சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

  1. சுயராஜ்யக் கட்சி

சட்டமன்றத்தில் நுழையும் பிரச்சனை காங்கிரஸில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. மாறுதல் வேண்டுவோர் – வேண்டாதார் என்று இரு கட்சிகள் தோன்றின. கயையில் கூடிய காங்கிரஸில் இவ்வேற்றுமை தெளிவாகப் புலப்பட்டது; ஆனால், அங்குச் சட்டமன்ற எதிர்ப்பாளர்கள்தாம் வெற்றிபெற்றனர்.
எனினும், தாஸும் அவருக்குத் துணை நின்ற மோதிலால் நேரு, சத்தியமூர்த்தி முதலியோரும் மனம் தளரவில்லை. 1923ஆம் ஆண்டு, சித்தரஞ்சன் காங்கிரஸின் தலைமையைத் துறந்தார். ‘சுயராஜ்யக் கட்சி’யை நிறுவினார்; ஆறே மாதங்களில் காங்கிரஸில் பெரும்பான்மையோர் தம் கருத்தை ஏற்கும்படி செய்வதாகக் கூறினார். அவருடைய செயலாற்றல் அப்போதுதான் வெளியாயிற்று. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசங்கங்கள் புரிந்தார்; திட்டங்கள் வகுத்துத் தந்தார்; மோதிலால் நேரு வும் சத்தியமூர்த்தியும் அவருக்குப் பேருதவி புரிந்து வந்தார்கள்.
காங்கிரஸுக்குள் ஏற்பட்ட இந்தப் பூசல் மக்களைக் குழப்பிவிட்டது என்றே கூறலாம். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கேலி புரிவதும், கிண்டல் செய்வதுமாக இருந்தனர். மாறுதல் வேண்டாதாரின் பக்கம் சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் தமது கேலிச்சொற்களால் எதிரிகளைக் குத்திக் கிளப்பியவண்ணம் இருந்தார். தாஸும் மோதிலாலும் எதிர்ப்புக்குப் பணியாத தன்மை உடையவர்கள். அவர்களும் தங்கள் சொல் லாற்றலை மிகவும் கூர்மையாகப் பயன்படுத்தினர்.
இந்த கோஷ்டிப் பூசலினால் காங்கிரஸ் கட்சி பலவீன மடைந்தது. இந்த இரண்டு கோஷ்டியினரையும் சமாதானப்படுத்த சரோஜினி நாயுடு, அபுல்கலாம் ஆஸாத் போன்றோர் முயன்றனர். 1923ஆம் வருடம், செப்டம்பர் மாதம் தில்லியில் அபுல்கலாம் ஆஸாத் தலைமையில் விசேஷக் காங்கிரஸ் கூடியது; காங்கிரஸ் காரர்கள் சட்டமன்றத்தில் கலந்துகொள்ளலாம், வாக்களிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியது; சட்டமன்றப் பிரவேசத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் தீர்மானமாயிற்று.
தீர்மானம் நிறைவேறியதும் சித்தரஞ்சனும், மோதிலால் நேருவும் செயலில் இறங்கினர். தேர்தலில் வங்காளம், மத்தியப் பிரதேச சட்டமன்றங்களுக்கும் தில்லி கவுன்சிலுக்கும் பல சுயராஜ்யக் கட்சியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தியாவில், பாராளுமன்ற ரீதியில் நிறுவப்பட்ட முதல் கட்சி சுயராஜ்யக் கட்சியே. அக்காலத்தில் அது மிகச் சிறப்பாகப் பணியாற்றியது.
