வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

பிச்சமூர்த்தி கவிதைகள் (1937-1946)

1934 முதல் புதுக்கவிதை எழுதத் தொடங்கிய பிச்சமூர்த்தி 1946க்குப் பிறகு பதினான்கு வருடங்கள் எதுவுமே எழுதாமல் இருந்துவிட்டு 1959-ல் புது விழிப்புப்பெற்றவர் போல, மீண்டும் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதலானார். அவரது பிந்திய கவிதைகள் (1960 கள் காலத்தவை) ‘எழுத்து’ பத்திரிகையில் பிரசுரமாயின.
ஆகவே, பிக்ஷுவின் கவிதைகளை, 1940களில் பிறந்தவற்றை முதல் கட்டக் கவிதைகள் என்றும், அறுபதுகளைச் சேர்ந்தவற்றை இரண்டாவது கட்டக் கவிதைகள் என்றும் ஆராய வேண்டும். முதல்கட்டக் கவிதைகளின் நோக்கிற்கும் போக்கிற்கும், கருவுக்கும் கருத்துக்கும், பிற்காலக் கவிதைகளின் தன்மைகளுக்கும் மாற்றங்கள் உண்டா என்று கணிக்க வேண்டும். அறுபதுகளில் புதுக்கவிதை பெற்ற வேகத்துக்கும் கருத்தோட்டங்களுக்கும் தத்துவ தரிசனங்களுக்கும் ஏற்றபடி, கவிஞர் பிச்சமூர்த்தியின் கவிதைகளிலும் வளர்ச்சி காணப்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். அப்போதுதான் புதுக்கவிதைத் துறையில் பிச்சமூர்த்தியின் ஸ்தானத்தைப் பற்றி வாதங்களும் விதண்டா வாதங்களும் கிளப்புகிறவர்களுக்கு உரிய-நியாயமான- பதிலை நாம் பெறமுடியும்.
1945-ல் ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் எழுதாமல் புதுக் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பதைக் குறைகூறி இலக்கிய ரசிகர் ஒட்டப்பிடாரம் ஆ. குருசுவாமி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த ரசிகருக்கு ந.பி. எழுதிய பதில் கருத்தில் கொள்ளத்தக்கது.
11-8-1945 தேதியிட்டு செட்டிகுளத்திலிருந்து பிச்சமூர்த்தி எழுதிய அந்தக் கடிதத்தின் முக்கிய பகுதி இது;

“கவிதையைப்பற்றி நான் சில திட்டவட்டமான கருத்துக்கள் உடையவன். கருத்தாழமோ உணர்ச்சியோ இயற்கையின் தரிசனமோ இல்லாத ஓசைப்பந்தலைக் கட்டும் தந்திரத்தைப் பிற்காலத்துத் தமிழ்க்கவிகள் கற்றுவிட்டார்கள். அதன் விளைவாக ஓசை இன்பமே கவிதை என்ற கொள்கை பரவிவிட்டது. இக்கொள்கைக்கு என் கவிதை மறுப்பு.
பழைய ஓசை இன்பக் கவிமரபை மறந்துவிட்டுக் கவிதையைப் படித்துப் பாருங்கள். மழை அரசி, தீ என்ற தாயும் குஞ்சும், உயிர்மகள்,ஒளியும் இருளும், மாகவிகள் முதலியவற்றைப் படித்திருக்கிறீர்களா?
இம்மாதிரி கவிதை புது முயற்சியானதால் பழைய யாப்பு முறையை அனுபவித்த காதுகளுக்கு இது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் யுகம் மாறிவிட்டதென்ற உண்மையைக் காதுக்குச் சொல்ல வேண்டும். கவிதை இனி காதுக்கு மட்டுமல்ல. அச்சு இயந்திரத்திற்குப் பிறகு கவிதையில் கண்ணுக்கும் முக்கிய இடமுண்டு. உரைநடைக் கவிதை இதை நன்றாய் உணருகிறது.
சிறுகதைகள் எழுதிய காலத்தில் தலையுமில்லாமல் காலுமில்லாமல் இதென்ன என்று சொன்னவர்கள் அநேகர்.
சிறுகதையை ரசிப்பதற்கு எப்படிச் சில காலம் சென்றதோ, அதே போல் இப்புதுக் கவிதையையும் ரசிக்க சில காலம் போகவேண்டி இருக்கலாம். திறந்த மனத்துடன் ஈடுபட்டால் கவிதையைக் காணலாம். ஓசையுடன் கூடக்காணலாம்.”
(இந்தக் கடிதத்தைப் போற்றிப் பாதுகாத்து, இப்போது அது எனக்குப் பயன்படக்கூடும் என்று கருதி எனது பார்வைக்கு அனுப்பி உதவிய இலக்கிய நண்பர் ஓட்டப்பிடாரம் ஆ.குருசுவாமிக்கு என் நன்றி உரியது.)

