ஸிந்துஜா /சௌந்தரத்தின் ரோஜாப் பூக்கள்

மணிவேலுக்கு வாய்க்குள், கத்தி இணைக்கப்பட்ட துப்பாக்கியைக் கடவுள் வைத்திருக்க வேண்டும் என்று சௌந்தரம்  நினைத்தாள். அதிலும் அவளிடம் அவன்  பேசும்போது, கத்தியால் கிழிக்கப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, குற்றுயிரும், குலை உயிருமாய்  வேதனையில்  தான் கீழே விழுந்து கிடப்பது போன்ற உணர்விலிருந்து அவளால் தப்பிக்க முடியவில்லை. அவளைப் பார்த்தாலே அவனுக்கு எரிகிறது. அவள் எது சொன்னாலும் குற்றமாய்ப் படுகிறது. எது செய்தாலும் தவறு இழைத்து விட்டவளைப்போல அவளுக்குத் தண்டனை கொடுக்கத் துடிக்கிறான். இன்று மணிவேல் அவளைக் கண்டு காய்வதற்கு, சௌந்தரம் வாங்கிக்கொண்டு வந்த ரோஜாக்கொத்து பொம்மை வசதி செய்து கொடுத்து விட்டது. அவள் பதினைந்தாவது கிராஸ் பாபா கோவிலிலிருந்து மார்கெட் வழியாக வரும்போது, சுப்ரமணியா ஸ்டோர்ஸ் அருகில் ஒரு கிழவன் கூடையில் ஏழெட்டுப் பொம்மைகளை வைத்து .விற்றுக்கொண்டிருந்தான். ரோஜாப் பூக்களை வைத்து செய்யப பட்டிருந்த ஒரு பொம்மை அவள் கவனத்தை ஈர்த்தது.  ஐந்து பூக்கள் கொண்ட  பொம்மையை மிக நேர்த்தியான கை வண்ணத்துடன் யாரோ ஒரு பெயர் தெரியாத  கலைஞன் செய்திருந்தான். அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
அவள் வீட்டுக்குள் நுழையும் போது மணிவேல் அவளை எதிர் கொண்டான். “என்ன இவ்வளவு பெரிய பொட்டிய  தூக்கிகிட்டு வந்திருக்கே?” என்று கையை நீட்டினான்.
அவள் அறையின் நடுவில் இருந்த மேசையின் மீது பெட்டியை வைத்துத் திறந்தாள். மிகவும் கவனமாக உள்ளே இருந்த பொம்மையை எடுத்து வெளியே வைத்தாள்.
“இது என்ன காசுக்கு புடிச்ச கேடு?” என்று அவன் அதைக் கையில் எடுத்தான். 
“எவ்வளவு அழகா இருக்கு, அப்படியே நிஜ பூ மாதிரி” என்று அவள் மலர்ச்சியுடன் சொன்னாள் 
“என்ன வில?” 
“ஐந்நூறு சொ¡னா¡ கடைசியில முன்னுத்து அம்பதுக்கு வாங்கிட்டேன்” என்றாள்.
“உனக்கு ஏதாவது அறிவு இருக்கா? அம்பது ரூபா கூட யாரும் குடுக்க மாட்டான் இதுக்கு. இப்ப என்ன கொண்டாட்டம்னு இதைப் போய் வாங்கியாந்தே? எல்லாம் சம்பாதிக்கிற திமிரு” என்று கோபத்துடன் அவளைப் பார்த்துக் கத்தினான்.
 அவள் பதில் அளிக்கும் முன், “ஐயோ, அம்மா!” என்று அவன் கூவினான். அவன் கைகள் தடுமாற, அவள் பாய்ந்து சென்று கீழே விழவிருந்த பொம்மையைப் பிடித்துக்கொண்டாள். அவன் வேதனை பொறுக்காது இரைச்சலிட்ட படியே, கையை உதறினான். சௌந்தரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சில ரத்தத் துளிகள் தரையில் விழுந்து சிதறின.
