மோகன்ஜி/அங்கிங்கெனாதபடி….

‘இந்த கெடிலநதி மேம்பாலத்தின் மீதுதானே வெய்யிலில் நடந்து போனாள் ஜெயகாந்தன் கதையில் ஒரு பாட்டி’ மனோகர் தன்னை வினவிக் கொண்டான். ‘ஐய்யமாரு வீட்டுப்பாட்டி.. வேகாத வெய்யிலில் நடந்து போகும், புள்ளை வீட்டுக்கு..

ஜட்காவண்டியின் பக்கப்பலகைக்கு தோதாக முதுகை சரி செய்து கொண்டான். குதிரை வண்டிக்காரன்பின் மனோகரும் அவனையடுத்து அவன் தாயார் துளசியம்மாவும் அமர்ந்திருந்தார்கள். வேறு சந்தர்ப்பமாயிருந்தால் ‘ரெண்டுமூணு மைல்தூரத்துக்கு ஜட்கா கேக்குதா?’ என்றுதான் அம்மா திட்டியிருப்பாள். ஆனால் இன்று ஏதும் சொல்லாமல் ஏறிக் கொண்டாள்.
அம்மா அப்படி தன் பேச்சை அங்கீகரித்து அமர்ந்தது மனோவுக்கு சந்தோஷமாய் இருந்தது. வெயிலால் இருக்கலாம், நாலுமாதமாய் சிமிட்டி பேக்டரியில் வேலை பார்க்கிறானே… அதற்கு அவள் தரும் கௌரவமாய் இருக்கலாம்.. எதோ ஒன்று. டவுன் ஹால் தாண்டி ஜட்கா சிறு ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தது. கிழட்டுக்குதிரையுத் கிழட்டு வண்டிக்காரனுமாய் நல்ல ஜோடிதான்.
‘தேருபாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே.. உன்னைத் திருடிக்கொண்டு போகட்டுமா பத்தினிக் பெண்ணே!’ என்று வவுட் ஸ்பீகரில் புதுப்பிளேட்டு ஒன்று எங்கோ அலறிக் கொண்டிருந்தது
இவளை ‘போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே’ன்னு திரும்ப வேண்டியிருக்குமோ என்ற நினைவும் வந்தது.. அந்த எண்ணம் தந்த சின்ன திகிலில் மனோவுக்கு வயிறு குழைந்தது.
“அம்மா! கொடுத்திடுவாங்க இல்லே?”
பின்னோடும் சாலையை வைத்தகண் வாங்காமல் வெறித்திருந்த துளசியம்மாளை மனோவின் கேள்வி கலைத்தது.
“என்ன கேட்டே?’ என்றவளின் குரல் வழக்கத்தைமீறிய கத்தலாய் வெளிப்பட்டது. அதிகநேரம் பேசாதிருந்து உள்வாங்கின குரல், சட்டென பதில்சொல்ல விழைந்ததின் சமனமின்மை அது.. ஒருமுறை
செருமிக் கொண்டாள்.
“இல்லம்மா… சாமியையெல்லாம் தந்திடுவாங்க தானே’ன்னு….
“தராம போயிடமாட்டாங்க… தருமஞாயத்துக்கு பயந்தவங்க தாம்ப் பா..”
“எப்படிம்மா கேட்கப் போறே? அதுவும் இவ்வளவு காலம் சென்னு.”
அதத்தான் ரோசனை பண்ணிகிட்டு வரேன்… பார்ப்போம் கவலைப்படாத மனோ”
“கவலையில்லை தான் …அம்மா இருக்கும்போது கவலையில்லை தான். லேசுபட்டவளா? எல்லோருக்கும் எவ்வளவு செய்திருப்பாள்? மறு வார்த்தை அவளிடம் சொல்லமுடியுமா? ஒரு பார்வையில், ஒரு ஹூங்காரத்தின் கார்வையில் அம்மா தன் கொடியை நாட்டி விடுவாள்.
