
கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள்
- நல்ல நாள்
இன்று நல்ல நாள்
முகூர்த்த நாள்
என் மனக்கிடைக்கையை
சொல்ல நினைத்தேன்
அவள் இருக்கும்
தெருவை
சுற்றி சுற்றி வந்தேன்
கோபுர மணி அடித்தது
2. திரும்பவும்
திரும்பவும் மழை
திரும்பவும் தெருவில் தண்ணீர்
திரும்பவும் பக்கத்து வீட்டில் சாக்கடை
திரும்பவும் நாற்றம்
திரும்பவும் கொசுக்கள்
திரும்பவும் குளிர்
திரும்பவும் தூக்கம் இன்மை
இவ்வளவு பிடிக்காமலிருந்தாலும்
உலகம் என்னமோ இயல்பாக இருக்கிறது
3. புத்தர்
நான் நம்புகிறேன்
நான் புத்தனென்று
என்னிடம்
பேசுகிறவர்களும்
புத்தனாக மாறி
விடுகிறார்கள்
ஒரு புத்தன்
இன்னொரு
புத்தனைப் பார்த்துப்
பேசுகிறான்
கண் சிமிட்டுகிறான்
சண்டை போடுகிறான்
ஒரு புத்தன்
இன்னொரு புத்தனைச்
சண்டையில் வீழ்த்துகிறான்
இதெல்லாம் நடந்தும்
எப்போதும்
எங்கும்
எப்படியும்
புத்தன்தான் மிஞ்சுகிறான்
4. எறும்பு
கழுத்தில்
ஊறிய எறும்பு
கடித்து விட்டது
எப்படி வந்ததென்று
தெரியவில்லை
ஏன் கடித்தது
புரியவில்லை
கேட்டேன் எறும்பை
‘சும்மா’ என்றது
விரலால் பிடித்துத் தரையில்
தூக்கி எறிந்தேன்
தப்பித்தோம் பிழைத்தோம் என்று
ஓடி விட்டது