அவள், “ஐயையோ, என்ன ஆச்சுங்க?” என்று பதறியபடி மணிவேலின் கையைப் பிடித்துப் பார்த்தாள். வலது கை விரல்களில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவள் பொம்மையைப் பார்த்தாள.¢  ஒரு ரோஜாவைச் சுற்றியிருந்த சில முட்களில், சிவப்புக் கறை காணப் பட்டது. 
“முள்ளு குத்திருச்சா?” என்று அவள் உள்ளே ஓடி, போரோலினை எடுத்து வந்து  பிதுக்கி அவனது கை விரல்களில் தடவினாள். 
அவன்  கை வலி பொறுக்க முடியாமல் முனகினான். சௌந்தரத்துக்கு அவன் மேல் இரக்கம் எதுவும் ஏற்படவில்லை. துச்சமாக அவளைப் பார்த்தும், வார்த்தைகளால் அவளை வதைத்தும் வரும் அவனுக்கு இந்தத்  தண்டனை வேண்டியதுதான் என்று நினைத்தாள். என்னென்ன பேசுகிறான்? அறிவு கெட்டவள், சம்பாதிக்கும் திமிர் பிடித்தவள், ஏமாளி. இந்த இரண்டு வருஷத்தில் அவன் வேலைக்கு என்று ஆறு மாதம் போயிருந்தால் பெரிய விஷயம். எங்கும் அவனால் தொடர்ந்து நிலைத்திருக்க முடியவில்லை. சிபாரிசினால் அவனை வேலைக்கு எடுத்தவர்கள், அவனது திறமையின்மையால் சலிப்புற்று துரத்தி விட்டார்கள். சில இடங்களில் விருதாப் பேச்சு பேசி வேலையைப் போக்கிக்கொணடான்.   
அவர்களுக்குக் கல்யாணமாகி ஐந்து வருடமாகப் போகிறது. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. முதல் இரண்டு வருஷங்கள் பொறுமையுடன்  காத்துக்கொண்டிருந்தபோது, மணிவேல் அவளிடம் குற்றம் கண்டு பிடித்துக்கொண்டிருந்தான். பொறுக்க முடியாமல் அவள் டாக்டரிடம் சென்று எல்லா சோதனைகளையும் செய்து முடித்தபின், அவளிடம் குறை எதுவும் இல்லை என்று வந்து விட்டது. அவனிடம் அதே மாதிரியான பரிசோதனைகளைச்  செய்துகொள்ளச் சொல்லியபோது மறுத்துவிட்டான். தவிர அவள் மீதிருந்த ஆங்காரத்தை அது அதிகப் படுத்திவிட்டது.
அவர்களுக்குக்  கல்யாணமான ஆறு மாதங்கள் வரை வாழ்க்கை சுமுகமாக இருந்தது. அவ் வாழ்க்கை எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்காவிட்டாலும், துன்பத்தைத் தரவில்லை. ஆனால் அதற்குப்பின்  மணிவேலுவின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தது. அவனை விட அவள் அழகாக இருந்தது அவளின் குற்றமா? அவளது பெற்றோர்கள் ஒரே பெண் என்று செல்லமாக வளர்த்தாலும், சீரான பெண்ணாக அவள் வளர்ந்தாள். எப்போதும், பிறரிடம் அன்பாக இருப்பது, எவரையும் மரியாதையுடன் நடத்துவது, இயலாதவர்களிடம் பரிவுடன் இருப்பது என்று சுற்றும் முற்றும் இருந்தவர்கள் பாராட்டும் விதத்தில் இருந்தாள். அந்த அகத்தின்   அழகு முகத்தில் பதிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
மணிவேல் அழகன் இல்லை என்றாலும், அவன் பார்ப்பதற்கு மோசமாக இருக்கவில்லை. சற்றுப் பருமனான  உடம்பு. ஆனால் அவனுக்குத் தனது உயரம் பற்றி ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை மனதுக்குள் வேரூன்றி விட்டது. அதற்கு ஏற்றாற்போல், சௌந்தரம் உயரமாகவும், ஒல்லியாகவும் வனப்புடன்  இருந்தது அவனுக்குள் இன்னும் எரிச்சலை அதிகப்படுத்தியது. 
