
தெருமுனையில் திடீரெனக் கூச்சல்.”ஆனை வரதுடோய்!” திண்ணையிலிருந்தபடியே எட்டிப்பார்தேன். சர்க்கஸ் யானைதான். கம்பீரமாக, மகாராஜாபோல, பாகன் அதன்மீது உட்கார்ந்திருந்தான். பின்னாலும் பக்கவாட்டிலும் ஊர்ப் பொடியன்கள் கூட்டம்.
உள்ளேயிருந்து ஓடிவந்து எட்டிப் பார்த்தான் அம்பி. மடிந்திருந்த வலது புறங்கையிலிருந்து என்னவோ வழிந்து கொண்டிருந்தது. பாதிச் சாப்பாட்டில் எழுந்து வரும் அவசரம் போலிருக்கிறது!
“எச்சல் கையும் அதுவுமா எங்கேடா ஓடறே? வாடா!”
“ஒண்ணுமில்லை. யானை வந்துண்டிருக்கு. சகா குரல் கொடுத்தான். பறந்துண்டு ஓடிவந்துட்டான் உன் பிள்ளை. அத்தனை அவசரம்!”
“சிரிக்காதேடா. மாமாவா லட்சணமா அவனுக்குப் புத்தி சொல்லி உள்ளே அனுப்ப மாட்டியோ?”
“இதெல்லாம் இந்த வயசிலே அப்படித்தான் இருக்கும். விடு!”
“பேச்சைப்பாரு பெரிய தாத்தா மாதிரி… நீ வாடா குழந்தே. இன்னும் ரெண்டே பிடிதான்!”
“போம்மா! மாட்டேன். போறும். வயறு ரொம்பிடுத்து!”
“ஏரிக்குப் போறதுடா. குளிப்பாட்டப் போறா போல் இருக்கு!” என்றான் வாசலில் நின்ற அம்பியின் சகா கிச்சன்.
“அப்படியா? போய்ப் பார்க்கலாமா?” அவ்வளவுதான். வாசற்படியில் இருந்த வாளி ஜலத்திலும் கையைவிட்டான் அம்பி. வாயைத் தடவிக்கொண்டான். ஈரக்கையை சட்டையிலும் டிராயரிலும் துடைத்துக் கொண்டான். அடுத்த விநாடி குதித்துப் படி இறங்கி சிநேகிதனுடன் அவனும் ஓடினான்.
“என்ன பிள்ளையோ?” என்று அங்கலாய்த்தபடி அவளும் வாசல் நடையிலேயே நின்றுவிட்டாள். நானும் தெருவில் இறங்கி நின்று கொண்டேன். வேடிக்கை பார்ப்பதற்கு வயது ஓர் இடைஞ்சலா என்ன?
எங்கள் வீட்டைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது யானை. நல்ல உயரம். ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் சர்க்கஸில் அதுவும் அதன் குட்டியும் செய்யும் விளையாட்டுகள் ரொம்ப ஜோர். பெரியவர்களே ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
கைதட்டி சந்தோஷத்தைக் காண்பித்துக் கொள்வார்கள். சின்னஞ்சிறிசுகளுக்குக் கேட்பானேன்! அதுவும் போதாக்குறைக்கு சிங்கம், புலி, கரடி, சின்னப்பெண்கள், குமரிகள், கட்டுமஸ்தான உடம்போடு இளங்காளைகள். கிட்டத்தட்ட அறுபது எழுபது ஜீவன்கள். இவ்வளவுக்கும் சாப்பாடுபோட்டு, கட்டிமேய்த்து எப்படித்தான் முதலாளி சமாளிக்கிறாரோ என்று நான் அதிசயப்படுவேன்.