பிச்சமூர்த்தி இயற்கையின் அழகுகளையும் தன்மைகளையும் நன்கு கண்டுணர்ந்தவர். வாழ்க்கையை விழிப்புடன் ஆராய்ந்தவர். இயற்கையும் வாழ்வும் கற்பிக்கும் பாடங்களைக் கவிதைக் கருத்துக்களாகத் தர முயன்றவர்.
அழகின் பக்தரான அவர் கூறுகிறார்:

வாழ்க்கையும் காவிரி
அதிலெங்கும் கிளிக்கூண்டு;
வார்த்தையே மணல்
ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே
குவிக்கும் விரல்கள்.
பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்;
அழகென்னும் கிளியை அழைத்தேன்.
ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்

வாழ்க்கையை, இயற்கை இனிமைகளை ரசித்து அனுபவிக்கும்படி தூண்டுபவை அவர் கவிதைகள்.

மனக்கிளியே! ஏங்கி விழாதே.
சந்நியாசியின் மலட்டு வார்த்தையை ஏற்காதே.
உடல் பஞ்சரமல்ல.
புலன்கள் பஞ்சரத்தின் கம்பியல்ல-
வெளியும் ஒளியும் நுழையும் பலகணி.
தெய்வப் பேச்சு கேட்கும் காது.
தெய்வ லீலையைப் பார்!
அதோ வானத்துக் கோவைப்போல் பரிதி தொங்குகிறான்!
மலரின் மூச்சிலிருந்து மாட்டின் குமுறல் வரையில்,
குழலின் பேச்சிலிருந்து கடலின் ஓலம் வரையில்;
நாதமே அசைகிறது;
குரல் கொடுக்கிறது
மனமே! காய்கனிகளின் ரஸமே தெவிட்டா அமுதம்.
மலர்களின் மணமே தெய்வ வாசனை.
ஸ்பர்சமே தெய்வத் தீண்டல்.
பார்வையே ஒளியின் அலை.
உலகின் ஒளிகளே பரத்தின் நாதம்.
மனமே! புலன்கள் தளையல்ல,
விடுதலைக் கால்வாய்.
அவைகளுக்கு சக்தி தந்தவன் ஈசன்-
அவனை அறிய,
ஆதி அழகில் மூழ்கி எழ,
கிளியே! ஈசனே ஊனாய், உருவாய், மலர்ந்திருக்கிறான்.
புலன்களொரு ஏணி,
ஏணியைத் தூற்றாதே!
(கிளிக்குஞ்சு)

வாழ்க்கை என்பதே போராட்டம்தான். அதில் சோனியாகி ஒடுங்கிப் போவதில் பயனில்லை; இன்பமுமில்லை. எதிர்த்து நின்று போராட வேண்டும். இயற்கையும் அதைத்தான் கற்றுத் தருகிறது. இந்தத் தத்துவத்தை பிக்ஷு ‘ஒளியின் அழைப்பு’ என்ற கவிதையில் விளக்குகிறார்.
பட்டப்பகலில் இரவைக் காட்டும் நிழல் கொண்ட பெரிய மரம். அதனடியில் ஓர் கமுகு.

‘ரத்தம் செத்த, சோனிக் கமுகு,
சோனியாவானேன்?
அதான் வாழ்க்கைப் போர்!’

பெருமரம், கபந்தன் தேவையோடு, சிறு மரத்தைச் சுரண்டுகிறது. ஏழைக் கமுகு தன் பங்கை, ஒளி, வெளி, காற்று, நீர் அவ்வளவையும்–பறிகொடுத்து நிற்கிறது. வாழ்க்கைப் போர் அது.

‘கமுகு நோஞ்சலாகாமல் என்ன செய்யும்?
அதற்காக விதியென்று பேசி, செங்குத்தாய் வளருமோ?
தியாகம் செய்தேனென்று புண்யம் பேசுமோ?
அட பிதற்றலே!
விதியைப் போற்றினால் தமஸில் உழலலாம்
பிறந்த இடத்தில் வளர்வேனென்றால் சாவை உண்ணலாம்.
ஆ! கமுகறியும் வளர்ச்சியின் மந்திரம்.

சோனிக் கமுகு குறுக்கே படர்கிறது. பிறவி இருளைத் துளைத்து, சூழலின் நிழலை வெறுத்து, முகமுயர்த்தி, விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது. அமிர்தத்தை நம்பி, ஒளியை வேண்டி, பெருமரத்துடன் போட்டியிடுகிறது. அதுவே வாழ்க்கைப் போர்.

‘முண்டி மோதும் துணிவே இன்பம்.
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி’

நானும் ஒரு கமுகு, சோனிக் கமுகு!
சூழவும் எவ்வளவு பெரிய, பழைய, முதிய இருட்டு!
பழமை என்ற பிரமையில், அரையொளியில்,
பொய்களின் பிணங்கள் எப்படி உயிருடன் நடிக்கின்றன!

அறிவின் சுயேச்சையை
அமுக்குப் பிசாசுகள் எப்படி சிறைப்படுத்தி விட்டன!