“ரொம்ப ஆட்டம் போடாதே, அழகாயிருக்கேன்னு. இன்னும் அஞ்சு வருசம் போனா ஒரு பய உன்னை சீந்த மாட்டான்,” என்றான் ஒருநாள.¢        சௌந்தரம் பதிலளிக்கவில்லை. அவள் வார்த்தைகள் வேறு ஏதாவது சண்டையைக் கிளப்பி விடுமோ என்ற பயத்தில்.
“உக்காந்திருக்கா பாரு, வாயில கொழுக்கட்டைய வச்சிக்கிட்டு இருக்கிற மாதிரி. அவ்வளவு கர்வம் பொட்டச்சிக்கி,” என்று அவளது மௌனத்திற்காகவும் அவள் மீது பாய்ந்தான்.      
அவள் பதிலளிக்காவிட்டால் இன்னும் பேசுவான் என்று அவள் சொன்னாள்:   “ஆமா, நான்தான் ஊர் பூரா போயி தமுக்கடிச்சுகிட்டு இருக்கேன் அழகா இருக்கேன்னு. சும்மா கிடக்கிறவளையும் எதுக்கு நீங்க சீண்டிகிட்டே இருக்கீங்க?”
 “சும்மா கிடக்கிறவளா? நீயா? அதான் வீட்டு வாசல விட்டு நீ இறங்கினாலே, ஆன்னு பாத்து ஒலுக விட்டுக்கிட்டு தெரு பூரா நிக்கிறாங்களே நீயும் சினிமாக்காரி மாதிரி ஆட்டிகிட்டுதானே போறே? நீயா ஒண்ணும் தெரியாதவ?” என்று சத்தம் போட்டுச்சொன்னான் .
இதெல்லாம் வாசல் திண்டு மேட்டில் அவன் உட்கார்ந்து கொண்டு நடத்திய அட்டகாசம். அவர்கள் பக்கம் தெருவில் போன சிலர் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனார்கள். கதவை ஒட்டி நின்று கொண்டிருந்த சௌந்தரம் நகர்ந்து வீட்டுக்குள் போனாள.¢  
சௌந்தரம் இவ்வளவுக்கும் நல்ல தைரியசாலிதான். அவளுடைய அம்மாவைப்போல என்று அடிக்கடி அவளுடைய நெருங்கிய உறவினர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவளுடைய அப்பா சௌந்தரத்துக்கு  மூன்று வயதாகும்போது ஒரு விபத்தில் இறந்து விட்டார். சௌந்தரத்தின் அம்மா ஞானம் அதிகம் படித்தவளில்லை. வயிற்றுப் பசியும், குழந்தையின் எதிர்காலம் பற்றிய அநிச்சியமும், அவள் வயதின் உடல் தாகமும் வாழ்க்கையின் குரூரமான முகத்தைக் காட்டி அவளைப் பயமுறுத்தின. ஞானம் துணிந்து மறுமணம் செய்து கொண்டாள். அவளுடைய பால்ய கால சிநேகிதனை. ராமன் சௌந்தரத்தைத்   தன்   குழந்தை போலக் கண்ணில் வைத்துக் காப்பாற்றினான். அவர்கள் மூவரும் உலகத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. அதனால், நாளாவட்டத்தில், உலகம் அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டது. மணிவேலைத் தூக்கி எறிந்து பேசி விட சௌந்தரத்துக்கு சில நிமிஷங்களே போதும். ஆனால் திரும்பவும் இந்த முகத்தைத்தானே மறுபடியும்  இந்த வீட்டில் பார்த்து ஆக வேண்டும்! வாய் திறந்து சொல்லாவிட்டாலும், அவன் சோற்றுக்கு அவளைத்தானே நம்பியிருக்கிறான் என்ற இரக்க உணர்ச்சியும் அவளைப் பொறுத்துக்கொள்ள வைத்தது.
