
சரஸ்வதியில்
மீண்டும் புதுக்கவிதையும், அது பற்றிய பேச்சும் எழுந்தது 1958-ல் தான். இப்போது கவிதை எழுதி கட்சி கட்டியவர் க.நா.சுப்ரமண்யம்.
‘சரஸ்வதி’ கவிதையில் விசேஷ அக்கறை காட்டியதில்லை. ஒரு இலக்கியப் பத்திரிகை என்றால் அதில் கவிதையும் இடம் பெறவேண்டும் என்ற நோக்கிலேதான் ‘சரஸ்வதி’ கவிதைகளை பிரசுரித்துக் கொண்டிருந்தது. மரபுக் கவிதைகள்தான் அதில் வெளிவந்தன. இரண்டு மூன்றாவது வருடங்களில் ஒரு கவிதைகூட இடம் பெறாத இதழ்கள் பல உள்ளன. அதன் பின்னரும் கூட இந்த நிலைமையில் தீவிர மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை.
ஐந்தாவது ஆண்டில், ‘சரஸ்வதி’ மாதம் இருமுறைப் பத்திரிகையாக மாற்றப்பட்ட போது, க.நா.சு. அதிகமான ஒத்துழைப்புத் தர முன் வந்தார். அப்போது அவர் புதுக்கவிதையும் எழுதி உதவினார்.
20-9-1958 இதழில் அவர் ‘மயன்’ என்ற பெயரில் எழுதிய கவிதை பிரசுரமாயிற்று. அது தான் ‘சரஸ்வதி’யில் பிரசுரமான முதலாவது புதுக்கவிதை.
மின்னல் கீற்று
“புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக் கொண்டு நடந்தேன்; இந்தப் புழுக்கத்திலே மழை பெய்தால், நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன். தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல்- ஆஹா! இன்பம்! சட்டச் சடவென்று பத்துத் தூற்றல்- ஆஹா! ஆஹா! பத்தே பத்துத் தூற்றல்தான். பின்னர் புழுதியைக் கிளறிய காற்று விசிற மழை ஓடி நகர்ந்து விட்டது. கரிய வானம் பிளந்து கொண்டு கோடை மின்னல் கீற்று தேடிற்று. கையை நான் நீட்டியிருந்தால் அக்கோடை மின்கீற்று என்னைத் தொட்டிருக்கும்; உலகை அழித்திருக்கும். தினசரிச் செய்திகள் கற்றிருக்கும்; தூற்றல் இன்பம் மரத்திருக்கும்; புழுக்கம் வெளி நிறைந்திருக்கும்; புழுதி எழுந்து படர்ந்திருக்கும்; உலகம் ஒழிந்திருக்கும். நான் தனியிருந்து என்ன செய்வதென்று கை நீட்டாதிருந்தேன்.”
இப்படி சொந்தமாகவும், ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றைத் தழுவியும் க.நா.சு. அஞ்சாறு கவிதைகள் எழுதினார். பிறகு, புதுக்கவிதை சம்பந்தமான தனது கருத்துக்களை விளக்கும் கட்டுரை ஒன்றை எழுதினார். அது ‘சரஸ்வதி’ 1959ம் ஆண்டு மலரில் பிரசுரமாயிற்று.
அவர் கூறியுள்ள கருத்துக்கள் கவனிப்புக்கு உரியவை-
‘எளியபதங்கள், எளியசந்தம்’ என்றும், ‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்’ என்றும் சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் சுப்ரமண்ய பாரதியார் புதுக்கவிதைக்குரிய லட்சணங்களை எடுத்துச் சொன்னார். எளிமை, தெளிவு என்கிற இரண்டு லட்சணங்களையும் பின்பற்றிப் பின்னர் கவிகள் சிலர் எழுதினார்கள்.
பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும், மேலாக ஒரு வேகம் இருந்தது. இந்த வேகம் எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும் போதுதான் உயர் கவிதை எப்படித் தோன்றுகிறது என்பது தெரியவரும். உள்ளத்தில் உள்ள உண்மை ஒளி வாக்கினிலும் வந்ததனால் ஏற்பட்டதொரு வேகம் இது. எப்படி வந்தது என்பதுதான் கலை ரகசியம். எப்படியோ வந்தது-பாரதியார் உயர்ந்த கவியானார். இந்தக் கவிதை உண்மையை அலசிப் பிய்த்து எடுத்துப் பார்க்க முடியாது. ஆனால் சூக்ஷ்மமாக இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர் கவிதையின் உயிர் இது.
இந்தக் கவிதை உண்மைக்கு இன்றைய வாரிசாக புதுக் கவியும் புதுக்கவிதையும் தோன்ற வேண்டும்.
பாரதியார் மக்களிடையே பொதுவாகவும் தனித் தனியாகவும் கண்ட குறைகளுக்கு எல்லாம் சுதந்திரமின்மையே காரணம் என்று நம்பினார். சுதந்திரம் வந்துவிட்டால் அக்குறைகள் தானாகவே நீங்கிவிடும் என்றும் நம்பினார். சுதந்திரம் வந்து விட்டது. தனிமனிதர்களின் குறைகள் பன்மடங்காக அதிகரித்து விட்டது போல் இருக்கிறது. பொது வாழ்வு, சமுதாயம் பற்றியோ கேட்கவே வேண்டாம். பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் மட்டுமல்ல, நல்லது தீயது அடிப்படையிலும், ஆன்மீக பராமாத்திகத் துறைகளிலும் போலிகளும் மோசடிகளும் மலிந்து விட்டன. குறைகள் நிறைந்து நிற்கின்றன.
கவிதை மனிதனின் குறைகளைப் பற்றி மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம். குறையைச் சொல்வதும், நிறையைச் சொல்வதும் ஒன்றுதான். ஒன்றைச் சொல்லி மற்றொன்றை விடமுடியாது. இலக்கியத் துறைகள் எல்லாமே சமுதாயம், தனி மனிதன் என்கிற இரண்டு பிரிவிலும் குறைகளையும் நிறைகளையும் சொல்லியும் சொல்லாமலும் அறிவுறுத்துகின்றன என்பது தப்பமுடியாத நியதி.
இந்தக் காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக் காலத்துக்கேற்ற சிக்கலான வார்த்தைச் சேர்க்கைகளில், நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்கு புதுக்கவிதை தேவை. அப்போதுதான் சங்க காலத்தின் சிறந்த கவிதை சிருஷ்டிகளையும், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் போன்ற நூல்களின் தனித் தன்மையையும் நாமும் இன்று எட்டமுடியும். இன்றும் ஒரு புதுச் சிலப்பதிகாரமும் ஒரு கம்பராமாயணமும் தோன்ற முடியும்…
செய்யுள் இயற்றுபவர்களின் எண்ணிக்கை நம்மிடம் இன்று அதிகம்தான் என்றாலும், செய்யுள் எல்லாம் கவிதையாகி விடாது என்பதில் என்ன சந்தேகம்? யாப்பு, இலக்கணம், அணி என்று அசைக்க முடியாத சட்டங்கள் இட்டு, எதுகை, மோனை, சீர், தளை என்றெல்லாம் நைந்துபோன சிந்தனைகளை எடுத்து எடுத்து அளித்து வந்த தமிழ்க்கவிதைக்கு கோபாலகிருஷ்ண பாரதியாரும் சுப்ரமண்ய பாரதியாரும் ஓரளவுக்குப் புத்துயிர் தந்தார்கள். கவிதையோடு இசை என்னும் உயிர் சேர்த்துக் கவிதை செய்தார்கள் அவர்கள்.
