்பட்டுக் கட்டாது. இலக்கிய சோதனைகள் பலவும் ஆரம்பத்தில் கேலிக்கிடமாகவேதான் காட்சியளித்துள்ளன.
‘என் புதுக்கவிதை முயற்சிகள் கவிதையாகவும் இலக்கியமாகவும் உருவெடுக்க, வாசகர்கள் ரசிகர்கள் உள்ளத்தில் எதிரொலித்துப் பயன்தரப் பல காலமாகலாம் என்பதையும் அறிந்தே நான் இந்தக் கவிதைச் சோதனையைச் செய்து பார்க்கிறேன். நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம் பெறுகிற விஷயங்கள் எல்லாமே உவமைகள், உருவகங்கள், ஏக்கங்கள், ஆசைகள், வார்த்தைகள், மௌனம் எல்லாமே, என் கவிதைக்கு விஷயம்; வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதைக்கு சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும்; ஆனால் சிக்கல் விடுவிக்கக் கூடாததாகவும் இருக்கவேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும்-அதே சமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க, ஒரு தரம் படிப்பவருக்கும் ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக் கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும் இந்தப் புதுக் கவிதையிலே என்றுதான் எண்ணுகிறேன்.’ (‘சரஸ்வதி’ மலர்-புதுக்கவிதை கட்டுரை)
க.நா.சு. வுன் ‘கவிதை’ எனும் கவிதையைப் படித்துப் பாருங்களேன்!

எனக்கும்
கவிதை பிடிக்காது,
மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்து விட்டான்:
இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்திய மாயின
என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகுதான்.
ஆனால் அது போதவே
போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே, போதாது
என்றுதான், ஒன்றன் பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்
துறைகள்
தோன்றின, நாடகமும், நாவலும், நீள்
கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும்தான்
திருப்தி தருவதில்லையே!
அதனால் தான்
நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்குக் கலை எதுவும் திருப்தி தராது.
மேலே மேலே என்கிற ஏக்கத்தைத்தான் தரும்
கலையின் பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது கடவுளே
இன்னமும் உயிர் வைத்துக் கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.
‘எழுத்து’ முதல் ஏட்டில் தந்த கவிதைகளைப் பார்த்துவிட்டு, தி.சோ. வேணுகோபாலன், டி.கே. துரைஸ்வாமி, ‘பசுவய்யா’ என்ற பெயரில் சுந்தர ராமசாமி ஆகியோரும் கவிதைகள் எழுத முற்பட்டார்கள்.
‘கவி-வேதனை’ என்ற வேணுகோபாலன் கவிதை 2-வது ஏட்டில் இடம் பெற்றுள்ளது. பிறகு 9, 11 ஏடுகளில் ‘நான் கவியானேன்’ ‘வெள்ளம்’ எனும் கவிதைகள் வந்துள்ளன.
துரைஸ்வாமியின் கவிதைகள் (காத்த பானை, கடன்பட்டார், சிலை) 3,4,5 ஏடுகளில் பிரசுரமாயின.
புதிதாகக் கவிதை எழுதியவர்களில் ‘பசுவய்யா’ கவிதைகள் புதுமையும் தனித்தன்மையும் பெற்றுவிளங்கின. மூன்றாது இதழில் வெளியான ‘உன் கை நகம்’ குறிப்பிடத் தகுந்தது.

நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்.
அகிலமே சொந்தம் அழுக்குக்கு!
நகக் கண்ணும் எதற்கு அழுக்குக்கு!

‘பிறாண்டலாமே-எதிரியைப்
பிறாண்டலாமே?’
பிறாண்டலாம், பிடுங்கலாம்,
குத்தலாம், கிழிக்கலாம்.

ஆரத் தழுவிய
அருமைக் கண்ணாளின்
இடது தோளில்
ரத்தம் கசியும்.

வலது கை நகத்தை வெட்டியெறி-அல்லது
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு.
தூக்கி சுமக்கும்
அருமைக் குழந்தையின்
பிஞ்சுத் துடைகளில்
ரத்தம் கசியும்.