அவள் பொம்மையை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள். அந்த வீடு, கீழே ஒரு ஹாலும், கிச்சனும், மாடியில் ஒரு பெட்-ரூமுமாக இருந்தது. மாடியறையில் இருந்த அலமாரிச் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஷீரடி பாபாவின்  படத்திற்குக் கீழ், பொம்மையை வைத்தாள். கதவுகளற்ற அந்த அலமாரியின் இரு பக்க மர ஒழுங்கில், சர விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவள் சுவிட்சைப் போட்டதும், எழுந்த ஒளியில், ஐந்து ரோஜாப் பூக்களும் பிரகாசித்தன. அவள் துணியை நீரில் நனைத்து, ரத்தக்கறை  பட்டிருந்த பூவின் முட்களைத் துடைத்தாள். அப்போது முற்றிலும்  எதிர்பாராவிதமாக அவள் கைகளில்  ஒருவித குளுமை படர்ந்தது. அவள் வியப்புடன் அந்தப் பூவைப் பார்த்தாள்.  அதன் இதழ்கள் விரல்கள் போலவும், நடுப் பகுதி உள்ளங்கை போலவும் அந்தப் பூவில் அவளுக்குத் தென்பட்டது. அவளால் ஒரு கணம் தன்னையே நம்ப முடியவில்லை.
இப்போது, அவள் தூண்டப்பட்டவளாய்  மற்ற நான்கு பூக்களையும் நோக்கினாள். முதல் பூவின் இதழ், காது மடல் போல வளைந்து காணப் பட்டது. அடுத்தது  கூம்பிய இதழுடன்  வெண்மையான நாசியைப் போலிருந்தது. மூன்றாவது ஒரு சிரித்த வாயின் பிளவுபட்ட இதழைக் கொண்டிருந்தது. கடைசியாகப் பார்த்த ரோஜாப் பூவின்  இரு இதழ்களில், யாரோ வட்டமிட்டு, மையால் அலங்கரித்த கறுப்பு நிறக் கண்கள் தென்பட்டது போல  ஒருவித பிரமை அவளுக்கு ஏற்பட்டது.  திடீரென்று சௌந்தரத்துக்கு  ஒரே நேரத்தில் ஆச்சரியமும்  பயமும் தோன்றின. அவள் தன்னைச் சுற்றிப் பார்த்தாள். எவ்வித மாறுதலும் இன்றி உலகம் சுற்றிக்கொண்டு இருப்பது போலத்தான் இருந்தது. அவள் இன்னும் விடுபடாத உணர்ச்சிகளுடன் விளக்கை அணைத்து விட்டுக் கீழே கிச்சனுக்குச் சென்றாள். 
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதே இருவருக்கும் சண்டை வந்து விட்டது. அவள் அலுவலகத்தில் மேலதிகாரியாக இருந்த பரமேஸ்வரனிடம் நாலு மாதமாக மணிவேலுக்கு வேலை கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியில் அவர் ஒரு கூரியர் கம்பனியில் வேலை வாங்கிக்கொடுத்தார.¢  முதல் நாளாக அன்று அவன் வேலைக்குச் செல்ல வேண்டும். தனக்கு அந்த வேலையில் இஷ்டம் இல்லை என்றும், வீடு வீடாக ஊர் பூராவும் அலைய முடியாதென்றும் மறுத்து விட்டான்.
அவனிடம் கொஞ்சம் நைச்சியமாகப் பேசித்தான் காரியத்தை முடிக்க வேண்டும் என்று சௌந்தரத்திற்குத் தோன்றிற்று.
“என்னங்க இது, எவ்வளவோ கஷ்டப்பட்டு வாங்கியிருக்கு. போயி பார்த்துட்டு வந்தாதானே தெரியும் எப்படி வேலைன்னு,”  என்று அவன் முகவாயைத் தன்  கையில் தாங்கிக்கொண்டு புன்னகை செய்தாள்.
