சொல் புதிது எனும் குழுமத்தில்/தஞ்சாவூர் ஹரணி

வணக்கம். எழுத்தாளர் திரு அழகிய சிங்கர் அவர்கள் ஓராண்டாக நாள்தோறும் புலனத்தில் சொல் புதிது எனும் குழுமத்தில் மாலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் அவரவர் கவிதைகளை ஒலிப்பதிவாக ஒலிக்கச்செய்தார். திரு அழகிய சிங்கர் எதைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து சிரத்தையோடும் வெகு ஆர்வத்தோடும் விடா முயற்சியோடும் செய்வார். அவ்வகையில் இணையக் கவிதைகள் எனும் தலைப்பில் ஒவ்வொருவர் கவிதைகளையும் தொகுத்து முதலில் தொகுதி 1 என வெளியிட்டு. அதில் கவிதை வாசிததோருக்குத் தலா ஒரு பிரதி இலவசமாக அனுப்பிவைத்தார். தற்போது இரண்டாவது தொகுதி கொண்டுவந்து அனுப்பியுள்ளார்.
நாள்தோறும் கவிதைக் கூறுவது இனிய அனுபவமாக அமைந்தது. தொகுப்பிற்காக திரு அழகிய சிங்கர் அவர்களுக்குப் பேரன்பும் நன்றியும். நாளும் கவிதைமனத்தைத் தக்க வைக்கத் தூண்டலாக இருந்ததும் புதிய அனுபவமாக அமைந்தது. நவீன விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளார். ,
தொகுப்பிலிருந்து சான்றுக்குச் சில கவிதைகள்..

அடிதான்..

 கவிஞர் வளவ.துரையன்

ஒரே ஒரு அடிதான்/மாவலியை அன்று/அதல பாதாளத்தில் அழுத்தியது.
ஒரே ஒரு அடிதான்/எல்லார் முதுகிலும் பட்டுத் தெறித்தது.
ஒரே ஒரு அடிதான் வண்டி மாட்டை/அப்பக்கம் திருப்பியது.
ஒரே ஒரு அடிதான்/கட்டையை இரண்டாகப் பிளந்து காட்டியது.
ஒரே ஒரு அடிதான்/இன்று/அடித்த ஆசிரியரை/வீட்டிற்கு அனுப்பியது.

0000000

மலங்களாலும் விலங்குகளின்/சாணங்களாலும் நாற்றமடிக்கும்/வற்றிய குளங்களை விட்டுத்/தவளைகள் எல்லாமும்/கரைக்கு வந்துவிட்டன.

ஒவ்வொரு தவளையும்/ஒவ்வொரு குரலை எழுப்பி/நிலத்தைச் சிதைக்கின்றன.

ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல/என்று அவை குளங்களின் சீரழிவிற்கு/இன்னொரு தவளையைக்/குரலெழுப்பிக் குற்றஞ்சாட்டுகின்றன.

தவளைகளின் அருவருப்பான/குரல்களை இசையாக/குரல்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன/நிலம் அமைதியாக உள்ளது/சரியான தீர்ப்பை எழுதுவதற்கு.

தஞ்சாவூர் ஹரணி

0000000000000000000

சண்டை… கவிஞர் அழகிய சிங்கர்

என்னுடன்/சண்டைக்கு வருகிறார்கள்/நான் ஒதுங்கிப் போகிறேன்/நான்/யாருடனும் சண்டைக்குப்/போவதில்லை வலிய/சண்டை போடுவதில்/திறமை வேண்டும்/சிலருக்குத்தான் அமையும்/சண்டை முடிந்தவுடன்/அதைப் பற்றிய/நினைப்பு இருக்கக்கூடாது/அதைப்பற்றி/நினைத்துக் கொண்டிருந்தால்/சண்டைக்குத்தான் வெற்றி/நாம் தோல்வி அடைந்தவர்களாக/மாறிவிடுகிறோம்/மனிதர்களென்றால்/சண்டை/போடாமலிருப்பார்களா?

0000000000000

வெண்பனி பொழிவு.. சசிகலா விசுவநாதன்

தண் மலர் மழை இன்று/கண் நிறை வெண் மலர்/பண்பாடும் மனதிற்கு/தேன் துளி/சத்தம் தரும்/சப்தமின்றிச் சங்கீதம்/சலியாமல் சிலையென நான் பார்க்கையிலே/சாலை முழுவதும் வெள்ளி விரிப்பு/வண்ண வண்ணமாய் மகிழ் ஊர்திகள்/மென் திரை அலை போல/மனம் துள்ள கையொலித்து/மகிழ்ந்தேன்/சிற்றில் கட்டி மகிழும்/சின்னஞ்சிறு சிறுமி போல.

0000

.