எப்படி சுவடிகளின் குவியல்
வசிக்கும் இடத்தைப் பறித்துக் கொண்டன!

எலும்பு தெரியும் ஏழ்மை
எவ்வளவு ஏங்கி ஏங்கி விழுகிறது!
நோயின் புலிக்குரல் எப்படி அஞ்ச வைக்கிறது!

உலகம் பொய், சாவு மெய்
என்ற எவ்வளவு சாஸ்திரீயப் புலம்பல்!
பின் சோனியாகாமல் என்னாவேன்?”

இருப்பினும், மனம் தேறுகிறது. சிறுகமுகின் போராட்டத்தைப் பார்த்து, உள்ளத்தில் தெம்பு பிறக்கிறது. உடனே-

‘போர் என்ற சங்கு முழங்குகிறது.
அழகின் சிரிப்பு அண்டமாய்ப் பிறந்திருக்கிறது,
அகண்ட ஒளி அனாதியாய் மலர்ந்திருக்கிறது.
அழகும் அத்யாத்மமும் அழைக்கின்றன.
ஜீவா! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
அமுதத்தை நம்பு,
ஒளியை நாடு,
கமுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்.
சூழ்வின் இருள் என்ன செய்யும்?

இவ்வாறு நம்பிக்கை ஊட்டுகிறார் கவிஞர். மண்ணை மட்டுமல்ல, விண்ணையும் அளக்க முயல்வன அவரது கவிதைகள். கலைஞனின் பெருமிதத்தோடு அவர் சொல்லவில்லையா என்ன-

நாங்களோ கலைஞர்
ஆமைபோல் உணர்ச்சியின்
கிணற்றில் அமிழ்வோம்.
முதுகோடு கொண்டு விதியை எதிர்ப்போம்.

கீழுலகேழும் தயங்காது இறங்கி
ஜீவன்கள் லீலையில் கூசாது கலப்போம்;
அணிலைப்போல் கொம்பேறி
ஒளிக்கனி கடிப்போம்
சாலையின் மேலேறி
செம்மலர் உதிர்ப்போம்
மேலுலகேழும் படகோட்டிச் செல்வோம்!
(கொம்பும் கிணறும்)

இப்படி ஜீவன்களின் லீலையை ‘சக்தி’யின் பெருமையை உஷையின் சிரிப்பை, இயற்கை அழகுகளைப் பாடுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லையே! கவி மரபுதானே என்று சொல்லலாம். ஆனால், பிக்ஷு அவற்றைக் குறிப்பிடும்போது ஒவ்வொன்றிலும் புதுமை தெரிகிறது; தனி நயம் மலர்கிறது. உதயம் பற்றி அவர் கூறுவது இது;

செம்பட்டுச் சல்லடம்
சொகுஸாக உடுத்தி
செம்மலர்க் கூடையை
இடுப்பில் இடுக்கி
சதங்கைகள் சிலம்ப
கீழ்வானில் முளைத்தாள்
இரவென்னும் பெட்டியை
உஷை மெள்ளத் திறந்தாள்.
சூழிருள் சிறையுற்ற
கதிரவன் கிரணம்
தும்பைத் தெறித்த
மாடுபோல் பாய்ந்தது.

‘இருளும் ஒளியும்’ கவிதையில் இவ்விதம் ஒரு வர்ணனை காணக்கிடக்கிறது.

இருள் மலையின் மைக் குகையில்
ஒளிமாடு ஓலமிட

கதிர்க்கன்றின் சோக ஒலி
கடுஞ்சிறையில் கம்ம;
பரிதியெனும் பொன் பருந்து
பாய்ச்சலின்றிக் கிடக்க
ஒளியும் இருளும் கலந்துகூடி
நற்பாம்பும் சாரை போலும்
பின்னிக் காலம் ஓடலாச்சு.

இந்த விதமான இனிய வர்ணிப்புகள் பிச்சமூர்த்தி கவிதைகளில் நிறையவே உள்ளன. இயற்கையின் வளங்களை அழகாக வர்ணிக்கும் வெறும் கவிதைகள் அல்ல பிக்ஷுவின் படைப்புகள். இயற்கையையும் மனித வாழ்வையும் பொருத்திக்காட்டும் தத்துவவெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. ஒளியின் அழைப்பு, கிளிக்கூண்டு, கிளிக்குஞ்சு, காற்றாடி, பூக்காரி போன்றவை. காட்சி இனிமைகள் நயமான கவிதைகளாகப் பிறந்துள்ளன. மார்கழிப் பெருமை, மழைக்கூத்து போன்றவை இந்த ரகத்தவை.
சாதாரண விஷயத்தைக்கூட அருமையான கவிதையாக்கி விடுகிறது. பிச்சமூர்த்தியின் ஆற்றல், மூலையிலே கிடந்த தாளையும், சாலையிலே கிடந்த குச்சியையும், கூரையிலே கிடைத்த துணியையும், பானையிலே கண்ட சோற்றையும் கொண்டு. புத்துருவம் கொடுத்து புதுப்பட்டம் ஆக்கிவிடுகிற திறமையைப் போன்றது அவருடைய கவித்திறமை. காற்றாடி எனும் சிறு பொருளும் அவரது கவிதையில் உணர்ச்சியும் அழகும் பெறும் அற்புதச் சித்திரமாகி விடுகிறது.