சித்தரஞ்சன் வங்காளக் கவுன்சிலுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; சுயராஜ்யக் கட்சியின் நாற்பது உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். காங்கிரஸ்காரர்கள் முதலில் கலந்துகொண்ட தேர்தல் அது; மிகக்குறுகிய காலமே அவர்கள் முயற்சி செய்தனர்; இவைகளை எல்லாம் பார்த்தால், இது ஒரு பெரிய வெற்றி என்றே கூறவேண்டும். சுரேந்திரநாதர், எஸ்.ஆர். தாஸ் போன்ற மிதவாதத் தலைவர்கள் தோல்வி கண்டனர். சட்டமன்றத்தில் பெரிய கட்சி என்பதால் அமைச்சரவை அமைக்கும்படி வங்காளக் கவர்னர் லிட்டன், சித்தரஞ்சன் தாஸுக்கு அழைப்பு விடுத்தார். ‘இயலாது’ என்று மறுத்துவிட்டார் தாஸ்.
பிறகு, அவர் உத்தியோக வர்க்கத்தினரை மிகவும் கடுமையாகத் தாக்கத் தொடங்கினார். 1924இலும் 1925இலும் அவர் மந்திரிகள் நியமிக்கப்படும் விதத்தையும் அவர்கள் சம்பளத்தையும் கண்டித் தார்; சட்டமன்றத்தில் இது சம்பந்தமான சர்க்கார் தீர்மானம் தாஸின் முயற்சியால் தோல்வியுற்றது. ஆனால், கவர்னர் தம் விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தீர்மானத்தை மீண்டும் பரிசீலிக்கும்படி சட்டமன்றத்துக்கு அனுப்பினார். மக்களின் கருத்தை அரசாங்கம் அவமதித்ததாய்ச் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்; கவர்னர் அனுப்பிய தீர்மானங்களை மீண்டும் மீண்டும் நிராகரித்தனர். இதற்கிடையில் கல்கத்தா நகராட்சியைக் ‘கார்ப்பரேஷன்’ ஆக்கும் சட்டம் நிறைவேறி இருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் லண்டனுக்கு அடுத்த பெரிய நகரம் கல்கத்தா; வருமானம் மிகுதி; மற்ற நகராட்சிகளைவிட, கல்கத்தா கார்ப்பரேஷனுக்கு அதிகமான நிர்வாக சுதந்தரமும் இருந்தது. கார்ப்பரேஷனைக் கைப்பற்றினால் வங்காளத்தில் காங்கிரஸுக்கும், சுயராஜ்யக் கட்சிக்கும் வலிமை கிட்டும் என்பதோடு நகர மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பும் கிடைக்கும் என்று எண்ணினார் தாஸ். ஆகையால், 1924ஆம் ஆண்டு கார்ப்பரேஷன் தேர்தல் நடந்தபோது தாஸும் சுயராஜ்யக் கட்சியினரும் போட்டியிட்டனர். 75 உறுப்பினர்கள் கொண்ட கார்ப்பரேஷனுக்கு 55 சுயராஜ்யக் கட்சியினர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். சித்தரஞ்சன் மேயரானார்.
இவ்வாறு அரசியல் போராட்டங்களில் மூழ்கி அவர் தம் ஆன்மிகத்தையும் வைஷ்ணவத்தையும் மறந்து இருந்தார்; அவைகளை வளர்த்துக்கொள்ள அவருக்கு நேரமே கிடைக்க வில்லை. உண்மை என்னும் கதிரவனை, மாயை என்ற மேகம் மூடியிருந்தது. 1917ஆம் ஆண்டிலேயே மேனாட்டு நாகரிகத்தை அவர் மிகவும் உக்கிரமாய்த் தாக்கினார். ‘அது நம் பண்பாட்டை அழிக்கும்’ என்று எச்சரித்தார். ஆனால், மேனாட்டு முறையில் அடிக்கடி தொடர்புகொள்ள அமைக்கப்பட்ட அரசாங்கத்தோடு நேர்ந்ததாலும், போராட நேர்ந்ததாலும் அவர் தம் கருத்துகளை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆறு ஆண்டுகளுக்குள் அவர் சிந்தனைப் போக்கு மாறியது.

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்”

Comments are closed.