புஷ்பா விஸ்வநாதன்/மூட்டு புதிது

நிமிர்ந்த நன்னடையும்
நேர் கொண்ட பார்வையும்
வளைந்த மென்னடையும்
வலிகொண்ட பார்வையுமாய்
மாறிப்போனபின்
வயதாகிப் போன
வலது முழங்கால் மூட்டை
“மூட்டு புதி”தென
மாற்றி வைத்திட
மூட்டறுவை சிகிச்சைக்கு
மதுரை வந்தேன்.
அழகர், மீனாட்சி
அருளாசிகளுடன்
சுற்றமும் நட்பும்
வாழ்த்தொலி முழங்கிட
அறுவை சிகிச்சை
அறைக்குள் நுழைந்தேன்
மயக்கம் தெளிந்து
கண்விழித்து பார்த்தால்
வலி வலி வலி வலி
வலி வலி வலி வலி
முதுகில் ஒரு‌குழாய்
மூத்திரத்துக்கொரு குழாய்
ஊசி மருந்துக்கென
கையில் ஒரு குட்டிக்குழாய்
கைகால் பரப்பி
குழவி போல் கிடந்த என்னை
உடல் துடைத்து உணவூட்டி
ஊசி மருந்து தவறாமல் கொடுத்து
பாட்டி பாட்டி என பாசமுடன் அழைத்து
செவிலியர் சொன்னது
வயோதிகம் என்பதே
இரண்டாம் குழவிப்பருவம்தான்

வலி மிகுந்த சிகிச்சை இது
வலியைப் பொறு
வாக்கருடன் நடைபழகு
கால் நீட்டிப் பயிற்சி செய்
விரைவில் குணமென
மருத்துவ மகன் சொன்னான்.
ஆம்.
நம்புகிறேன் நானும்
நம்பிக்கைதான் வாழ்க்கை!!!

2 Comments on “புஷ்பா விஸ்வநாதன்/மூட்டு புதிது”

  1. அறுவை சிகிச்சக்குப் பின்னும் வலி இருக்கும், பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொன்னார்.
    அப்படியெனில் அறுவை சிகிச்சை வேண்டுமா?
    யோசிக்க வேண்டிய விஷயம்.

Comments are closed.