நான் விடுவெட்டி ஆள்! பத்தாவது பாஸ் செய்துவிட்டு வேலைக்கு அலைகிறவன். தட்டெழுத்து, சுருக்கெழுத்து, ஹிந்தி என்று எல்லாம் கற்றுக் கொண்டு என்னைத் தயார் செய்து வைத்துக் கொண்டிருக்கிறவன். அது படிக்கவில்லை இது படிக்கவில்லை என்று சால்ஜாப்பு சொல்லி, வேலைதருபவன் எவனும், என்னைத் தட்டிக் கழித்துவிட முடியாதபடி பலமாகவே அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருப்பவன். தின்பது தண்டச்சோறாக இருக்கக்கூடாதே என்பதற்காக மாங்கு மாங்கென்று அலைவேன், திரிவேன். கடை கண்ணிக்குப் போவது, சமையலில் ஒத்தாசை, ஆட்டுக்கல் அம்மிகளில் அக்காவுக்கு ஒத்தாசையாக அவ்வப்போது அரைத்துக் கொடுப்பது, துணிமணிகளைத் தோய்த்து, உலர்த்தி, காயவைப்பது, ஒழிந்த நேரத்தில் மாமாவாக லட்சணமாக அம்பிக்குப் படிப்பில் உதவி. அவனுக்கு விளையாட்டுத் தோழன்…. இத்யாதி இத்யாதி!
“அக்கா! நானும் ஏரிவரைக்கும் போயிட்டு வரேன்” என்றேன்.
“அவந்தான் கொழந்தே… மாமா நீயும் அவனுக்கு மேல பச்சைப் பிள்ளையாவே இருக்கே!” என்று அவள் சிரித்தாள்.
கரைமேல் நின்றுகொண்டிருந்தது யானை. எட்டத்தில் சுற்றிலும் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாகக் கூட்டம் இந்த வேடிக்கையை எல்லாம் பார்க்கிற வாய்ப்பு எப்போதாவது தானே அவர்களுக்குக் கிடைக்கிறது?
சளசளவென்று பேச்சுகள். கூச்சல்கள்.”சும்மா இருக்கமாட்டீங்க? ஏன் சத்தம் போடறீங்க?” என்று அதட்டினான் பாகன்.
“ஆனை மிரண்டுக்கப் போவுது. கம்முனு கெடங்க எல்லாரும்” வயதானவர் ஒருவர் கூட்டத்தினரை அடக்கி வைக்கப் பார்த்தார்.
கரைமேலிருந்த சோளக்குச்சியன்றை யானை விளையாட்டாக எடுத்துக் கும்பலின் மீது போட்டது.
“ஓஹோய்யா!” பொடியன்கள் கும்மாளத்துடன் சிரித்தார்கள்.
“இப்படிக் கூச்சல் போட்டா கெட்ட கோபம் வரும். தெரியுமா?”
பாகனுக்குப் பதில் தருவதுபோலப் பொடியன்களின் அடக்கமான கள்ளச் சிரிப்பு மெல்லிய அலையாகக் கிளம்பிற்று.
படித்தவனாக, பெரியவனாக லட்சணமாக நான் புகுந்தேன் இரண்டு கைகளையும் உயர்த்தியபடி.
“எல்லாரும் அமைதியா இருக்கணும். சப்தம் போட்டா யானை மிரண்டுடும். அது குளிக்கணுமில்லையா? நீங்கள்ளாம் பாக்க வேண்டாமா? அதனாலே குரலே காட்டாமே சமத்தா நில்லுங்க கொஞ்ச நேரம்”
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல நிமிஷத்தில் அமளி அடங்கிவிட்டது. யானை குளிக்காமலே போய்விட்டால் அப்புறம் பார்ப்பதற்கு வேடிக்கை என்ன இருக்கிறது? இது புரிந்ததில் உடனே மௌனம்.
பாகன் யானையிடம் அதன் பாஷையில் என்னவோ சொன்னான். அது நகரவே இல்லை. முன்னேபோய் தோள்பக்கம் தட்டிக் கொடுத்து உசுப்பிவிட்டுப் பார்த்தான். இரைந்து ஏதோ திட்டினான். காலைப் பிடித்து அசைத்தான். ம்ஹ§ம்!