அவன் முரட்டுத் தனமாக, “இப்படி தளுக்கி மினுக்கிதான் இந்த வேலையை வாங்கினயாக்கும்?” என்று கேட்டான். 
அவளுக்குச் 'சுரீ'ரென்றது.
வேகமாக எழுந்து அவன் மீது காறித் துப்பினாள். “சீ, நீயெல்லாம் ஒரு மனுசனா?” 
அவள் தன்னைக் காறித் துப்புவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.  தன்னை ஒருமையில் வேறு அழைத்து விட்டாள் என்று பொங்கி எழுந்தான். “என்னடி மரியாதை கெட்டுகிடக்கு?  நாக்க இழுத்து அறுத்து  போட்டு பிடுவேன.¢ சாக்கிரத,” என்று அடிக்க  வ௮தா¡.
“ஆமா. இவரு அறுக்கற வரையிலும் எங்க கை புளியங்காய் பறிச்சுகிட்டு கிடக்கும்,” என்றாள் அவள் பதிலுக்கு.
“அட என்னடி  சும்மா ரப்பு பண்ணிக்கிட்டே இருக்க,” என்று அவள் கையை முறுக்கினான்.
அவள் வலி பொறுக்க முடியாமல் ‘ஆ’ என்று அலறினாள்.
அப்போது ஒரு விதமான ஒலி  கேட்டது. உறுமலைப் போல. மணிவேல் சௌந்தரத்தின் கையை விட்டுவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தான.¢  அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை.
சௌந்தரம் அந்த சப்தம் வந்த திக்கைப் பார்த்தாள். வாய் வடிவத்தைக் காண்பித்த ரோஜாப் பூவின் மீது அவள் பார்வை பட்ட போது அந்தப் பூவின் வாய் வடிவம் திறந்து மூடி மறுபடியும்  திறந்து மூடியதைப் பார்த்தாள்.¢ .அவள் உடல் சிலிர்த்தது....     
மாலை அவளது அம்மாவைப் பார்க்க என்று சௌந்தரம் சிவாஜி நகர் சென்றாள.¢  கையில் பணமில்லை. அம்மாவிடம் கேட்கலாம் என்று நினைத்துதான் போனாள். பிற்பகல் வெளியே சென்ற மணிவேல் அவள் கிளம்பும் வரை வரவில்லை. இனிமேல் வருவதென்றால் குடித்து விட்டுத்தான் வருவான் என்று வெறுப்புடன் நினைத்துக்கொண்டே அவள் சென்றாள்.  
ஞானம்  சௌந்தரத்தைப் பார்த்ததும், “ஏன் மூஞ்சி இப்படி சுருங்கி கிடக்கு? அவன் இன்னிக்கி புது வேலைக்கி போக மாட்டேன்னு சொல்லிட்டானா?” என்று கேட்டாள்.
சௌந்தரம் அன்று காலையில் நடந்ததைக் கூறினாள்.  
“அந்த மலட்டுப் பயலுக்கு திமிரைப் பாரேன். நான் எவ்வளவோ தடவே உன் கிட்ட சொல்லிட்டேன். அவனை விட்டுட்டு வான்னு. உன்னை உறிஞ்சறதோட இல்லாம, தேவடியா பட்டம் வேற குடுக்கறானா? அந்த நாய வச்சுகிட்டு இன்னும் நீ எதுக்குத்தான் பாவம் புண்ணியம்லாம் பாக்குறயோ?” என்று ஞானம் பெண்ணைத் திட்டினாள்.
“இப்ப வர வர  பேச்செல்லாம் ரொம்ப அசிங்கமா போச்சும்மா. வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தைதான்,” என்றாள் சௌந்தரம்.        “அவனுக்கு ராஜா மாதிரி, வீட்டுல உக்கார வச்சு சோறு போடணும் காலேலேர்ந்து.”
