
அந்த
ஆடு மேய்க்கும் சிறுமியை
ஆடுகள் மலைக்காட்டுக்குள்
அழைத்துக்கொண்டு போய்
ஒரு மரத்தடி பாறையருகே
விட்டு விட்டு மேய செல்வது
வழக்கம்
மாலை ஆடுகள் அவளை
அழைத்துக்கொண்டு வீடு
திரும்பும் வரை
அவளுக்கு அந்த பாறையில்
இருக்கும் பெயர் தெரியாத
ஒரு சாமி சிலையே துணை
இடத்தை சுத்தம் செய்து
சிலையை குளிப்பாட்டி
காட்டுப் பூக்களால்
அலங்கரித்து வீட்டிலிருந்து
கொண்டு வந்த விபூதி
குங்குமத்தை பூசி
தன் சாப்பாட்டில் கொஞ்சம்
படையல் வைத்து
பக்தி சிரத்தையாய்
கும்பிட்டு
அதனுடன் கதைகள் பேசி
காத்திருப்பாள் ஆடுகள்
திரும்பி வரும் வரை.
சில நாட்கள் இடைவெளி
வயதுக்கு வந்து விட்டதாய்
சொல்லி.
அதன் பின்
மீண்டும் ஆடு மேய்க்கும்
படலம் தொடங்கியது
அதே ஆடுகள்
அதே மலைக்காடு
அதே பாறை
அதே சாமி
வழக்கம் போல் அலங்காரங்களை முடித்தவளுக்கு
கூச்சமாய் இருந்தது
தன் தாவணி முந்தானை
ஓரம் சிறிது கிழித்து
அதை அந்த சாமிக்கு
ஆடையாக்கினாள்.
