1
ஒழுகும் பேனா
தன் சித்திரத்தைத்
தானே எழுதிக்கொள்கிறது
—-
2
துக்கத்தின்
சாம்பல்
நீறு
—-
3
ஆத்மாவின்
காயங்கள்
உன் சொற்கள்
—
4
கடைசியில் எஞ்சியிருப்பது
எதிரியின் சொற்களல்ல
நண்பர்களின் மௌனம்
—-
5
மெல்லிய ஆம்பல்
தண்டின் நாருறித்த
கீற்றாக
ஒரு அல்குல்
—
6
இரவில் கிசுகிசுக்காதே
சொற்கள்
நம்பிக்கையளித்துவிடும்
—
7
ஓவியத்தூரிகை
தீட்டாமலிருப்பது
பரிநிர்வாணம்
—
8
மாயையைப் பற்றி
யார் பேசினாலும்
நீ ஏன் புன்னகைக்கிறாய்?
—-
9
கண்ணீர்த்துளிகளால்
சில பக்கங்களை
நிரப்பலாம்
ஆனால் எல்லா பக்கங்களையும்
நிரப்புவது
தகாது
—-
10
இறந்த கவிஞர்களோடு
பேசுதல் எல்லோருக்கும்
வழமை
இறந்த பிறகே புகழ்தல்
நம்மிடம் நிலைபெற்றுவிட்ட
மரபு
—-
11
மிருகங்களையும் பறவைகளையும்
உன் கவிதைகளுக்குள்
வரவிட்டுவிடாதே
அவை நீ மனிதனல்ல
என்பதைச் சொல்லிவிடும்
——
12
‘இதயபூர்வமாக’
என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?
அகராதியில் அர்த்தமற்ற
சொற்சேர்க்கை அது
——
13
பற
உன் தனிமைக்குள்
—
14
ரத்த தாகம்
மனிதர்
இயல்பு
—
15
ஓரக்கண் பார்வைகள்
உதடு சுளித்த சிரிப்புகள்
மகரந்தங்கள்
—-
16
புகழ்ச்சி
ஒரு தொந்தரவு
பரிதாபத்திற்குரியது
—-
17
தூய்மையான காற்று
வீசும்போது
அபாயம் அருகிலிருக்கிறது
—
18
தன்னைப் பற்றிய
உணர்வற்ற பண்புதான்
நற்பண்பு
——