டி.வில சினிமா பாக்கணும். தினம் குடிக்கணும்.  அவன் வேலைக்கு போகக் கூடாது. பொண்டாட்டி அவன் கால்ல விழுந்து கிடக்கணும். அவ வேலைக்கி போயி சம்பாரிச்சிட்டு வந்து அவன் காலடியில போட்டுறணும். எனக்கும் வெறுத்து கிட்டு வருது,” என்றாள் சௌந்திரம்.  அவள் இமை ஓரத்தில் கண்ணீர் பளபளத்தது.
“சரி, அழுது என்ன புண்ணியம்? உங்கப்பா வரட்டும். ஒழுங்கா இருக்கானான்னு கடைசி கடைசியா ஒரு வார்த்தை கேட்டுறலாம். ஒண்ணுக்கும் மசியலேன்னா, நீ இங்க வந்திரு. மத்ததெல்லாம் அப்புறம் பாப்போம். உன் மூஞ்சிய  பாத்தாலே பேஜாரா இருக்கு. ரெண்டு தோசை சாப்பிடு, என்று வருத்தத்துடன் சொல்லிக்கொண்டே உள்ளே போனாள்.
சௌந்தரத்துக்கு மனது வெறுத்துக் கிடந்தது. கல்யாணத்துக்கு முன்பு அவள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள்? போயும் போயும் இந்த மணிவேல் தானா அவளுக்கு கிடைக்க வேண்டும்? அவள் என்ன நொண்டியா, முடமா  இந்த மாதிரி ஒரு கேடு கேட்டவனிடம் தள்ளி விட? ஆனால் மணிவேல் அப்போது ஒரு வேலையில் இருந்தான். அவனது பெற்றோர் வசதியாக இருந்தார்கள் என்று அவளை அவனுக்குக் கட்டிக் கொடுத்து விட்டார்கள். அவன் குணம் கெட்டவன் என்று யாரும் தீர விசாரிக்கவில்லை. 
அரைமணி கழித்து அவள் கிளம்பினாள். அம்மாவிடம் கேட்ட போது அவள் இரண்டாயிரம் கொடுத்தாள். அதில் ஆயிரம் ரூபாய் மளிகைக்காரனுக்குக் கொடுக்க வேண்டும். அடுத்த மாத சம்பளம் வர இன்னும் ஒரு வாரம் இருந்தது. அது வரை மிச்சப் பணத்தில் நாள்களை ஓட்ட வேண்டும்.   
சௌந்தரம் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, மணிவேல் வந்திருக்கவில்லை. அவள் மாடிக்குச் சென்று  விளக்கை ஏற்றினாள.¢  வழியில் வரும்போது வாங்கிக்கொண்டு வந்த பூச்சரத்தை பாபாவுக்குச் சார்த்தினாள். படத்திற்குக் கீழே இருந்த பொம்மை குத்து விளக்கு வெளிச்சத்தில் சாந்தமாக உட்கார்ந்திருந்தது. தலைக்கு வைத்துக் கொள்ளளலாம்  என்று  இருந்த பூச்சரத்தில் ஒரு துண்டு போட்டு, பொம்மைக்குச் சார்த்தினாள்.  அப்பூக்களை அவள் கனிவுடன் பார்த்தாள். இனம் தெரியாத ஒரு வித சிநேகம், உறவு அவற்றோடு தனக்கு இருப்பதாக அவளுக்குத் தோன்றிற்று.
மணிவேல் வீட்டுக்கு வந்தபோது இரவு பத்து மணியாகி விட்டது. குடிமயக்கத்தில் தள்ளாடியபடியே வந்த அவனை, இன்னொருவன் தாங்கிக் கொண்டு வந்தான். இன்னொரு பொறுக்கி. அவள் கதவைத் திறந்ததும் இருவரும் உள்ளே வந்தார்கள். ஹாலில் இருந்த நாற்காலியில் மணிவேல் சாய்ந்தான். வந்தவன் அவளைப் பார்த்தவிதம் அவளுக்குப் பிடிக்கவில்லை. எதோ சொல்ல அவன் வாயைத் திறந்தபோது, அவள,¢ “நீங்க நாளைக்கு வாங்க,” என்று வாசலைக் காட்டினாள். மணிவேல் இதை எதையும் கவனித்ததாகத் தெரியவில்லை. 
