
- தொழிலாளர் தலைவர்
1923-24இலேயே அவர் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆகிவிட்டார். 1921ஆம் ஆண்டு பம்பாயில் முதல் ‘டிரேட் யூனியன் காங்கிரஸ்’ (தொழிலாளர் சங்க மாநாடு) நடந்தது; அடுத்த ஆண்டு ஜரியாவில் நடந்தது. மேற்கத்திய பாணியில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதற்காகச் செய்யப்பட்ட முதல் முயற்சி இது. 1923இல் லாகூரில் நடந்த தொழிலாளர் சங்க மாநாட்டுக்குச் சித்தரஞ்சன் தலைமை வகித்தார். தம் உரையில் அவர் ஆலைத் தொழிலாளர்கள், தொழில்கள் சம்பந்தமாய்ச் சட்டம் இயற்றவேண்டும் என்று யோசனை தெரிவித்தார். மறு ஆண்டு தில்லிச் சட்டமன்றத்தில் ‘தொழிலாளர் நலச் சட்டம் வந்தது; இதனால் ஆலைத் தொழிலாளர்கள் துன்பம் குறைய வில்லை; என்றாலும், காயமுற்றவர்கள், அங்க சேதமானவர்கள், நெருப்புக் காயமுற்ற தொழிலாளர்கள் ஆகியோருக்குச் சிறிதளவு பரிகாரம் கிடைத்தது. மறு வருடம் கல்கத்தாவில் நடந்த தொழிலாளர் மாநாட்டுக்கும் சித்தரஞ்சனே தலைமை பூண்டார். ஆனால், இங்கும் கட்சியில் பிளவு தோன்றியது; கட்சிப் பூசல்கள் எழுந்தன; எவ்வளவோ சமாதான முயற்சிகள் செய்தும் பயன் கிட்டவில்லை.
வங்காளத்தில் ஹூக்ளீ மாவட்டத்தில் தாரகேசுவர் ஆலயம் மிகவும் பிரபலமானது. லட்சக்கணக்கில் அதற்குச் சொத்து உண்டு. சதீஷ்கிரி என்ற ‘மஹந்து’ அதை நிர்வகித்து வந்தார். அவருடைய குணக்கேடு காரணமாக நிர்வாகம் சீர்குலைந்தது. இதனால் சுவாமி விசுவானந்தர் என்பாரின் ஹிந்துக்கள் சினமுற்றார்கள். தூண்டுதல் பேரில் சத்தியாக்கிரகம் செய்யப்பட்டது. இது 1924இல் நடந்தது. வங்காளமெங்குமிருந்தும் மாணவர்கள் திரண்டுவந்து சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார்கள். சித்தரஞ்சன் அதை ஆதரித்தார்; அவருடைய ஒரே புத்திரரான சிரரஞ்சனும் சிறையில் தள்ளிப்பட்டார். பல மாதங்கள் இப்போராட்டம் நடந்தபின், இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டது. அதன்படி மஹந்து சதீஷ்கிரி விலகினார்; நிர்வாகம் ஒரு டிரஸ்டிடம் மாறியது. ஆனால், சிறிது காலத்திற்குள் விவகாரம் கோர்ட்டுக்குச் சென்றது. ஓர் அரசாங்க அதிகாரி கோயில் நிர்வாகத்தை ஏற்றார்.
சித்தரஞ்சன் தாஸ் காலமான பிறகும் வழக்கு நடந்தது. இறுதியில் கோயிலின் பாதிச் சொத்து சதீஷ்கிரிக்கும், மறு பாதி அரசாங்கத்துக்கும் சேர்ந்தது.
சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர் – விருட்சம் நாளிதழ்