கோபத்தில் முகம் ஜிவுஜிவு என்று ஆகிவிட்டது அவனுக்கு. கையிலிருந்த குச்சியால் முதுகில் ஓங்கி ஓர் அடி கொடுத்தான். அடிபட்ட இடத்தை யானை ஒருமுறை சிலிர்த்துவிட்டுக் கொண்டது. திரும்பி அவனை ஒருமுறை பார்த்தது. முன்னங்கால்களையும் துதிக்கையையும் தூக்கி ஒரு சப்தம் கொடுத்தது.
கூட்டம் பயந்து சிதறிப் போயிற்று. நானும் இரண்டடி பின்னுக்கு வந்தேன், என்ன ஆகுமோ என்னும் திகிலுடன்.
ஆனால் அடுத்தகணம் அது மளமளவென்று தானே ஏரிக்குள் இறங்கிற்று!
மூச்சுவிடக்கூட மறந்தவர்களாக நின்ற இடத்திலிருந்தே எல்லாருமே பார்த்துக் கொண்டிருந்தோம்.
இரண்டடி, நாலடி…… யானை போய்க் கொண்டேயிருந்தது.
பாகன் எங்களைவிட அதிகமாகப் பயந்துவிட்டான் என்பது அவன் பார்வையிலிருந்தே எனக்குப் புரிந்தது.
“வா! வா!” என்று கூப்பிட்டான். அதற்குப் புரியும் பாஷையில் இன்னும் என்னேன்னவோ சொல்லி அழைத்தான்.
ஆனால் அது ஏரிக்குள் போய்க் கொண்டேயிருந்தது.” என்னப்பா ஆச்சு அதுக்கு?” என்று அவனைக் கேட்டேன்.
“தெரியலீங்க! நேத்திலேருந்து இப்படித்தான் முரண்டு பண்றது. ராத்திரி ஆட்டம் முடியறவரை நல்லாத்தாங்க இருந்தது… இப்போ நான் என்ன பண்ணுவேன்? இது இப்படிப் போயிடுச்சே!” அழாதகுறைதான்.
கழுத்தளவு ஆழத்தில் போய் நின்றுவிட்டது யானை. துதிக்கையைத் தூக்கியபடி, தவம் செய்யும் முனிவரைப்போல கண்ணையும் மூடி அசையாமல் இருந்தது.
“மொதலாளிக்குத் தெரிஞ்சா கொன்னு போட்டுடுவாருங்களே?”
“அதைத் திருப்பி கரைக்குக் கொண்டுவர வேணாமா? என்ன செய்யப் போறே?” யாராரோ அவனைக் கேட்டார்கள்.
“போய் முதலாளியை அழைச்சுண்டு வாயேன்” என்றேன்.
“இதை இப்படி விட்டுட்டு எப்படீங்க நான் போறது? ஏதானும் ஆயிடுச்சுன்னா?”
அவன் கவலை எனக்குப் புரிந்தது.”ஒங்க மானேஜருக்குத் தகவல் கொடுக்கணும்பா,… இல்லேன்னா ஒனக்கும் சங்கடம். சரி சரி… நீ இங்கே இரு… நான் போய் சொல்லிட்டு வரேன். அவர் என்ன செய்யறாரோ செய்யட்டும்.”
அட்சதையை நானே அள்ளிப் போட்டுக் கொண்டு பொறுப்பை நிறைவேற்றக் கிளம்பினேன். கூட்டத்திலிருந்து ஒருவனிடம் சைக்கிளைக் கேட்டேன். அடுத்த நிமிஷம் அதில் ஏறிப் பறந்தேன் டவுனுக்கு.
அரை மணிநேரத்தில் நான் திரும்பியபோது என்னுடன் ஏழெட்டு சைக்கிள்களில் மானேஜர் சிப்பந்திகள் எல்லாரும் வந்தார்கள்.
அரை டிராயரும், பனியனுமாக வந்த மானேஜருக்கு, நிலைமை புரிந்தது. கன்னா பின்னாவென்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பாகனைத்திட்டினார். பாவம்! சப்தநாடியும் ஒடுங்கிப்போய் குனிந்த தலையுடன் அவன் நின்றான்.
மானேஜர் ஆட்களை ஏதேதோ கேட்டார். மந்திராலோசனை செய்வாராம் ராஜா. அதுபோலத்தான் இருந்தது.