அவள் அவனைக் கீழே விட்டுவிட்டு மாடிக்குச் சென்றாள். சாப்பாடு வேண்டும் என்றால் அவன் நினைவுக்கு வரும்போது தானே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விடுவான். அவள் படுத்துக் கொண்டாள். அலை பாயும் மனதாலும், அலைக்கழிக்கப்பட்ட நினைவுகளாலும்  வெகு நேரம் தூக்கம் வரவில்லை.
காலையில் எழுந்து, குளித்து முடித்து சமையலை முடித்தாள். வியாழக் கிழமை என்று பாபாவின் படத்தை மாடியிலிருந்து கீழே கொண்டு வந்து துடைத்து சுத்தம் செய்தாள். அந்தப் பணிவிடை பொம்மைக்கும் கிடைத்தது. அவள் மேசை மீது பொம்மையை வைத்துத் துணியால் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மணிவேல் வந்தான். 
அவளருகே வந்து, “எனக்கு ஒரு ஐநூறு ரூபாய் குடு,” என்றான். சௌந்தரம், “பணமா? எதுக்கு?” என்றபடி பொம்மையைத் துடைத்தாள்.
“ஓ, உங்களுக்கு கணக்கு  சொல்லணுமோ?” என்றான் எரிச்சலுடன். 
“எங்கிட்ட பணமில்ல,” என்றாள் அவள். 
“உன் பர்சிலதான் ரெண்டாயிரம் வச்சிருக்கியே,” என்றான். திருடன், திறந்து பார்த்திருக்கிறான்.
“அது வீட்டு செலவுக்கு. இன்னும் மளிகை கடனே தீர்ந்த பாடில்லே,” என்றாள்.  
  “எங்கேர்ந்து பணம் கிடைச்சது?” 
அவள் பதில் பேசாமல், கையில் வைத்திருந்த துணியில், கொஞ்சம் எண்ணெய் விட்டு, ரோஜாப் பூக்களைத் துடைக்கத் தொடங்கினாள்.
அவன,¢ “கேக்கறேன்ல” என்று அவள் தோளைத் தொட்டான். 
அவள் அவன் கையைத் தட்டி விட்டு, வேலையில் ஆழ்ந்தாள்.
“எவெங் கிட்டே போயி வாங்கிகிட்டு வந்தே?” அவன் குரல் உயர்ந்தது. 
“இதப் பாரு. அனாவசியமா பேசாதே. எங்கம்மா கிட்டே போயி கடனா வாங்கி கிட்டு வந்திருக்கேன். உனக்கு குடுக்க என்கிட்டே பணம் இல்லே,” என்று அவனைப் பார்க்காமலே பேசினாள். கைகள்  பொம்மையைச் சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தன.
“ஏண்டி, எப்போ கேட்டாலும் அம்மா பணம் குடுத்தா, அம்மா பணம் குடுத்தான்னு சொல்றியே அவ இன்னும் மூணாவது புருஷனா  யாரையாவது வச்சிருக்காளா?” என்று அசிங்கமாகச் சிரித்தான். பிறகு திடீரென்று அவள் முற்றிலும் எதிர்பாராதவாறு மேசையில இருந்த  பொம்மையை எடுத்துத் தன்  கைகளில் வைத்துக் கொண்டான்.  இரு கைகளாலும் அதை  ஏந்திக்கொண்டு, “இந்த கேடு கேட்ட பொம்மைக்கு பணத்தை தூக்கி எறிஞ்சிருக்க,  நான் கேட்டா பணம் இல்லியாம். அம்மாவும்  மகளும் எப்பிடிடி இந்த மாதிரி தேவிடியாத்தனம் பண்றீங்க? கேடு கேட்ட நாய்களா!” என்று கேவலமாகத் திட்டினான்.