மகுடி மேல் சீறிவரும்
நாகம் போல் ஆடிற்றடி
மின்னலைப் போல் வெகுண்டு
முகிலிடையே எரிந்ததடி
கத்தியைப் போல் சுருண்டு
வெளியெங்கும் சுழன்றதடி
ராகுவைப் போல் எழுந்து ஓடி
சூரியனைத் தீண்டிற்றடி,
குரங்கைப் போல் வாலடித்து
கர்ணம் பல போட்டதடி,
காலைப் புறாவைப் போல
புள்ளியாய் மறைந்ததடி!

இயற்கையின் பல்வேறு கோலங்களையும், லீலைகளையும் அவர் கண்டு ரசித்திருப்பதை அவரது கவிதைகள் அனைத்திலும் காணலாம். மழையின் கூத்தை கம்பீரமான வர்ணிப்பாக ந.பி. சித்திரிப்பதை, முன்பே இத்தொடரில் நான் எடுத்தெழுதிய கவிதை விளக்கியிருக்கும். பூக்காரி கவிதையிலும் மழை நேரம் வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சோகசித்திரமாக.
அம்மழை நேரக்காட்சி மாபெரும் வாழ்க்கை உண்மை ஒன்றை சுட்டுவதற்காகவே காட்டப்படுகிறது.
வாழ்க்கை பலாத்கார மயம் ஆகிவிட்டது. போட்டி, பொறாமை, சண்டை, சாவுதான் எங்கும் நடம் புரிகின்றன. அவற்றிடையே அன்பு, அகிம்சை என்கிற போதனை எடுபடுவதில்லை. வாழ்க்கைச் சந்தையிலே இத்தெய்வக் குரல் விலை போவதில்லை. மழை நேரத்தில் ஜாதி மல்லிகையைக் கூவி விற்பனை செய்ய முயலும் பூக்காரியின் பொங்கும் குரல் மதிப்பிழந்து போவது போல்தான் இதுவும்.

‘சாரலின் கடுஞ் சினத்தில்
பூ மோகம் ஆடவில்லை,
பூக்காரி குரலினொடு
கூடிற்று மழையின் கண்ணீர்’

அதே மாதிரி ‘ஊரெங்கும் விஷப்புகை, வானெங்கும் எஃகிறகு, தெருவெங்கும் பிணமழை பீரங்கிக்குரல்’ பேசுகிற உலகச் சூழ்நிலையில் அன்பும் அகிம்சையும் பேச முற்படும் ‘ஆதிக்குரல்’ அமுங்கி விடுகிறது.
எனினும், கவி நம்பிக்கையை இழந்து விடவில்லை. பிச்சமூர்த்தியின் கவிக்குரல் நம்பிக்கை வறட்சியோடு தொனிப்பது அல்ல.

(உலகத்தார்) ருத்ரனின் வெறிக்கூத்தில் கடுமோகம் கொண்டுவிட்டார்.

‘காமனை எரித்த ருத்ரன்
கண்சிமிட்டில் தணிந்து போவான்.
அன்பே சிவமாவான்
மங்கலமாய் மலர் தருவான்;
வேண்டுவோர் வாரீர்
வாங்குவோர் கூடீர்!

என்ற குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்படி செய்கிறார்; ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி கூறுகிறார்:

‘எஃகிறகின் உயரம், தெய்வக்குரல் ஏறவில்லை’ என்றாலும் என்ன!

‘நெஞ்சுடையாக் கனவுத் தெய்வம்
கூவுதலைக் குறைக்கவில்லை
அன்பே சிவமாவான்
மங்கலமாய் மலர் தருவான்…

என்று நம்பிக்கை வெளிச்சம் தரமுயன்றிருக்கிறார் கவிஞர்.
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. துன்பத்தில் சலிப்புற்ற மனம் இன்பத்துக்கு ஏங்குவது இயல்பு. அப்படி ஆசைப்பட்டு இன்பத்தை நாடுகிறபோது அது துன்பத்தை எதிர்பாராதவகையில் அழைத்து வந்து விடுகிறதே! இந்த உண்மையை வர்ணிக்கிறது ‘எமனுக்கு அழைப்பா!’ என்ற கவிதை.

வெப்பத்தில் வெம்பி வதங்கிய கவி ஈரத்திற்கேங்கி வருணனை வேண்டினார்.

கருணை பிறந்தது:
மழை முகில் மிதந்தது.
நெஞ்சத்தில் குளுமையின்
ஊற்றுக்கண் வழிந்தது,
அனல்பட்ட அறையினில்
தளிர் முகம் கண்டது.