இடது கை நகத்தை வெட்டியெறி-அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு.

நகத்தை வெட்டியெறி- அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்.

‘குறும்பை தோண்டலாமே-காதில்
குறும்பை தோண்டலாமே?’
குறும்பை தோண்டலாம்
குறும்பை தோண்டலாம்

குறும்பைக் குடியிருப்பு
குடலுக்குக் குடிமாற்றம்
குருதியிலும் கலந்துபோம்-உன்
குருதியிலும் கலந்துபோம்.

நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்.
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்
இவ்வாறு புதிய நோக்கும் போக்கும் பெற்ற பசுவய்யா தொடர்ந்து கவிதை எழுதினார். கதவைத் திற, வாழ்க்கை, மேஸ்திரிகள், என் எழுத்து என்பன ‘எழுத்து’ முதல் வருட ஏடுகளில் வெளிவந்துள்ளன.
கருத்தாழம் கொண்ட ‘மேஸ்திரிகள்’ என்ற கவிதை மிகுதியும் ரசிக்கத் தகுந்தது.

1
பல்கலைக் கழகத்தின்
முன்னொரு தோட்டம்
தீட்டினார் மேஸ்திரி
அற்புதத் திட்டம்.

2
திட்டம் விளைந்தது
தோட்டம் மறைந்தது
காட்சி தந்தது
மிருகக் காட்சிசாலை.

3
தோட்டத்தில் மேஸ்திரி ஒருவரே
எண்ணத் தொலையுமே உள்ளே?

‘எழுத்து’ புதுக்கவிதை முயற்சிகளுக்குத் தந்த ஆதரவைக் கண்டு உற்சாகம் பெற்று, மா. இளையபெருமாள். கி. கஸ்தூரி ரங்கன், சி.பழனிசாமி, சக்ரதாரி, சுப. கோ. நாராயணசாமி ஆகியோரும் இவ்வருடத்தில் கவிதைப் படைப்பில் ஈடுபட்டார்கள். எல்லாம் ரசிக்க வேண்டிய-பாராட்டுதலுக்கு உரிய-படைப்புகளேயாகும்.
‘எழுத்து’ 14-வது ஏட்டிலேதான் ஆசிரியர் ‘புதுக்கவிதை’ பற்றி பிரஸந்தாபிக்கத் துணிந்துள்ளார்.

‘பழங்கவிதை புதுக்கவிதை என்று அதிகம் இப்போது பாகுபடுத்திப் பேசிக் கொள்கிறோம். புதுக்கவிதை முயற்சிகள் என்று ஒருவகைக் கவிதைகளுக்குப் பெயர் சூட்டி, அதற்கு இடம் தருகிறோம். தமிழ்க் கவிதையைத் தனியான ஒரு பாதையில், திருப்பி விட்ட பாரதியின் தனித்தன்மையை ஏற்றுக் கொண்டபின், அதற்குப்பிறகு அவ்வப்போது தோன்றும் ஆற்றல் கொண்டவர்களது சோதனைப் படைப்புகளுக்கும் ஒரு அஸ்தஸ்து, ஒரு இடம் இருக்கிறது. ஆனால் இந்தப் புதுக்கவிதை முயற்சி எந்த அடிப்படையில் எந்த அளவுக்கு பழங்கவிதையிலிருந்து மாறுபட்டு நிற்கிறது என்பதை எல்லாம் ஆராய்வதற்கான அளவுக்கு புதுக்கவிதை வளம் பெருகவில்லை என்ற ஒரு நினைப்பும் இருந்து வருகிறது.’ இந்த ஏட்டில் பிச்சமூர்த்தி வசன கவிதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இன்று புதுக்கவிதை சோதனை ஆரம்பித்து வைத்த முதல்வர் பிச்சமூர்த்தி. புதுக் கருத்துக்கள் ஆதாரத்துடன் அழுத்தமாக ஆராய்ந்து கூறப்பட்டுள்ள கட்டுரை அது.

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” – விருட்சம் நாளிதழ்