வெற்றிலை ரகசியம்/கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்


ஆசிரியர் கலைமகள்………………..‌‌

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இந்தியா இந்தோனேஷியா மலேசியா இலங்கை ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது வயிற்றுக் கோளாறு ,ஜீரண கோளாறு போன்றவற்றை நீக்கக்கூடியது வெற்றிலைச் சாறு!!

கும்பகோணம் வெற்றிலை தமிழகத்தில் சிறப்பிடம் பெறுகிறது. ‌தேனி மாவட்டத்தில் சின்னமனூர், நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலம் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் போன்ற பகுதிகளில் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது.

வெற்றிலை, வெத்திலை என்ற சொல்லே பெரும்பாலும் வழக்கில் இருகிறது. சங்க இலக்கியங்களில் இவ்விலை ‘தம்பலம்’ ‘திரையல்’, ‘அடை’, ‘நீடுகொடி இலை‘ எனக் குறிக்கப்படுகிறது!

தமிழர் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. வெற்றிலையின் காம்பைக்கிள்ளி நீர் வார்த்து, இறைவனுக்கு நிவேதனம்(வெற்றிலை பாக்கு பழம்)செய்யும்போது சமர்ப்பிக்கப்
படுகிறது.

திருமணம் உறுதி செய்வதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலைப் பாக்கு கொடுத்துதான் திருமணத்தை உறுதி செய்கிறார்கள். எனவே திருமணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது வெற்றிலை.
திருமணத்தின்போது மணமகன் மணமகள் இருவருக்கும் மணமகளின் சகோதரன் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி பாக்கு வைத்து மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது!!

தருமர் மகாபாரதத்தில் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம் பூலத்தை கிருஷ்ண பரமாத்மா பெற்றுக் கொண்டார்.

உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாமே எம்பெருமான் அருளியது என்று திவ்ய பிரபந்தத்தில் பாடுகிறார் நம்மாழ்வார்.கூத்தனூரில் குடி கொண்டுள்ள சரஸ்வதி தேவி தன் வாய்த் தாம்பூலத்தின் சாறை அளித்து ஒட்டக்கூத்தரை கவியாக்கியதாக ஒரு வரலாறு உண்டு.

அசோக் வனத்தில் சீதை இருந்த காலத்தில் “ராமனுக்கு யார் *வெற்றிலை, பாக்கு மடித்துக் கொடுப்பார்கள்?” என்று தனது இயலாமையை எண்ணி நொந்துபோவதாக ஒரு பாடல் கம்பராமாயணத்தில் உண்டு!

“அருந்தும் மெல் அடகு ஆர் இட
அருந்தும் என்று அழுங்கும்“
(இராமாயணம் காட்சிப்படலம்-15)

கலைமகள் மாத இதழில் சித்தர்களைப் பற்றியும், ஜோதிட சாஸ்திரங்களைப் பற்றியும் நாரணன் என்கிற பெயரில் என்னுடைய நண்பர் சங்கரநாராயணன் அவர்கள் கட்டுரைகளை எழுதி வந்தார். ஜோதிடம் பார்க்க யாரிடமும் இவர் பணம் வாங்கியது இல்லை!

ஜோதிடம் பார்க்க வரும் பொழுது பழம் அல்லது வெற்றிலையை வாங்கி வரச் சொல்லுவார். வாங்கி வந்த வெற்றிலையில் உள்ள நரம்புகளை வைத்தும் இவர் ஜோதிடம் சொன்னது உண்டு. என்னுடைய இனிய நண்பர் குடந்தை கீதப்பிரியன் (தாய்) அவர்கள் இவரை வெகுவாக ஸ்லாகித்து என்னிடம் பேசியது உண்டு!

கீழாம்பூர் கிராமத்தில் அந்தக் காலத்தில் நாராயண சாஸ்திரிகள் என்று ஒருவர் இருந்தார். இவருடைய தகப்பனார் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்தவர். தாயார் கீழாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். வெகு காலம் இவர் கீழாம்பூரில் தான் வசித்து வந்தார். நகைகள் திருடு போனாலும் அல்லது ஏதாவது பொருட்களைக் கண்டுபிடிக்காமல் போனாலோ இவரிடம் சொன்னால் போதும். வெற்றிலையைக் கையில் எடுத்து அதில் மூன்று உத்தரணி ஜலம் விட்டு பின்பு அதைக் கையால் தேய்த்து அதைப் பார்த்தபடியே பொருள்கள் எங்கே இருக்கிறது என்பதைச் சொல்லிவிடுவார். இந்த வித்தையைக் கற்றவர் இவர். இது ஒரு தேவ ரகசியம் என்று என் ஊர் காரர்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.