இன்பம்தான். கூடவே, எறும்புப் பட்டாளம் புகுந்தது. பாச்சைகளும் பல்லிகளும் வந்தன. ஈசல்கள் பறந்தன. பல்லிகள் ஈசல்களைப் பிடித்துத் தின்றன. கவியின் சிந்தனை விழித்துக் கொள்கிறது இப்போது-

சித்தத்தில் தூண்டில்முள்
சுருக்கென்று தைத்தது,
ஈரத்திற் கேங்கினால்
எமனுக்கு அழைப்பா!
இன்பத்தை நாடினால்
துன்பத்தின் அணைப்பா?

பிச்சமூர்த்தியின் இயற்கை வர்ணனைகளும், அவர் கையாளும் உவமைகளும் புதுமையாய் நயமாய் மிளிர்வன என்பதை அவரது சிறுகதைகளைப் படித்தவர்கள் உணர்ந்திருப்பர். இச்சிறப்புக்களை அவருடைய கவிதைகளிலும் காணமுடிகிறது.

‘சித்திரைச் சூரியன்
செஞ்சூலம் பாய்ச்சலால்
ஆற்று மணல் வெள்ளம்
அனலாகக் காய்ந்தது,
பத்தரை மாற்றுச் சொர்ணப்
பொடி போல ரவி
ஏற்ற மணல் காடு
அங்கங்கே மின்னிற்று.
‘மின்னல்கள் சிரித்து
மேகத்தைக் கொளுத்தின;
கூதலெனும் நாகம்
குடையோடு சீறிற்று.’

‘பேணாது பொங்கிய கவிஞன் கனவைப் போல், எழில் மண்டித் தூங்கும் விரிசடை மரங்கள். நாணாத பச்சைக் கை நீண்டு பரவல் போல் வானப் பகைப்புல சித்திர மூங்கில்.’
‘பல்லற்ற பாம்பைப் போல நெளிந்து வரும் நல்நெருப்பு. சூல் கொண்ட யானையைப் போல் அசைந்தாடும் அலைகள்.’
‘காலையின் கதவுகள், கிழக்கில் திறக்கவும், ஒளியாற்றில், செம்மேக மாதுகள் குளித்தனர்’- இத்தகைய இனிய உவமைகளையும் உருவகங்களையும் பிக்ஷுவின் கவிதைகளில் மிகுதியாகவே காணலாம்.
மழைக்கால இனிமைகள், அழகுகள் பற்றிய பலரகமான வர்ணனைகள் அவரது கவிதைகளில் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறேன். ‘வேட்கை’ என்ற கவிதையில் இப்படி ஒரு படப்பிடிப்பு-

மழைநாளின் இருட்கால்
விளையாடும் வேளை
விந்தையாய் மரமெல்லாம்
வழியை மறித்தன.
மின்பாயும் வானமும்
வெளியு மெல்லாம்
காட்டேறி ஊர்வலத்தைக்
காட்டும் நேரம்.

ஒளிவேண்டும் என்று வேட்கை கொள்ளும் சில மனநிலைகளை அழகாகக் கூறும் கவிதையில் இவ்வர்ணனை வருகிறது.
வாழ்க்கையின் துன்பங்கள், மங்கு பொன் மாலை; நாட்களின் நோய்கள். தெறித்தோடும் நேரம். செல்வரும், ஏழைகளும் சினிமா பார்ப்பதில் இன்புற்றிருக்கும் வேளை. திடீரென்று படம் அறுந்து போகிறது. அப்படி இருளடையும் போது மக்கள் தழல் வீசக் கூவுகிறார். ‘அட! போடுங்கள் வெளிச்சம்! போடுங்கள் வெளிச்சம்!’
மழை இருட்டில், உழைப்பு முடிந்து வீடுவரும் பெண்கள், புன்னிருளால் வழி விழுங்கப்பட்டிருப்பது கண்டு அல்லலுறுகிறார்கள்.
பாதையைப் பாம்புபோல் அறியும் கால்கள், அடி அடியாய் முன்னேற அவர்கள் வெருண்டு சொல்வது; ‘நொடி நேரம் வெளிச்சம், வழிகாட்ட வேண்டும்; வழிகாட்ட வேண்டும்.’
சீக்கின்றி காக்கை போல் திரிந்து, எஃகைப் போல் தசையுடன் உழைத்து, கால் கஞ்சிக்கு வழிதேடி வாழ்ந்து வந்த ஏழை, கண்ணொளி இழந்து குருடானான். கடவுளை எண்ணிக் கதறுகிறான்; ‘கண்போன பின்னர் உயிர் மட்டும் எதற்கு?’ சுற்றத்தின் சுமையைத் தாங்க; ஒளி பின்னும் ஈவாய். அன்றேல் உயிரின்று கொள்வாய்.’