அம்மா தனக்கென்று எதுவும் வைத்துக் கொண்டவளுமில்லை. ஒன்று வேண்டுமென்று ஆசைப்பட்டவளுமில்லை.அதனால்தானோ என்னவோ அவளுக்கு மரியாதை. ‘மஹாராணி’ என்று விளிக்கும் அப்பாவின் நையாண்டி நிஜம் தான். அவள் மஹாராணிதான். அந்தப் பாவிமனுசன் போனதிலிருந்துதான் கிரீடத்தை கழற்றிவிட்டு நடமாடுகிறாள். அப்பா போனபின்பு இந்த இரண்டு வருஷத்தில், இப்போதுதான் முறையாக திருச்சியைவிட்டு வெளியூர் வருகிறாள் … அதுவும் மனோ கரையாய்க் கரைத்து அரித்ததினால் தானே?
மனோவுக்கு தன் பல்லுபோன ஆயாவின் குரல் நினைவுக்கு வந்தது. அவள் சொல்லித்தான் அன்று பத்துவயசு மனோவுக்குள் வந்துபுகுந்தது இந்த ‘வீட்டுத் தெய்வம்’ சங்கதி.
‘எத்தன வருசத்து சாமிங்கடா பேராண்டி ! ஒரு முழத்துக்கு கொஞ்சம் மட்டம் ராஜேஸ்வரி தாயாரு. என்ன கண்ணு..என்ன மூக்கு… மூக்குத்தி வளையம், தண்டை கொலுசு முத்துபதக்கமின்னு பொளிச்ச தாயாரு.. தட்டுநிரம்ப சக்கரப்பொங்கலை படையலாப் போட்டுட்டு; சிரிக்கிறாடி.. சிரிக்கிறாடி’ன்னு பொங்கி அழுவாரு. உன் தாத்தா.. அம்மனுக்கு தொணையா கூடவே மடில அமர்ந்த ஜானகியோடு ராமரு, தனியா லச்சுமணன், மண்டிபோட்டு உக்காந்தமேனிக் தனியா அனுமாரு, அஞ்சாரு சாளக்கராம கல்லுவ, மொழையா லிங்கமொண்ணு, குருபாதுகை, வலம்புரி சங்கு, பாதரசத்துல பண்ணுன சுப்ரமண்யரு…அவரு பூஜையை முடிச்சாவுட்டு நானுதான் தொடச்சு வஸ்த்ரம் சாத்தி, பொட்டுவச்சு, புஸ்பம் போட்டு அதுகளை பொட்டியில வைப்பேன். வைக்கசொல்ல சுப்ரமண்யர எடுத்து கண்ணுல வச்சி ஒத்திக்குவேன். தண்ணுன்னு உசுரைத் தொடும் பெருமாளு.’
“ஏன் ஆயா சாமிங்களை எல்லாம் கடலூரு வைத்தியராண்டயே விட்டுட்டு வந்துட்டீங்க?”
அவள் சொன்ன சங்கடமும், பின்னே நடந்த சங்கதியும் இதுதான்
அப்போது மனோவின் தாத்தாவும் ஆயாவும் கடலூரில் வசித்தனர். உத்யோக நிமித்தம் திருச்சியில் மனோவின் அப்பா வசித்து வந்தபோதுதான், தாத்தாவின் கடலூர்வீடு ஒரு பகலில் தீப்பிடி முற்றுமாய் எரிந்து போன து.
தீக்காயங்களுடன் உயிர்நீத்த தாத்தா, பிள்ளை வீட்டோடு வந்துவிட்ட ஆயா, தாத்தாவீட்டின் அண்டையில் வசித்த தாத்தாவின் சிநேகிதரான வைத்தியரோடே தங்கிப்போன சாமிப்பொட்டி….