இதற்குள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளக் கும்பலுக்கு ஆவல். நெருக்கி அடித்துக் கொண்டு முன்னே வந்தார்கள்.
“தோ பாரும்மா இந்த ஆளை!” என்று ஒரு சிறுவன் முனகினான்.
“எதுக்கய்யா பிள்ளையைப் பிடிச்சுத் தள்ளறே?” என்று கத்தியபடி தாயார்க்காரி இரண்டடி முன்னே வந்தாள்.
“ஒதுங்கி இருங்கன்னு சொன்னாரில்லே பின்னே ஏன் முண்டிக்கிட்டு வரான்? அதான்!”
“அதுக்காவ? வாயாலே சொன்னாப் பத்தாது? இப்படித் தள்ளணுமா?… மொகரயப் பாரு!… நீ வாடா ராசா!” என்று தன் மகனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
“கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா?” நான் பொதுவாக ஒரு தர்ம அதட்டல் போட்டேன்.
“பின்னே என்ன சாமி?” ஆனால் அதற்குமேல் அவள் பேசவில்லை. மானேஜர் அவளை முறைத்துப் பார்த்ததுதான் காரணம்!
“க்யா ஹ§வா?” என்று அவர் என்னைப் பார்த்தார்: அந்த உப்புப் பெறாத சம்பவத்தை விவரமாகச் சொல்லி அவர் “மூடைக் கெடுக்க எனக்கு இஷ்டமில்லை. சுருக்கமாக நடந்ததைச் சொன்னேன். அவர் தலையை ஆட்டிவிட்டு, வாயில் விரலை வைத்து யாரும் பேசவே கூடாது என்று கோபமாக ஜாடை காட்டினார். பிறகு தீவிர யோசனையுடன் முன்னும் பின்னுமாக கூண்டுப்புலிபோல உலவ ஆரம்பித்தார். கையிலிருந்த குச்சியால் இன்னோர் உள்ளங்கையைத் தட்டிவிட்டுக் கொண்டார்.
சட்டென்று ஒரு விநாடி நின்றார். அவர் பார்வை கூட்டத்தில் ஒருமுறை ஓடிற்று. பயந்து போயிருந்த அந்தப் பையனையும் பார்த்தார். அருகேபோய்தட்டிக்கொடுத்துவிட்டு மளமளவென்று ஏதோ சைகை செய்தபடி ஓரமாகப் போனார். உடனே சர்க்கஸ் ஆட்கள் அவர் அருகில் போய்க் கூடினார்கள். தணிந்த குரலில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் புரியாதவர்களாக விழித்தார்கள்.
“ஹ§ம்! ஜல்தி… ஜாவ்!” என்று ஓர் அதட்டல்.
அவர்கள் சைக்கிளில் சிட்டாய்ப் பறந்தனர். கும்பல் விழித்தது. நான் மட்டும் என்ன? ஒன்றும் புரியாமல்தான் நின்றேன்!
பத்து நிமிஷங்கள் ஆகியிருக்குமோ என்னவோ? சிறிய லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ஓகோ! சர்க்கஸ் கம்பெனி வண்டிதான்!
மானேஜர் பத்தடி முன்னேபோய் அதை நிறுத்தினார். கிட்டே நெருங்கிய கூட்டத்தை அதட்டி நிறுத்தினார். போன ஆட்கள் தபதபவென்று இறங்கினார்கள். நாலைந்து பேராக, மலைப்பாம்பு போல தடியாக நீளமாக இருந்த தாம்புக் கயிற்றுச்சுருளைப் புரட்டிக் கீழே தள்ளினார்கள். பிறகு அதில் பாதி பருமனுள்ள ஏழெட்டு நீளக்கயிறுகள் பெரிய, கனமான மரப்பலகைகள் சிலவற்றை இறக்கினார்கள். மண்டியில் சாக்கு மூட்டைகளை இறக்குவதற்கு சாரம் கட்டுவார்களே அதே போலப் பலகைகளை பதிவாகச் சாய்த்து வைத்தார்கள். எதற்கு இதெல்லாம் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
கடைசியில் இறங்கியது- அட! குட்டியானை! முன்னும் பின்னுமாக ஆட்கள் அதைப் பிடித்து ஜாக்கிரதையாக இறக்கினார்கள்.