வெய்யிலின் செதில்கள் போல்
மான் புள்ளி காணுது,
வேலியில் சட்டைபோல்
கொக்குகள் தோணுது.
ஓயில்நடை
போடுது வாலாட்டிக் குருவி
சோலையை உருக்குது
கருங்குயில் வீணை
மலைக்குகை மூலையில்
வாயைப் பிளக்குது.

இச்சூழலில் விலையற்ற ஒளியும், பருவத்தின் இனிப்பும், உள்ளத்தைத் தொட்டு உணர்வெழுப்பும் மலரும் பிறவும் அர்த்தமற்றனவாய் தோன்றுகின்றன பற்றற்ற யோகிக்கு. அவனுடைய வேட்கை, அமுதொளி அடைவது என்றோ? என்பதுதான்.
இனிமை, எளிமை, உணர்வு, ஓட்டம், அழகு, கருத்தாழம் ஆகியவை நிறைந்த கவிதைகள் பல இயற்றி வெற்றி கண்ட பிச்சமூர்த்தி நீண்ட கவிதைகள் (சிறுகாவியம்) படைக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டார். கதையை அடிப்படையாகக் கொண்டு தீட்டப்பட்ட இச்சொல் ஓவியங்களுக்கு அவர் பழைய நம்பிக்கைகள் அல்லது கருத்துக்களையே கரு ஆக அமைத்துக் கொண்டிருக்கிறார்.
மேகங்களைக் குடங்களில் பிடித்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். மலை வாசிகள் என்றொரு பழங்கதை மீது எழுந்தது; மழை அரசி காவியம், கருப்பொருள் எப்படி இருப்பினும், அந்நெடுங்கவிதை அழகும் புதுமையும் கலந்து மிளிரும் இலக்கியப் படைப்பு ஆக உருவாகியுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

மழை இல்லை. குடியானவர்கள் வருந்துகிறார்கள்.

பாழாகப் போச்சு மானம்,
கடவுளுக்குக் கண்ணைக் காணோம்,
வைத்த பயிர் வாழவில்லை
நட்ட விதை முட்டவில்லை
மல்லிகைப்பூ மலரவில்லை.
கிணற்றிலே சரளைக்கல்லு
குளத்திலே மண்ணுத்திட்டு.

இந்த நிலை மாறுவதற்காக பூசை முதலியன செய்தும் பயனில்லை. மழை பெய்யவில்லை. கடலில்கூட மழை அரசியைக் காணவில்லை என்ற குழப்பம் ஏற்படுகிறது. குமுறுகின்ற அலைகளைப் பார்த்து ஒரு அலை கூறுகிறது; ‘பரிதி என்னும் பேரரசன் காதல் வெறியோடு கன்னிகையைத் தொட்டான். எதிர் வெறியுடன் மழை அரசி உடன்போய்விட்டாள்.’
அதைக்கேட்ட அலைகள் போர் முரசு கொட்டின. பரிதியிடம் பாய்ந்தன. அவற்றின் போக்கு கவிதையில் அழகுற அமைந்துள்ளது.

அலைகளின் பச்சை உடல்
இரும்பைப் போல கருக்கலாச்சு,
நீர்ப் பாழாம் நெடுங்கடலில்
நுரைமாலை குலுங்கலாச்சு
சூல் கொண்ட யானையைப் போல
அசைந்தாடும் அலைகளெல்லாம்
வெறிக்கூத்தைத் தொடங்கிவிட்ட,
அண்டங்கள் இற்றுப்போக,
வான்முகடு விரியும்படி
அணிவகுப்பில் அலைகள்
பரிதியிடம் பாய்ந்து சென்று
பாய்ச்சிவிட்ட வெம்மொழிகள்.

பவளமலர் அரியணையில் பேரழகி காணாததால் ஏற்பட்ட குழப்பங்களை விவரித்து, குதிரைகள், யானைகள், பல்லக்குகள் கடல்வாசல் கடந்ததில்லை.

கற்பரசி மட்டும் எங்கள்
காவல் கடந்து விட்டாள்.
அரிசி களவான பின்னர்
உமியைப் போய் பேசுவானேன்?
திருட்டு வெளியான பின்னர்
திரை மறைவு தேவை உண்டோ?

என்றெல்லாம் அறிவித்து, ஒவ்வாத உறவென்றாலும் ‘மாமிக்கடல் மாளிகைக்கு மறுவீடு வந்திடுவீர்’ என அழைத்தன அலைகள்,

ஆனால் ரவி சூடாகச் சொல்லிவிட்டான்.