எரியும் வீட்டில் பாய்ந்து அந்தப்பெட்டியை மீட்டுவந்தபோதுதான் தாத்தா தீக்காயங்கள் பட்டாராம். இந்தக் களேபரத்தில் அந்த பெட்டியை மீண்டும் கொண்டுவரும் முயற்சி ஏனோ எடுக்கப்படவில்லை. சாமிக்கு நேரமில்லாத அப்பா, தாத்தாபோய் ஓரிரு வருடங்களே வாழ்ந்த ஆயா.உருண்டோடும் காலம்…
இத்தனைக்கும் ஆயாவின் காரியத்துக்கு வந்த வைத்தியர், சாமிப் பெட்டியை ஒருநடை கடலூருக்கு வந்து எடுத்து செல்லுமாறு அப்பாவிடம் சொன்னதும், அதுபற்றி அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டதும் மனோவுக்கு நிழலாடும் ஞாபகங்கள். அவ்வப்போது அவன் அம்மாவுக்கு நினைவுறுத்துவதும், அந்த நேரம்மட்டுமே இதுபற்றிப் பேசும் பெற்றோருமாகத்தான் வருடங்கள் நகர்ந்து கோண்டே இருந்தன.
அண்ணனுக்கும் அப்பா போன்றே சாமி விஷயத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால் மனோ அப்படியா ? நாள் தவறாமல் பக்கத்திலிருக்கும் பிள்ளையார் கோவில், வெள்ளிக்கிழமை வெக்காளியம்மன் கோவில் ஞாயிறு சமயபுரமென்று தன்வீட்டு பெட்டி சாமிகளை மானசீகமாய்க் கும்பிட்டுக் கொண்டிருந்தான். இருபத்துமூணு வயசு இளைஞன் மனோவுக்கு அவன் பாட்டன் ரத்தம் குங்கும வர்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. வேலை கிடைத்த இந்த நாலுமாசமாய்தான் மனோவுக்கு தனியாக டால்மியா புரத்தில் வாசம்… அண்ணன் தான் வந்து வீடுபார்த்து வச்சு, பக்கெட்டு, வாருகோல்லேருந்து முச்சூடும் வாங்கித் தந்தார்.
நேற்று மனோ திருச்சி வீட்டிற்கு வந்தபோது, அம்மாவிடம் சாமிப் பெட்டி பேச்செடுத்தான். அடுத்த இரண்டுநாளும் தனக்கு முறையாதலால், கடலூருக்கு போய் வந்துவிடலாம் என்ற போது சரி என்றவளை நம்பமுடியாமல் குதூகுலத்துடன் கட்டிக்கொண்டான். அன்றிரவே ரயில்பிடித்து ஒருவழியாய் கடலூருக்கும் பகலுக்கு வந்தாயிற்று. இன்னும் கொஞ்ச நேரம் தான்…
இந்த வீடுதாம்பா! நிறுத்து! ” என்ற அம்மாவின் குரல் மனோவை உலுக்கியது. வரும்போது வாங்கிவந்த மாம்பழங்களும், பூவும் இருந்த பையை கையிலெடுத்துக் கொண்டான்.
வாசலிலிருந்து கூப்பிட்டான். ஆளோடியில் நிழலாடியது..
“யாரு?”
‘அம்பிகே ! தாயே ! என் குரல் உனக்கு கேட்குதா ?’ என்று உள்ளுக்குள் அரற்றிய மனோவுக்கு இருப்புக்கொள்ளவில்லை.
“நான்தான் அத்தே! பட்டாளத்தார் மருமக.. துளசி..”
“அட்டா.துளசியா?வா கண்ணு.. எம்மாம் வருஷமாச்சு. சொகமர் யிருக்கியா? என்னாடி இது? நீயும் வாரிக் கொடுத்துட்டையா?” என்று வைத்தியர் சம்சாரம் கண்கலங்கினாள்.
