
இதேபோல் ஒரு தீபாவளி நேரம். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னால். 2014. அக்டோபர் கடைசி.
அவர் கதைகள் எனக்குப் பிடிக்கும். அவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தார். எங்கே இருக்கிறீர்கள் என்று பதில் கடிதம் போட்டேன். திருவான்மியூர் என்றார். நேரில் போய் விட்டேன். அப்போது அவர் வயது 85. தளர்ந்து போயிருந்தார். அடுத்த தீபாவளிக்கு இருக்க மாட்டேன் என்றார்.
அதேபோல் அடுத்த தீபாவளியைத் தாண்டினதும் டிசம்பரில் இறந்து விட்டார். நானும் அசோகமித்திரனும் அழகியசிங்கரும் போனோம். என்னால் துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் முன்னால்தானே எந்த மரணத்தையும் பூனையைப் போல் எதிர்கொள்வேன் என்றாய், இப்போது என்ன, ஒரே கட்டுரையிலேயே தடம் மாறுகிறாயே என்கிறீர்களா, இதற்கான பதிலை நேரில் சொல்கிறேன். துக்கத்தில் நெஞ்சு வலிக்கத் தொடங்கியது. அசோகமித்திரனுக்கும் தாளவில்லை. பத்தே நிமிடத்தில் மூவருமாக ஆட்டோவில் திரும்பி விட்டோம். என்னை மைலாப்பூர் வீட்டில் விட்டு விட்டு அசோகமித்திரனும் அழகியசிங்கரும் தி.நகர் கிளம்பினார்கள்.
சார்வாகனை மாதம் ஒருமுறை சந்தித்துக் கொண்டிருந்தேன். சார்வாகன் உலகப் புகழ் பெற்ற தொழுநோய் மருத்துவர். அதற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர். இயற்பெயர் சீனிவாசன். பிராமணர். அய்யர். ஆனாலும் கடவுள் நம்பிக்கை அற்றவர். அதனால்தான் சார்வாகன் என்ற புனைப்பெயர். கம்யூனிசத்தில் நம்பிக்கை உள்ளவர்.
வீட்டு வாசலில் ஏன் டாக்டர் ஸ்ரீனிவாசன் என்ற பெயர்ப் பலகை இல்லை என்று கேட்டேன்.
இந்தப் பகுதியில் உள்ள அனைவருக்குமே நான் மருத்துவன் என்று தெரியும் என்றார்.
அப்படியே பேச்சுவாக்கில் அவர் எந்த நோயாளியிடமிருந்தும் கட்டணம் வாங்கியதில்லை என்றார். ஏன் என்று கேட்டேன். ”அரசாங்கமே போதுமான அளவுக்கு ஓய்வு ஊதியம் அளிக்கிறது, பணியில் இருந்த நாட்களிலும் என் சம்பளமே அதிகம் என்ற அளவுக்கு இருந்தது. அதனால் அப்போதும் சரி, இப்போதும் சரி, கட்டணமே வாங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை” என்றார்.
தொழுநோய் மருத்துவத்தில் பல பிரிவுகள் உள்ளன. சார்வாகன் கைகளை சரி செய்யும் பிரிவில் உலகப் புகழ் பெற்ற நிபுணராக விளங்கினார்.
சார்வாகன் அதில் சில முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தார். அதாவது, தொழுநோய் குணமான பின் கை விரல்களை மீண்டும் பழையபடிக்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகள் சார்வாகன் கண்டு பிடித்தது. இதை விளக்கும் பொருட்டு உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்திருக்கிறார் சார்வாகன்.
எதையுமே எழுதியதில்லை. காரணம், தமிழ்ப் பதிப்புச் சூழல். யாரும் அவர் எழுத்தைப் பதிப்பிக்கத் தயாராக இல்லை. சார்வாகனுக்கும் இந்தக் கதைகளை இந்தச் சமூகத்துக்குக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் இல்லை.
எல்லாவற்றையும் என்னிடம் சொன்னார்.
அதில் ஒரு கதை இது:
ஒரு கருத்தரங்குக்காக சார்வாகன் மெக்ஸிகோ போனார். ஓய்வு நேரத்தில் ஒரு தொழுநோய் மருத்துவமனையைப் பார்வையிட்டார். அப்போது அங்கேயிருந்த ஒரு பெண் மருத்துவர் ஒரு தொழுநோயாளியின் கை விரல்களை சரி செய்து கொண்டிருந்தார். அது பற்றி சார்வாகனிடம் அந்தப் பெண் விளக்கினார்.
“இந்த அற்புதமான வழிமுறையைக் கண்டு பிடித்தவர் ஸ்ரீனிவாசன் என்ற அறிஞர். அவரால்தான் இந்த மனிதன் தன் கைவிரல்களைத் திரும்பப் பெற்றிருக்கிறான்.”
அந்தப் பெண் மருத்துவரின் குரல் தழுதழுக்கிறது.
அந்த ஸ்ரீனிவாசன் நான்தான் என்கிறார் சார்வாகன்.
அப்போது அந்தப் பெண்ணுக்கும் அந்த நோயாளிக்கும் எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இப்படி ஒரு நூறு கதைகள் சொன்னார் சார்வாகன்.
எதையுமே அவர் எழுதியதில்லை.
ஆகவே, எழுத்தாளனைச் சந்தித்து அவரோடு நேரில் உரையாடுவது போன்ற அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
–

நீங்கள் பாக்கி 99 கதைகளை இதுபோலவே எழுத முயல்லாம்.
நமக்கு எவ்வளவு பெரிய இழப்பு!
இது போல் ஒருவர் மேலை நாடுகளில் இருந்திருந்தால் நாடே கொண்டாடும்.
சமூகம் திறமை சார்ந்தே ஒருவரைப் போற்றக் கூடியதாக இருக்க வேண்டும்!
ஒவ்வொன்றாக மீதமுள்ள கதைகளையும் எழுதலாம் ஐயா.