பக்தி விசேஷம், இசை முதலியவற்றால் முந்திய பாரதியாரும் சமூக வெறி சுதந்திர வேகத்தினால் பிந்திய பாரதியாரும் தமிழக்கவிதைக்குப் புதுமை தர முயன்றார்கள். இருவருக்கும் இசை நயமும் உதவியது. இந்த இசை நயம் ஓரளவுக்குத் தனிக் கவிதை நயத்தைத் தீர்த்துக்கட்ட உதவியது என்றும் அதே மூச்சில் சொல்லலாம். தமிழோடு இசை பாடுகிற மரபு இருக்கலாம். ஆனால், சங்கநூல் சிலப்பதிகார (இசையற்ற அகவல், சொல்லளவு) மரபு தமிழுக்கு உண்டு என்று ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்! தமிழில் புதுக்கவிதை இலக்கணமாக இடைக்கால இலக்கண அணி மரபுகள் ஒழித்து மிகப்பழைய மரபுகளைத் தேட வேண்டும் என்பது ஒரு விதத்தில் தெளிவாகிறது என்றே சொல்லலாம்.
பல ஐரோப்பிய மொழிகளில் கவிதையைச் சாகவிட்டு விடுவதில்லை என்று பல புதுக்கவிகள் பிடிவாதமாகவே புதுக்கவிதை செய்து வருகிறார்கள். இந்தப் புதுக்கவிதையிலே புதுசாக இன்றைய வாழ்க்கைச் சிக்கலைப் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும், இன்றையப் புதுமைகளை எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு நேர் நடையும் அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சு நடை அடிப்படைச் செய்யுள் வேகமும், எல்லாவற்றிற்கும் மேலாக இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதிகாலப் பழமையைப் போற்றும் ஒரு திறனும் காணக்கிடக்கின்றன.
உதாரணமாகப் பார்த்தால், டி.எஸ்.எலியட் என்பவர் புதுக் கவிதை ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்றால் அவர் இன்றைக்குரிய ஒரு கோணத்தில், ஒரு முகத்தில் நின்று, இன்றைய வசன கவிதை நடையை மேற்கொண்டு, அதற்கிலக்கணமாக நானூறு வருஷங்களுக்கு முன் எழுதிய ஆங்கில ஆதிகால நாடகாசிரியர்களின் அகவல் பாணியை மேற்கொண்டு, பேச்சுச் சந்தத்துக்கிசைய கவிதை செய்கிறார். இடைக்கால மரபுகளைப் புறக்கணித்து விடுகிறார். ஆனால் பழைய இலக்கண மரபை அவர் அப்படியே கொள்வதும் இல்லை. இன்றையப் பேச்சு வேகத்துக்கேற்ப சொல் என்று மக்களின் வாயில் வழங்குவதின் அடிப்படையில் கவிதை செய்கிறார். அதேபோல எஸ்ரா பவுண்டு என்கிற ஆங்கிலக் கவிஞர் ப்ரோவான்ஸ் கீதங்களையும் சீனத்துக் கவிதைகளையும், ஜப்பானிய ஹைக்குகளையும் தன் மரபாக்கிக்கொண்டு புதுக்கவிதை செய்கிறார். அவருடைய கவிதைப் பாணி இன்று ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிற எல்லோரையும் பாதித்திருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே கவிதை செய்த வால்ட் விட்மன் வசனத்தையே கவிதையாக்கி வசனத்தையே வரிவரியாக வெட்டிக்காட்டி, விஷய அமைதி தந்து கவியாக வெற்றி பெற்றார். இன்றைய மொழிகள் பலவற்றிலுள்ள புதுக்கவிதைக்கு பொதலோர், ரிம்போ, மல்லார்மே முதலிய பிரெஞ்சுக் கவிகளையும், வால்ட் விட்மனையும் தான் ஆதாரமாகச் சொல்லுவார்கள். இவர்களையெல்லாம் பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேனே தவிர, விவாதிக்கவில்லை. ஏனென்றால் தமிழில் புதுக்கவிதை விஷயத்துக்கு இவர்கள் புறம்பானவர்கள். ஆனால் இவர்கள் செய்திருப்பது என்னவென்றால் அன்று ஆட்சி செலுத்திய மரபைத் தகர்த்தெறிந்து விட்டு இவர்கள் ஒரு பழைய கவிதை மரபை ஆதாரமாக வைத்து, இன்றைய பேச்சு வளத்து அடிப்படையிலே புதுக்கவிதை செய்யமுயன்றிருக்கிறார்கள். அவரவர்கள் மொழியிலே அவர்களுடைய புதுக் கவிதை முயற்சிகள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய மொழிகள் சிலவற்றிலே இப்போது புதுக்கவிதை திடமான ஒரு இலக்கியக் குழந்தையாகக் காட்சி தருகிறது.
