
அடிப்பதும் அணைப்பதும்
கொடுப்பதும் எடுப்பதும்
முடிப்பதும் தொடுப்பதும்
நடிப்புனக் கென்றால்,
ஜமுக்காளமா நான்?
மேடை சமைத்த நாள்
என்னைக் கேட்டாயா?
நான் இல்லையென்றால்
மேடை யாருக்கு
மேடைக்கு நானா?
“என்னிஷ்டம்” என்றால்
என்னிஷ்டம் ஏன்?
கண்மூடிச் செவிபொத்திக்
கட்டையாய்க் கிடப்பதற்கா?
கட்டையாய்க் கிடந்தாலும்
போகஸ்லைட் புழுக்கத்தில்
உணர்வலை உருகிப்போய்
வேர்வையாய் வழிகிறதே
மூக்கைப் பொத்திக்கொள்.