படமாய்த் தொங்கும் வைத்தியரைப் பார்த்தபடி, தலையை மட்டும் ஆட்டினாள் துளசியம்மா . பழமிருந்த பையை கையில் கொடுத்தாள்
‘காப்பித்தண்ணி வைக்கிறேன் இரு” என எழுந்தவளை கையமர்த்தினாள் துளசியம்மா.
“நானு விரதம் அத்தே! பச்சதண்ணி பல்லுலபடாது. எம்மவனுக்கு காபி,டீன்னு பழக்கமில்லே”
“சரி… என்ன விஷயமா இம்மாந்தொலவு வந்தே கண்ணு? வாசலையடைச்சு தேராட்டம் கோலம் போடுவையே… இனி எப்பே கண்ணு அதைப் பார்ப்பேனோ…”
“அத்தே ! நேத்திக்கு விடிகாலம்புற சொப்பனம் அத்தே. எங்கவீட்டுசாமி ராஜேஸ்வரி… அதான் அத்தே உங்களாண்ட கொடுத்து வச்சிருக்கமே… அது மானத்துக்கும் மண்ணுக்குமர் நிக்குது… ‘எனக்கு ஒரு வாய் பானகத்துக்கு வழியுண்டாடி… எவ்வளவு நாளா நானும் பொட்டிக்குள்ளே மக்கி மழுங்குறது? எனக்கு பீடம்வச்சு விளக்கேத்தடி.. நெய்யிலே குளிப்பாட்டி சூடம் காட்டடி … வீட்டு சாமியையா தள்ளி வைக்குறே?”ன்னு சூலத்தை ஆட்டி ஆட்டி கலங்கடிச்சுபிட்டா அத்தே..அதான் கொண்டு போயிருவோமின்னு வந்தேன் .”
வைத்தியர் சம்சாரம் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் “அம்மாடி! நானு உங்க சாமியை குளிப்பாட்டுறதில்லைன்னானாலும் நாளுகிழமை வந்தா பெட்டிமேல பூப்போட்டு கும்பிடுவே சாமில்லாம் இன்னிக்கிருக்கட்டும்… நாளை பொங்கல் வச்சு படைச்சி அம்பாள அனுப்பிவைக்கிறேனே தங்கம் உன்னோடேயே.. இவ்வளவு காலம் ஆத்தா இங்க இருந்துட்டா இல்லையா?”
“நீங்க சொல்லுறது சரி அத்தே! ஆனா பாருங்க… நேத்தி விடிகாலம்புற அவ அடிச்ச கூத்துக்கப்புறம் பொட்டு தண்ளர் குடிக்கல்லே அத்தே ! கிளம்புறேன்.. கொஞ்சம் உங்க கையால சூடம்காட்டிட்டு, உங்க ஆசியோட அம்பாளைக் குடுங்க அத்தே..”
அம்மா தட்டிக்கொண்டு எழுந்தாள். அவ்வளவு தீவிரம் அவள் பார்வையில்.. மனோ வாயடைத்து நின்றான்.
அம்மாவும் வைத்தியர் சம்சாரமும் சமையல்கட்டு பக்கம் சென்றார்கள். மணியடிக்கும் ஓசை கேட்டது. சொல்ல இயலாத ஆனந்தமும் அமைதியும் மனோவை சூழ்ந்தது. அந்த அம்மாளை மனோவும் அம்மாவும் விழுந்து நமஸ்கரித்தார்கள். வைத்தியர் சம்சாரம் கண்கள்கசிய, “ஒரு கொறையில்லாம பெருங்குடியா வாழணும்” என்றாள். அவள் தந்த ஒரு கோணிப்பைக்குள் சாமிபொட்டியை வைத்து சணலால் அதன்வாய் கட்டப்பட்டிருந்தது.
வாசலில் காத்திருந்த ஜட்காவண்டியில் ஏறிக்கொண்டார்கள். அம்மாவின் மடியில் கோணிப்பை இருந்தது. அதன்மேல் ஒரு கையும் அம்மாவின் தோள் மேல் ஒரு கையுமாக மனோ மிதந்தான். பஸ் பிடித்து வந்தார்கள். அம்மாவின் கனவைப்பற்றி மனோவும் கேட்கவில்லை.. அவளும் சொல்லவில்லை.