“குட்டி ஆனை வந்திருக்கு டோய்!” அந்தப் பொடியனின் கூச்சலைத் தொடர்ந்து அவன் சகாக்கள் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு.
“சுப் ரஹோ!” மானேஜரின் இடிமுழக்கம் போன்ற குரலில் அமளி உடனே அடங்கி, எல்லாரும் “கப்சிப்”
உதட்டில் விரலை வைத்து ஜாடை செய்தபடி எல்லாரையும் ஒருமுறை பார்த்து எச்சரிக்கை செய்தேன்.
“சர்க்கஸ் மாமா கோவிச்சுப்பார்…. மூச்சு விடக்கூடாது என்று நான் ரகசியமான குரலில் சொன்னேன்.
“குட்டியும் குளிக்கப் போறதா?” அதே கிசுகிசுத்த குரலில் கிச்சன் கேட்டான். ஜாடையாலேயே. பொறுத்திருந்து பார்க்கும்படி சொன்னேன். பெரியவர்கள் கும்பல்கூட மூச்சுப் பிரியவில்லை.
குட்டியானை துருதுருவென்று, நின்ற இடத்தில் இருக்காமல் அலைந்தது. மானேஜர் அதைத் தட்டிக் கொடுத்தார். தடவிக் கொடுத்தார். சின்னக் குழந்தைபோல அவர் உடம்போடு உரசி அது விளையாடிற்று.
அவர் ஜாடை செய்ததும் கம்பெனி ஆட்கள் நெருங்கி வந்தார்கள். அரை நிமிஷத்தில் அவரிடமிருந்து உத்தரவுகள்.
ஆட்களின் தலை அசைப்பு!
கொண்டுவந்த பெரிய சிறிய கயிறுகளை எல்லாம் நான்கு பக்கமும் ஓர் அமைப்பில் கிடத்தினார்கள். தயார் என்பதாக ஆட்கள் தலை அசைத்ததும் முதலாளி குட்டியினருகில் வந்து நின்றார். அவர் கையில் ஒரு குச்சி!
ஏரிக்கரையில் இவ்வளவு அமர்க்களம் நடந்து கொண்டிருந்த போதிலும் நடுவே மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்த அம்மா யானை இன்னமும் அசையவில்லை.
குச்சியும் கையுமாக வந்து குட்டியின் பக்கத்தில் நின்றார் மானேஜர்.
என்ன செய்யப் போகிறார்?
சுளீர் என்று ஒரு அடி. விழுந்தது குட்டி யானையின் மேல்தான்! அது ஒரு துள்ளு துள்ளிற்று.
“அடப்பாவி!” கும்பலிலிருந்து எழுந்த ஒரு குரல் உடனேயே அடங்கிவிட்டது. திகைத்துப் போய் நானும் நின்றேன்.
இன்னும் ஓர் அடி. இப்போது சற்று பலமான அடிதான்.
குட்டியானை கத்திற்று. இரண்டு பேர் அதைப் பிடித்துக் கொண்டார்கள் அசையவிடாமல் என்ன கண்றாவி இது?
மானேஜர் பார்த்ததைத் தொடர்ந்து எல்லார் பார்வையும் ஏரிக்குள் சென்றது.
கல்லுளிமங்கன் போல அசையாமலிருந்த யானை என்ன விஷயம் என்று கேட்பது போல கரைப் பக்கம் பார்த்தது.
மூன்றாவது அடி! குட்டி ஹோவென்று பயங்கரமாக அலறிற்று. கரையில் பயங்கலந்த நிசப்தம்.
ஏரிக்குள் யானை இப்போது நன்றாகத் திரும்பிற்று கரைமீது குட்டியைப் பார்த்திருக்க வேண்டும் குரல் அடையாளம் காட்டியிருக்குமோ?