மான்வேட்டை ஆடும்
இளவரசன் நானன்று,
பேதையரை வலைவீசி
விழியுருட்டும் வீணனன்று;
உயர்குலத்துக் கோர் அரசன்
உயிர் நோன்பில் உயிர்ப்போன்
எண்ணற்ற மண்டலங்கள்
தோன்றி நின்று மாறத்
தூண்டி வரும் பெருஞ்சோதி
தூங்காத எழில் விளக்கு

கனப்பாரம் பெற்றுவிட்ட தனக்குக் காதலுக்கு ஏது நேரம்? மழையரசியிடம் மையல் என்பது வெறும் கவிக்கனவுதான் என்றான். பிறகு, பூம்பாவை கொதிக்கும் கதிர் ஒன்றில் ஒட்டிக் கொண்டு காதலுரையோடு வந்தாள்; மேகத்துடன் மலைக்குச் சென்றாளாம். செந்தழல் சிம்மாதனத்தில் சாம்பல் கூடக் காணமாட்டீர் என்று கூறி அனுப்பிவிட்டான்.
கடல் அலைகள் மாரிப்பெண்ணை மலைகளிடம் அனுப்பின. மழை ராணி வேடர் வலை சிக்கிவிட்டாள்: அவர்கள் நோன்பிலே பட்டிடுவாள் என்று கேள்விப்பட்டு, மாரி வேடர்களைப் போய்க் கெஞ்சினாள். வேடர்களோ-

யானைவாய்க் கரும்பை நீங்கள்
மீட்டும் ஆடப் பார்க்கிறீர்.
எரிந்துபோன இறகு சூடி
எழிலிலேறப் பார்க்கிறீர்,
பாம்புரிக்கும் வெண்சட்டை
செடிகளிலே ஆடும்,
பொன்னுடலப் புதுப்பாம்பு
பூமியிலே மின்னும்
பாம்பைவிட்டுச் சட்டைக்காக
அழுவதுண்டோ சொல்லு!
அமுதகான மழை அரசி
அண்டத்திலே முளைப்பாள்,
அல்லி மலர்க் கால்சிலம்பு
அகிலமெங்கும் இசைக்கும்

என்று கூறிவிட்டனர்.

இதைக் கேட்டு கடல் அலைகள் சீற்றம் கொண்டன. காவியத்தின் முடிவாக வரும் இப்பகுதி படித்து ரசித்து இன்புறவேண்டிய அருமையான கவிதைப் படைப்பு ஆகும்.

சினம் மிகுந்த கடல் திரைகள்
வானளவாச் சீறின
கருமை மிகுந்த விஷத்துடனே
வானைப் போய் பிடுங்கின,
காற்று ஒன்று கூவிக்கொண்டு
உலகை வளையம் வந்தது
கடற்கரை மணல்களெல்லாம்
சுழன்று சவுக்கை எடுத்தன.
செம்படவக் கொண்டல் வந்து
வானில் வலைகள் வீசிற்று
உலகை ஏற்றும் ஒளிகளெல்லாம்
மீன்களைப் போல் சிக்கின.
மண்ணும் விண்ணும் ஒன்றதாக
மழையின் தூதர் வந்தனர்.
கருப்புக்கொண்டல் வானை வளைத்து
வெளியைத் தழுவிக் கொஞ்சவே
இடிச்சதங்கை மனத்தைக் கவ்வ
அசைந்து ஆடிக் குலுங்கவே;
மின்னல் பெண்கள் பிடித்த கொடிகள்
வெளியில் ஒயிலாய்ப் பறக்கவே
வந்தது பார் மரகதத்தேர்
விழுந்தது பார் மழைத் துளி!
மாயத் தேரின் மேலடுக்கில்
வீற்றிருந்த மழை அரசி
புன்சிரிப்பை அள்ளிவிட்டாள்
பூர்ணிமையாள் போதை போல.

கடலலைகள் நாணித் தலை குனிந்தன. நுரை மலரை மாலை கட்ட கடலுக்குள் குனிந்தன. குடியானவர்கள் நெஞ்சத்தில் பால் ததும்பியது.
கர்ண பரம்பரைக் கதைதான் என்றாலும் கவிஞரின் படைப்பாற்றலும், கற்பனை வளமும், சொல்லாட்சியும் ‘மழை அரசி’ காவியத்துக்கு ஜீவனும் எழிலும் சேர்த்துள்ளன.
‘சாகாமருந்து’ என்ற நெடுங்கவிதையின் கருவும் பழமையான சிறு விஷயமே.
மரணம் பற்றிப் பேசுகிறார்கள் சிலர். ‘மேகத்திலோர் வர்ணம், நீரிலோர் குமிழி, காற்றிலோர் அசைப்பு, கனவிலோர் சிரிப்பு, வாழ்வு இதுவேயாகில், வாழவும் நாம் வேண்டாம்’ என்கிறான் ஒருவன்.
பொன்மலர்த் தேனில் சாகாமருந்து இருப்பதாகக் கனவு கண்டேன் என்று வர்ணிக்கிறான் மற்றொருவன். அதை நாம் எப்படி அடைவது என்று ஜனங்கள் கேட்க, அவன் கனவை மேலும் விளக்குகிறான். ஒரு ஞானி மட்டும் ‘வெளியிலே இல்லை; சென்னி உச்சி நறுமலரில் அமுதம் உண்டு’ என்றார்.
மலைமேல் தேடிச் சென்றவர்கள் சோமச் செடியைக் கண்டார்கள். சோமபானம் செய்து பருகி மகிழ்ந்தார்கள். காடுகளில் தேடி அலைந்தவர்கள் அபினி, கஞ்சா, தென்னை மரங்களின் கள் ஆகியவற்றைக் கண்டு களிப்புற்றார்கள்.
‘இவையே சாகா மருந்து. தவித்திடுதல் வேண்டாம் தாண்டி விட்டோம் காலம்’ என்றார்கள்.
இருந்த இடத்திலேயே இருந்த ஞானி சொன்னார், நாளைக் காலையில் உண்மை புரியும் என்று.
மறுநாள் மயக்கம் தெளிந்தது. நாட்கள் ஓடின. வழக்கமான தொல்லைகள், சாவு எல்லாம் இருந்தன. ஜனங்கள் அறிவு புகட்டி அஞ்ஞானம் அகற்றும்படி ஞானியை வேண்டுகிறார்கள். அவர் வாழ்வின் இயல்பு பற்றிப் பேசுகிறார். அது மாந்தருக்குப் பிடிக்கவில்லை. போதைப் பொருள்களை விரும்பி உண்கிறார்கள்.