மறுநாள் காலை அந்த கோணியைக் கண்ட அண்ணி பொரிந்தாள். “இருக்கிற அடைப்பாசாரம் காணாதுன்னு இதையும் வாரிகிட்டு வந்தாச்சா?” என்றாள்.
ஹாலில் ஒருமூலையில் கம்பளம் விரித்து, அந்தப் பெட்டியைத்திறந்து விக்கிரங்களை வெளியே எடுத்தபோது கரப்பான் பூச்சிகள் நெளிந்து விக்கிரகங்கள் பச்சைப்பூத்து தகரமாய்த் தோன்றியது. அவற்றின் இடுக்குகளில் கரப்புமுட்டைகள் பதிந்து கிடந்தன.
‘ஐயோ..ஐயோ’ என்று அரற்றிய அண்ணியிடம் மெல்லச் சொன்னான் மனோ.. “கவலைப்படாதீங்க அண்ணி! இவற்றை இங்கே அடைக்கமாட்டேன். என்னோடேயே டால்மியாபுரம் எடுத்துப் போய் விடுகிறேன். சரியா?”
மனோ கடைத்தெருவுக்குப் போனான். பூஜைதிரவியங்கள், பூ, வெற்றிலை, வஸ்திரம் சார்ந்த ‘நியூஸ்டைல் டெய்லர்’ஸிலிருந்து வெட்டிக்கழித்த புதுத்துணிகளின் துண்டு மீதங்கள் என வாங்கிவந்தான். ஐயரிடம் அபிஷேகம், பூஜைக்கு சொல்லிவிட்டு வந்தான்.
அரப்புத்தூள்,புளி,எலுமிச்சை,விபூதி கொண்டு விக்கிரகங்களை உள்ளங்கைகள் தோலுரியத் தேய்த்தான். பச்சை நெகிழ்ந்து.
பளபளப்பேறியது. பஞ்சலோகத்தின் தெய்வீகக் கலப்பு துலங்கியது மதியத்தூக்கம் கலைந்து அம்மாவும்அண்ணியும் கிணற்றடிக்கு வந்தபோதும் அவற்றுக்கு மெருகேற்றியபடி இருந்தான். அவனே தாமிரத்தாலும் செம்பினாலும் வார்த்த சிலையைப்போலே துளசியம்மாவுக்குத் தோன்றியது. துணி துவைக்கும் கல்லின்மீது ஒவ்வொன்றாய் வைக்கப்பட்ட விக்கிரகங்கள் வெய்யிலில் தகதகத்தன
ஆ.. ஆ.. கைப்பட்டா கண்ணாடிதான் ! ஒரே முங்கில் அத்தனை மண்ணையும் எடுக்கணுமா ? கொஞ்சம் கொஞ்சமாக செய்யக்கூடாதோ?” என்றாள் அம்மா. அடைப்பாசாரம் என்று முன்புசொன்ன அண்ணியோ வைத்தகண் வாங்காது பார்க்க மட்டும் செய்தாள்.
இரவில் அவனுக்கு ஜுரமடித்ததோ இல்லை வேக்காட்டி அடைந்து கிடந்த தெய்வங்களின் தொந்தமோ… மனோவுக்கு உடம்பு கதகதவென்றிருந்தது.
‘ஊர் திரும்பியவுடன் சாமிங்களை வைக்க நாலுதட்டு வைத்தி அலமாரி ஒன்று செய்யவேண்டும். தினம் ரெண்டுமுழம் பூவுக்கு பூக்காரியிடம் வாடிக்கை சொல்லி வைக்க வேண்டும். அம்மாவும் என்னோடு சிலநாள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அவளும் இந்த விக்கிரகங்கள் போல் அடைந்துதான் கிடக்கிறாளோ! அம்மாவை அனுப்ப அண்ணா ஒத்துக் கொள்வாரா?’
