போனவாரம் வியாழக்கிழமை நான் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் வண்டியில் பங்களூர் சென்றேன். அதுதான் கிடைத்தது. முதல்நாள்தான் ரிசர்வ் செய்திருந்தேன். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பங்களூர் செல்கிறேன். என் உறவினருக்கு உடல்நிலை சரியில்லை என்று இந்த முறை சென்றேன். அவர் மல்லேஸ்வரம் என்ற இடத்தில் இருக்கிறார். 79 வயதாகும் அவர் நடப்பதில் சிரமப்படுகிறார். ஒரு காலத்தில் அவர் நடப்பதுபோல் யாரும் அவ்வளவு வேகமாக நடக்க மாட்டார்கள். நான் நடப்பதில் மோசம்.
இந்த டபுள் டக்கர் வண்டியும் மோசம். ஆறடி உள்ள நான் உட்காரச் சிரமப்பட்டேன். மூன்று சீட்டுகளை நெருக்கி நெருக்கிப் போட்டிருந்தார்கள். மூன்று சீட்டுகளுக்கு மூன்று பேர்களும் வந்துவிட்டால் அதை விட மோசமாக எதுவும் இருக்க முடியாது. ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் அவசரமாக பாத்ரூம் போக வேண்டுமென்றால் மற்ற இருவரின் கருணை நிச்சயமாக வேண்டும்.
இந்தச் சீட்டை விட மோசமானது. லட்ரீன். சகிக்க முடியவில்லை. போவதற்கே அருவெறுப்பாக இருந்தது. அவ்வளவு பணம் வாங்கும் ரயில்வே நிர்வாகம், இந்த லட்டீரினின் பகுதிகளைச் சுத்தம் பண்ணுவதில்லை. லட்ரீனுக்குள் போவதற்கு முன் எந்த நோயும் தொற்றிக்கொள்ளக் கூடாது என்று ஆண்டவனைப் பிரார்த்தனை செய்ய வேண்டியிருக்கிறது.
இதுமாதிரியான சங்கடமான சூழ்நிலையில்தான் நான் பங்களூர் சென்றேன். ஆனால் பங்களூரின் சீதோஷ்ண நிலை பிரமாதம். சென்னை வெயிலிருந்து தப்பிப்பதற்கு பங்களூர் ஓடிவிடலாம் போல் இருந்தது.
உறவினர் வீடு சிறிய அறைகளைக் கொண்ட இடம். மல்லேஸ்வரம் ரம்மியமாக ஒரே கூட்டமாக இருந்தது. பெரிய பெரிய கடைகள். சென்னையில் உள்ள பல கடைகள் அங்கேயும் வாசம் செய்ய ஆரம்பித்து விட்டன. முதல் நாளே நான் மல்லேஸ்வரத்தில் உள்ள தெருவில் நடக்க ஆரம்பித்தேன். நேராக நடந்து ஒரு பெரிய புத்தகக் கடையைப் பார்த்தேன். அங்கே 50 ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினேன். புத்தகத்தின் பெயர் : தி பைபிள் ஆப் க்ளே - ஜøலியா நவ்ரோ எழுதியது. இது ஒரு ஸ்பானிஷ் நாவல். எனக்கு இதுமாதிரியான நாவல் ஒன்றைப் படிக்க வேண்டுமென்ற ஆசை உண்டு.
மேலும் நான் ஒரு புத்தகப் பைத்தியம். குறிப்பாக பிளாட்பாரத்தில் கிடைக்கும் புத்தகங்களைப் பேரம் பேசி வாங்குபவன். பங்களூரில் நான் இருக்கும் இடத்தில் இதுமாதிரியான புத்தகக் கடை அதிகமாக இருக்கும்.
நான் புத்தகத்தோடு உறவினர் வீட்டுக்கு வந்தவுடன், உறவினர் கேட்டார் : üüஎன்னைப் பார்க்க வந்தீரா? இல்லை...புத்தகம் வாங்க வந்தீர்களா?ýý என்று சிரித்தபடி.
"உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். பங்களூர் வந்து ரொம்ப வருடம் ஓடிவிட்டது," என்றேன்.
அவர் பேப்பர் தவிர வேற எதுவும் படிக்க மாட்டார். கொஞ்ச நேரம் டிவி பார்ப்பார். இப்போது இருக்கும் உடல்நிலையில் அவர் பேப்பரை பொறுமையாகப் படிப்பதுகூட நின்று விட்டது. சாப்பிடும்போது சிரமப் படுகிறார். வாயில் சாதம் கொண்டு போவதற்குள் வழிந்து விடுகிறது.
முன்பெல்லாம் அவர் ரொம்பவும் சுறுசுறுப்பாக இருப்பார். எல்லா இடங்களுக்கும் அலுக்காமல் சுற்றிக்கொண்டிருப்பார். நடந்தே போவார். அவர் வீட்டில் சைக்கிள் கூட இல்லை. பெரும்பாலும் ஆட்டோவை தவிர்ப்பார். பஸ்ûஸ நம்பித்தான் பயணம் செய்வார். நான் பங்களுர் வந்தால் நடப்பதற்கு சங்கடப் படுவேன். மேடும் பள்ளமுமாய் ரோடு இருக்கும். மேலும் பங்களூர் சீதோஷ்ணநிலை எனக்கு எப்போதும் பிடிக்காது. டல்லாக இருப்பதுபோல் தோன்றும். சென்னையிலோ தாங்க முடியாத வெயில் இருந்தாலும் பொழுது தானாகவே போய்விடும்.