அடுத்த கணம் மளமளவென்று கரையை நோக்கி வேகமாக வரத் தொடங்கிற்று.
“கெட் ரெடி!… கபர்தார்…. க்விக் ஆக்ஷன்!” மானேஜர் குரல் கேட்ட அடுத்த வினாடியே ஆட்கள் உஷாரானார்கள்.
யானை கரைமீது ஏறிவிட்டது. கோபத்துடன் கத்திற்று. நாலைந்து ஆட்கள் குட்டியை அதன் அருகே தள்ளிவிட்டார்கள்.
தாயைக் கண்டதும் அது துள்ளி ஓடி பக்கத்தில் சென்று அதனுடன் ஒட்டிக்கொண்டது.
“எஸ்!… நௌ… க்விக்!” நாலா பக்கத்திலிருந்தும் ஆட்கள் பாய்ந்து வந்தனர். பெரிய தாம்புக் கயிற்றைப் பக்கத்துக்கு நான்கு பேராகத் தூக்கி யானையின் முதுகின்மீது எறிந்தனர். வேறு சிலர் அதே வேகத்துடன் வயிற்றைத் சுற்றி இறுக்கினர். தும்பிக்கையைக் சுற்றிக்கயிற்றை எறிந்து இழுத்துப் பிடித்துக் கொண்டனர். அதற்குள் நான்கு கால்களும் கனமான கயிறுகளால் பிணைக்கப்பட்டன. எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் நடக்கும் ஜாலவித்தை மாதிரி அவ்வளவு வேகத்தில் நடந்தது. கூட்டத்தோடு நானும் திறந்த வாய் மூடாமல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், இத்தனை அமர்க்களமும் தேவை இல்லை என்பது போல அம்மா யானை தன் ஆவேசமெல்லாம் அறவே அடங்கிகுட்டியைத் தன்னுடன் அணைத்துப் பரிவோடு தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் முதுகின் வழியே ஏரி ஜலம் இன்னமும் கொட்டிக் கொண்டிருந்தது.
நிம்மதியான ஒரு பெருமூச்சு எல்லாரிடமிருந்தும்! குரல் கொடுத்துக் கொண்டே மெதுவாக யானையை நெருங்கினார் மானேஜர். அது சமாதானமாகிவிட்டது என்பது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவர் அதைத் தட்டிக் கொடுத்துத் தடவிவிட்டபோது அது அடங்கி நின்றது.
“ஜாக்கிரதையாகக் கூட்டிக்கிட்டு வாங்க ரெண்டையும். தப்புத்தண்டா ஏதானும் ஆச்சு, தொலைச்சுடுவேன்” என்று நான் புரிந்துகொண்ட ஹிந்தியில் ஆட்களுக்கு உத்தரவு போட்டுவிட்டு நகர்ந்தார்.
பிரமிப்பு அடங்கி அமைதியான நான் கையை நீட்டினேன்.
“வெல்டன் ஸார்! மார்வலஸ். கன்கிராஜுலேஷன்ஸ்!” என்றேன்.
“தாங்க்யூ!” என்றார். கைகுலுக்கிவிட்டு புன்சிரிப்புடன். லாரியை நோக்கி நடந்தார்.
வீட்டுக்கு வந்ததும் அக்காவிடம் விவரமாக எல்லாம் சொன்னேன். அம்பிக்கு சாதத்தை ஊட்டிக் கொண்டே கவனமாகக் கேட்டாள்.
“ஏம்மா! வரவே மாட்டேன்னு நின்னுண்டிருந்ததே யானை! ஆனா குட்டியை சர்க்கஸ் மாமா அடிச்சபோது மட்டும் ஏன் கரைக்கு வந்தது? நம்ம மாமாவுக்கும் தெரியலே! |
அவள் ஒரு பெருமூச்சு விட்டாள். பிறகு என்னைப் பார்த்தபடி, “தெரியாமயா சொல்றா பெத்த மனம் பித்துன்னு!” என்று அம்பியின் தலையை வருடினாள்.
அப்போதுதான் எனக்கும் புரிந்தது!