தமிழில் புதுக்கவிதையின் அவசியத்தைப் பற்றிய வரையில் எனக்குச் சந்தேகமில்லை. மரபுக் கவிதை செத்துவிட்டது. (அல்லது செத்துக்கொண்டிருக்கிறது. இன்று கவிகள் என்று மரபுக் கவிதை எழுத வருகிறவர்கள் சொல்லடுக்குப் பாடை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.) புதுக்கவிதை தோன்றியே தீரும். ஆனால் அது எந்த உருவம் எடுக்கும் என்று இப்போது யாரும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பலரும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்த்து வெற்றி தோல்விகள் ஓரளவுக்காவது நிர்ணயமான பின்தான் புதுக் கவிதை உருவாகி இலக்கியப் பூரணத்வம் பெற்ற விமரிசன விஷயமாக முடியும். (சரஸ்வதி ஆண்டு மலர்)
க.நா.சு. சரஸ்வதியில் அதிகமாக கவிதைகள் எழுதவுமில்லை. கவிதை பற்றிய அவருடைய கருத்துக்கள் குறிப்பிடத் தகுந்த பாதிப்பு எதையும் உண்டாக்கி விடவும் இல்லை.
சரஸ்வதி இதழ்களில் வேறு யாரும் புதுக்கவிதை எழுத முன் வரவுமில்லை.
பொதுவாக, சரஸ்வதி கவிதைத்துறையில் எவ்விதமான சாதனையும் புரிந்துவிடவில்லை. சோதனை முயற்சி என்ற தன்மையில் புதுக்கவிதையை அது விரும்பி வரவேற்று ஆதரவு கொடுக்கவும் இல்லை.
இதற்குக் காரணம் ‘சரஸ்வதி’ ஆசிரியர் விஜயபாஸ்கரனுக்கு கவிதையில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. நல்ல கவிதைகளை ரசிக்கக்கூடியவர்தான் அவர். என்றாலும் புதுக்கவிதை என்பது பரிகாசத்துக்கு உரியது என்றே நண்பர் கருதியதாகத் தோன்றியது. ‘தட்டுங்கள்-திறக்கப்படும்’ என்ற கேள்வி பதில் பகுதியில் அவர் எழுதியுள்ள இரண்டு கூற்றுகளை நான் இதற்கு நல்ல உதாரணமாகக் காட்ட முடியும்.
கே: வசனத்தில் கவிதை வருமா?
ப: ஓ! வசனத்தில் கவிதை வரும்: கவிதையில் வசனம் வரும். இரண்டிலும் வசன
கவிதை வரும். ரெண்டுங்கெட்டான் தமிழர்களுக்கு எதுதான் வராது?
சரஸ்வதி, 1959-8வது இதழ்
கே: வசன கவிதை என்றால்?
ப: வெஜிடபிள் பிரியாணி என்று அர்த்தம்.
சரஸ்வதி, 1959-11
ஆகவே, ‘சரஸ்வதி’ மூலம் புதுக்கவிதை புத்துயிர்ப்போ புதிய வேகமோ பெற முடியாமல் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.
வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்””
Comments are closed.