üüநாங்கள் விஷ்ணுவை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டதால்தான் அவன் வேண்டுமென்று அப்படிப் பண்ணுகிறான்,ýý என்றார் உறவினர்
üüஅவர் எப்போதும் இப்படித்தான் இருக்கிறார். அவருக்குக்கவலை வேறு...இந்தப் பையனுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமென்று,ýý என்று குறைபட்டுக் கொண்டார் உறவினர் மனைவி.
நான் இருந்த இரண்டு நாட்களிலும் அவர் பையன் வீட்டிற்கு வேலை முடிந்து தாமதமாய் வந்துகொண்டிருந்தான். உடனே சாப்பிட்டுவிட்டு யார் யாருக்கோ போனில் பதினோரு மணி வரை பேசிக்கொண்டிருப்பான். மெதுவாக தூங்கப் போவான்.
உறவினரைப் பார்ப்பதோடல்லாமல் அந்தப் பையனுக்கு திருமணம் விஷயமாக அறிவுரை கூற நினைத்தேன். நான் யார் அவனுக்கு அறிவுரை கூறுவதற்கு. இதை நினைத்து எனக்கு சிரிப்புதான் வந்தது. அவனுக்கு எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லை. என் மனைவியின் தங்கையின் மூன்றாவது பையனைத்தான் அவர்கள் வளர்த்து ஆளாக்கி உள்ளார்கள். முதலில் அந்தப் பையனுக்கே எதுவும் தெரியவில்லை. வளர்ப்பு மகன் என்று தெரிந்தவுடன், அவனுக்கு ஏகப்பட்ட கோபம். மேலும் பெண் வீட்டார்கள், பையனின் அப்பா அம்மா ஏன் ரொம்ப வயதானவர்களாக இருக்கிறார்கள் என்று கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். தாமதமாகப் பிறந்தானா என்றும் கேட்பார்கள். வேறு வழியில்லாமல் உண்மையான அப்பா அம்மா நாங்கள் இல்லை என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
அவர் மனைவி இன்னும் சொல்கிறார் : üüநாங்கள் ரொம்ப வயதானவர்களாகி விட்டோம். எங்களைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்கவில்லை. அடிக்கடி தெரு முனைக்குச் சென்று சிகரெட் பிடிக்கிறான்,ýý என்றார் அழாத குறையாக.
எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஸ்வீகாரம் என்பது இவ்வளவு பிரச்சினை ஆகிவிடுமா என்று யோசித்தேன்.
இன்னொரு நாள் எழுத்தாள நண்பர் இருவரைப் பார்க்கச் சென்றேன். என்னை அழைத்துப்போக ஒரு நண்பர் பங்களூரில் வசிக்கிறவர் கிடைத்தார். ஒரு காலத்தில் சென்னையில் வசித்தவர்கள் எழுத்தாளர்கள் இருவரும். இப்போது பங்களூரில் வாசம். முன்பு நான் பார்த்த மாதிரியே இருந்தார்கள். ஒருவர் விமர்சகர். அவரைப் பிடிக்காதவர்களை கிழி கிழியென்று கிழித்து விடுவார். நான் அவரைப் பார்த்தபோது எனக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளரைப் பற்றி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். பங்களூரில் இன்னும் தனிமைப்பட்டு இருப்பதாகப் பட்டது. அவர்களைப் பார்த்துவிட்டு நான் மல்லேஸ்வரம் வருவதற்கு ரொம்ப நேரம் ஆகிவிட்டது. உறவினர் வீட்டில் எல்லோரும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
உறவினர் வீட்டில் விஷ்ணு இருக்கும்போது அவர்கள் இருவரும் எதுவும் பேசவே பயப்பட்டார்கள். எதாவது பேசினால் பிரச்சினையாக மாறி விடும். கோபத்தில் பொருள்களைப் போட்டு உடைத்து விடுவான். அவர்கள் அப்படிப் பயந்தார்கள் அவனுக்கு.
நான் சனிக்கிழமை மதியம் கிளம்புவதாக இருந்தேன். அதே டபுள் டக்கரில். காலையில் அங்கே பக்கத்தில் உள்ள பூங்காவில் நடக்க ஆரம்பித்தேன்.
தனி அறையில் விஷ்ணு தூங்கிக்கொண்டு இருந்தான். அந்தக் காலை நேரத்தில் வெகு நேரம் தூங்கிக் கொண்டிருந்தவனை அவர்கள் எழுப்பவில்லை. நான் பக்கத்தில் நடக்கச் சென்று விட்டு தாமதமாக வீட்டிற்கு வந்தேன். இப்போது விஷ்ணு வீட்டில் இல்லை. எங்கே என்று அவர்களைக் கேட்டேன். யாரோ நண்பர்களுடன் மாலுக்குச் சென்று விட்டான் என்றார்கள். திகைப்பாக இருந்தது. மதியம் வரை அவன் வரவில்லை.
நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். உறவினரைப் பார்த்து உடம்பைப் பார்த்துக்கொள்ளச் சொன்னேன்.
üüநான் சாகிறதுக்குள்ளே இவனுக்கு நல்லபடியா கல்யாணம் ஆனா சரி,ýý என்றார் அவர். கேட்க வருத்தமாக இருந்தது. அங்கிருந்து கிளம்பி நான் பங்களூர் ரயில்வே நிலையத்திற்கு வந்து விட்டேன். அதே டபுள் டக்கர் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன்.
முன்பு மேல் பகுதியில் இருந்தேன். இப்போது கீழ் பகுதியில் இருந்தேன். வழக்கம்போல் நான் நகர முடியாத இடத்தில் மாட்டிக்கொண்டேன். எழுந்து பாத்ரூம் போவது எனக்குப் பிரச்சினையாக இருந்தது.
என் பக்கத்தில் அதாவது என் சீட்டிற்கு முன் சீட்டில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்கு 20 வயது இருக்கும். ஏதோ ஆங்கிலப் புத்தகம் படிக்துக்கொண்டு ஸ்டைலாக இருந்தாள். அவளுடைய டிரஸ்ûஸப் பார்த்து நான் திகைத்துவிட்டேன். ஒரு விலை உயர்ந்த பாவாடை மற்றும் சட்டை மாத்திரம் அணிந்திருந்தாள். விஷ்ணுவிற்கு சரியான ஜோடியாக அவள் இருப்பாள் என்று எனக்குத் தோன்றியது. நான் அவளைப் பார்க்கக்கூடாது என்று நினைத்து முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் என்னை அறியாமலேயே நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவளுடைய கவர்ச்சிகரமான உடைதான் என் மனதில் நிழலாடிக்கொண்டிருந்தது.
இந்த டபுள் டக்கர் வண்டியில் வெளியே பாத்ரூம் போவதற்கான கதவை அவ்வளவு எளிதாகத் திறக்க முடியாது. பலங்கொண்டு தள்ள வேண்டும். ஒவ்வொருமுறை தள்ளத் தள்ள கதவு சத்தம்போட்டு அலறும். நான் பெரும்பாலும் திறக்கச் சிரமப்படுவேன். மேலும் அதன் சத்தம் என்னைப் பயமுறுத்தும்.
இந்த வண்டியில் எல்லாவற்றையும் விற்க வந்துகொண்டே இருப்பார்கள். அப்படி வரும்போது ஒவ்வொரு முறையும் அந்த பலமான கதவைத் திறந்தபடியே வருவார்கள். அதனால் கதவு திறப்பதும் மூடுவதுமான சத்தம் கேட்டபடியே இருக்கும்.
என் வயதுக்கு மீறிய பார்வையை அந்தப் பெண்ணிடம் தவிர்க்க முடியாமல் வைத்துக்கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது. ஒருவிதத்தில் அது நியாயமில்லைதான். ஆனால் அவளுடைய உடலின் நளினம் என்னை இம்சித்துக்கொண்டிருந்தது. ஏன் இதுமாதிரியான உடையில் அவள் பயணம் செய்கிறாள் என்று யோசித்தேன். என் பெண்ணை விட வயதில் குறைந்தவளாக தென்பட்டாள். என் பெண் இதுமாதிரியான ஓர் உடையை உடுத்திக்கொண்டு வெளியில் வந்தால், ஏன் என்று கேட்டிருப்பேன். சத்தம் போட்டிருப்பேன். நவநாகரீக யுவதிகள் இப்படியெல்லாம் உடை உடுத்திக்கொண்டு வருவதால், பார்ப்பவர்கள் மனம் கெடாமல் இருப்பதில்லை.
நானும் எதாவது புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்கலாமா என்று யோசித்தேன். நான் கொண்டு வந்த தினசரி தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
அந்தப் பெண் திடீரென்று அவள் இருக்கையிலிருந்து எழுந்தாள். ரொம்ப குட்டைப் பாவாடை. பின் மெதுவாக நகர்ந்தாள். பாத்ரூம் போக கதவுப் பக்கம் வந்தாள். கதவை இழுத்துப் பார்த்தாள். திறக்க முடியவில்லை. பின் வேகமாகப் பிடித்து இழுத்தாள். அவள் இழுத்த வேகத்தில் நடக்கக் கூடாத நிகழ்ச்சி நடந்து விட்டது. அவளுடைய பாவாடை அவிழ்ந்து விழுந்து விட்டது. அவள் பதட்டம் அடைந்தாள். அவசரம் அவசரமாக அவளுடைய பாவாடையைத் திரும்பவும் எடுத்து மாட்டிக்கொண்டாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். குறிப்பாக என்னைப் பார்த்தாள்.
(நவீன விருட்சம் - அக்டோபர் 2016)