இந்த எண்ணவோட்டம் முடியுமுன்னமே ஒரு குவளை பாலூடன் அம்மா அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
“அம்மா ! ஒண்ணு சொல்லட்டுமா ?”
“சொல்லேன்…. இதைக்குடிச்சுகிட்டே..
“நீயும் என்னோடு டால்மியாபுரம் வந்து இரேன்… “
அம்மா சிரித்தாள்… “வந்துட்டா போச்சு. சரி…படு. காலை வேகமா எழுந்துடணும். ஐய்யிரு வந்துடுவாரு. உள்அலமாரிலே புதுவேட்டி இரண்டு ஜதை இருக்கு. அய்யிருக்கு கொடுக்கணும். ஞாபகப்படுத்து.”
“ஒரு ஜதை கொடுத்தா போதாதோ ?”
ஓண்ணு உங்கள் பாட்டன் நெனவ… ஒண்ணு கடலூர் வைத்தியர்
சரிம்மா.”. திரும்பிப் படுத்த மனோவின் கண்களில் நீர் வழிந்தது. என்று ஒரு மனசு இவளுக்கு?”
பூஜை முடிந்தது.பழங்கள், தட்சணையுடன் வேட்டியும் வைத்த தாம்பாளத்தை அண்ணனிடம் கொடுத்து அய்யரிடம் தரச் சொன்னான் மனோ. அய்யரின் சந்தோஷம் அவர் குரலில் தெரிந்தது.
என்னவொரு சாட்சாத்காரம்?! இப்படி சைதன்யம் பொங்கும் இந்புதங்களை ஆராதிக்க ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கேள்! தினமும் அன்னமும் பருப்பும் ஒரு உத்ரணி நெய் விட்டு நைவேத்தியம் பண்ணுங்கோ. நிறைய ஸ்வாமி இருக்கோன்னோ..” அண்ணி இடைப்புகுந்தாள்.
‘அப்யிரே! வழிவழியாய் வர்ற இந்த சுவாமியெல்லாம் வீட்டுமூத்தவர் இட தானே இருக்கணும்? என்ன நான் சொல்றது?”, மேலும் தோடர்ந்தாள்…” எங்களுக்கென்ன தெரியும் பௌர்ணமியோ.. மாவாசையோ நீங்களே வந்து அபிசேகம் பண்ணி வச்சுடறது
மனோவிற்கு அண்ணியின் கேள்விதந்த திகைப்பு அடங்குமுன் அவர் அவள் கூற்றை ஆமோதித்தார்.
“நீங்க சொல்றது ரொம்ப சரி! மூத்தவர் ஆராதிக்கறது தான் சம்பிரதாயம். அதுக்கென்ன? நானே அப்பப்போ வந்து பூஜை பண்ணி இச்சுறேன்”
“அதை அம்மாகிட்ட சொல்லுங்க” என்று துளசியம்மாவைக் கைக்காட்டினாள்.
மீண்டும் ‘சம்பிரதாயம் ‘என்று ஆரம்பித்த அய்யரை இடைமறித்தாள் ‘முறையோ எதுவோ, சாமில்லாம் இங்கேயே இருக்கட்டும். பிள்ளைகளுக்குள்ளே எந்த பேதமும் கிடையாது அய்யரே. ஸ்வாமியும் செட்டா இங்கயே இருக்கும்”
“எனக்குத் தெரியாதா? உங்கள் பிள்ளைகளை எனக்குத் தெரியாதா? உத்தரவு வாங்கிக்கிறேன் அப்போ…”
மனோ விக்கித்து நின்றான். ஏதும் சொல்லத் தோன்றவில்லை. ‘அம்மாவுக்கு என்ன ஆச்சு? தன்னுடைய ஒரே ஆசையையும் கூட புரிந்து கொள்ளாதவளா என்ன? இத்தனை வருஷமாய் மனசில் உருப்போட்டதென்ன ? சாமியையெல்லாம் கடலூரிலிருந்து எடுத்துவர அம்மாவுக்கு தார்க்கோல் போட்டுக் கொண்டேயிருந்ததென்ன?”