போதை உண்டால் நினைவு சாகும்,
நினைவு போனால் காலனேது?

இயற்கைதந்த அமைப்புடன், காலத்தைக் கடக்க முடியாது. ஆகவே, இப்பொருள்களால் உதிரத்தை மாற்றுவோம். காலப் போக்கில் உதிரம் மாறி, நவமனிதன் தோன்றுவான். நமனழைப்பு நண்ணிடாது. நமனுக்கு அன்று வேலை இல்லை. அழிவை வெல்லும் அமுதம் நினைப்பை அழிக்கும் அமுதம்தான் என்று ‘பாதை கண்டவன்’ தெளிவு படுத்துகிறான்.

ஞானி உலக இயல்பினை எண்ணிக்கொள்கிறார்.

ஒளிதோன்றச் செய்த அன்று
இருள் தோன்றச் செய்தாய் ஏனோ?
உருத் தோன்றச் செய்த அன்று
நிழல் தோன்றச் செய்தாய் ஏனோ?
உண்மையை அறிவில் நாட்டிப்
போலியும் ஏன் சமைத்தாய்?
உள்ளத்தில் அமுதம் காட்டி
உலகினில் நறவேன் வைத்தாய்?

என்று ஈசனை நினைவு கூர்கிறார்.
‘அக்னி’ என்பது நெருப்பின் இயல்பைக் கூறுகிறது.
ஆதிகாலத்தில் அரணிக் கட்டைகளின் உதவியில் தீபிறந்தது. அக்கட்டைகளையே தின்று தீர்த்தது.
இடைக்காலத்தில், மனிதர் ‘சிக்கிமுக்கிக் கல்’ மூலம் நெருப்பை உண்டாக்கினார்கள். தீமரங்கள், காடுகளை நாசமாக்கின.
நடைக்காலம், தீக்குச்சி, மின்சாரம் தோன்றின. சொன்ன பேச்சைக் கேட்கும் தீ என்று மாந்தர் கருதினர். ஆனால், தீக்குச்சித் தொழிற்சாலையில் தீ: மின்சாரத் தொழிற்சாலையிலும் தீ அக்னி பகைவனாகவே இருந்தது.
அரணிக் கட்டைகள், தீ, பத்துவிரல்கள், மனிதர்; அரணியும் சிக்கிமுக்கியும் இவற்றின் உரையாடல் போல் இந்நெடுங் கவிதை எழுதப் பட்டுள்ளது. முடிவாக தீ சொல்கிறது-

என்னிடமே பகை கொண்டு
ஏற்றிவிட முயன்றிட்டாலும்
நொடியில் நான் எரிவேன், அணைவேன்
நிமிஷத்தில் சாவேன். பிறப்பேன்,
வாழ்வென்றெனக் கொன்றில்லை
தாழ்வென்று ஏதுமில்லை,
இளமையுடன் இருப்பேன் என்றும்
எரியும் தொழில் தலை எழுத்து
நட்பென்னும் உறவிலுண்டு
பகைமையின் போல் விதைகள்
கட்டுதிட்டக் கவனத்தோடு,
காதலித்தால் என்னை நீங்கள்,
கால் செருப்பாய் சேவை செய்வேன்;
குழந்தை போல் சுகமளிப்பேன்;
கவனமின்றி, போட்டு விட்டால்
பிரளயத்தீ படமெடுப்பேன்;
இயற்கை என்னும் எங்கள் வம்சம்
எளிதென்று எண்ண வேண்டாம்,
நேசம் வேண்டாம் பகைமை வேண்டாம்,
கவனித்தால் சேவை செய்வோம்.

கருத்துக்காகத்தான் இக்கவிதை.

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள். அறிவொளியும், உணர்வின் ஓட்டமும், அழகு நயங்களும் செறிந்து, ரசனைக்கு இனிய விருந்து ஆகும் இலக்கியப் படைப்புகள் அவை.

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்””

Comments are closed.