“போகட்டும்…இவனுக்கு அம்பாள், உனக்கு ராமாதிகள், இவனுக்கு பிள்ளையார், உனக்கு லிங்கம்னு சொல்லிருந்தாளானா கூட அதுவு ஒரு நியாயம் உண்டு. ஆனாலும் இப்படியா ? அண்ணாவுக்குத்தான் பக்தி, பஜனைன்னு உண்டா… மனோவுக்கு மனசு ஆறவே இல்லை. சாப்பிட உட்கார்ந்தபோது கூட பிரமை பிடித்தது போலத்தான் இருந்தான்.
“இலையைப் பார்த்து சாப்புடுறா”
“சரிண்ணா “
துளசியம்மா மனோவுடன் கொஞ்சநாள் இருந்து வருவதா சொன்னபோது,’அதுக்கென்னம்மா!இருந்துட்டுதான் வாயேன் என்றான் மூத்தவன்.
காலை முதல்பஸ்ஸுக்கு டால்மியாபுரம் கிளம்பினார்கள் மனோவும் துளசியம்மாவும் .
கிளம்புமுன் ஏதோ பால்கணக்கு விவரத்தை அண்ணியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் துளசியம்மா.
‘கிளம்புறோமண்ணே’
“பேங்க் வேலைக்கு பெரிய கம்பனிக்கெல்லாம் அப்ளிகேஷன் போடு. அந்த எக்ஸாமுக்கெல்லாம் படி. சாமி பூதமுன்னு திரிஞ்சிகிட்டிருக்காதே என்ன?“
“சரிண்ணா! சாமியையும், பூதத்தையும் நீங்களே பார்த்துகிடுங்க. போயி கடுதாசி போடறேனண்ணா.”
அண்ணன் ஒருமுறை புருவம் உயர்த்தி பின்பு சிரித்தார். “சரிம்மர் வாரக்கடைசியிலே நானு ஒருவாட்டி வரேன்.”
சேரிப்பா… டேய் மனோ! கட்டி சுமந்துகிட்டு வந்தியே இயையெல்லாம்..உள்ளே போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வா “
ஒரு நொடி தயக்கத்துக்குப்பின் வேகமாக உள்ளே போனான்.
‘அம்பிகே! திரிபுரசுந்தரி ! உன்னைப்பார்க்க அப்பப்ப வருவேன். மகாநிவேத்தியம்னு அய்யர் சொன்னாரே… அது இங்கே கிடைக்குமோவோ… என் வசம் தினம்தினம் கிடைக்கும் தாயே.. உனக்கும் எனக்கும் இருக்கும் உள்ள தூரம் உன் கவனத்துக்கு நாலெட்டு தானே? வந்து ஏத்துக்கோ’ என்றுப் பிரார்த்தித்துக் கொண்டான்.
மனோவின் கண்கள் ஒவ்வொரு விக்கிரகமாய் அள்ளி உள்ளே தக்கவைத்துக் கொண்டது. ஸ்வாமிக்கெல்லாம் அய்யர் தி ருத்தமாய்த்தான் உடுத்தி, அலங்காரம் செய்து வரிசையாய் அடுக்கியிருக்கிறார். பார்த்துக் கொண்டே வந்த மனோவின் கண்கள் முறை சலனித்தது.
எல்லா தெய்வமும் நேரே பார்த்திருக்க, லட்சுமணஸ்வாமி மட்டும் சாய் ஒரு பக்கமாக திரும்பியிருந்தார்.

மோகன்ஜி/’கூளம்’ – விருட்சம் நாளிதழ்