சௌந்தரம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே  பொம்மையின் காது ரோஜா விடைத்தது. கறுப்புக்கண்  ரோஜாவின் கண்கள்  சிவப்பாக ஜொலித்தன. மணிவேலிடம் இருந்த  பொம்மை அவன்  முகத்தை நோக்கி அவனது கைகளை இழுத்துச் சென்றது. 'சப்'பென்று அடிக்கும் சத்தம் கேட்டது. “ஐயோ! அம்மா” என்ற பிளிறல் மணிவேலின் வாயிலிருந்து எழுந்தது. சௌந்தரத்தால் அவள் பார்த்த காட்சியை நம்ப முடியவில்லை. பொம்மையில்  இருந்த வாய் ரோஜா மணிவேலின் வாயைக் குதறிக் கொண்டிருந்தது. பற்கள் சிதற, நசுங்கிய வாயைப் பார்க்கச் சகிக்கவில்லை. அவன் சரிந்து கீழே விழுந்தான். அவன் விழுந்த வேகத்துக்கு, பொம்மையும்  கீழே விழுந்து சிதறி இருக்க வேண்டும். ஆனால்  அது அவன் கையிலேயே இருந்தது. அவன் கீழே விழுந்த பின், அது மெதுவாக நகர்ந்து முதலில் வலது கையிலும், பிறகு இடது கையிலும் அழுத்தமாக ஊர்ந்தது. மணிவேலின் கூக்குரல் இப்போது அதிகமாயிற்று. பொறுக்க முடியாத வேதனையில் அவன்  முகம் நசுங்கிக் கிடந்தது. அவனது கைகள் இரண்டும் ரத்தம் வற்றி சூம்பிப் போன மாதிரி கிடந்தன, எவ்வித அசைவும் இல்லாமல். பொம்மை அவன் வலது  கை அருகே சாய்ந்து கிடந்தது.
சௌத்தரம்  நடந்து சென்று பொம்மையைக் கையில் எடுத்தாள். சற்றுமுன் சுத்தம் செய்த ரோஜாப் பூக்களில், லேசாகத் தரைத் தூசி படர்ந்திருந்தது. அவள் மேசையின் மீது அதனை வைத்தாள். மணிவேலைத் தூக்கலாம் என்று அவன் அருகே சென்றாள்.
அப்போது வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
சௌந்தரம் விரைந்து சென்று கதவைத் திறந்தாள். பக்கத்து வீட்டு இளைஞனும், அவன் மனைவியும்.
“ஆன்ட்டி, ரொம்ப சத்தமா  இருந்திச்சே, எனி ப்ராப்ளம்?" என்றான் அவன்.
“ஆமா சந்துரு, அங்கிள் கீழெ விழுந்திட்டாரு திடீர்னு. நான் கிச்சன்ல இருந்தேன். சத்தம் கேட்டு ஓடி வந்து பாத்தா, கீழெ  கிடக்காரு. நல்ல  வேளை, நீங்க வந்தீங்க. உள்ள வாங்க,” என்று அவர்களைக் கூட்டிக்கொண்டு மணிவேல் கிடக்கும்  இடத்திற்குச் சென்றாள்.
மணிவேலைப் பார்த்ததும்  அவர்கள் இருவரும் "ஐயோ!" என்றார்கள். மூவருமாகச் சேர்ந்து அவனைத் தூக்கி மாடியில் இருந்த படுக்கையில் கொண்டு போய்ப் போட்டார்கள். அவள் நீரில் துணியை நனைத்து வாயைத் துடைத்து விட்டாள்  அவன் கண்கள் அவர்கள்  மீதே படர்ந்து கிடந்தன. 
மணிவேல் வாயையும், கையையும் அசைக்க முயன்றான். வாயிலிருந்து உருத் தெரியாத ஒலி வந்தது. கைகள் நகரவில்லை.
“அதுதான் எனக்கும் தெரியல மீனா,” என்றாள் சௌந்தரம்.
மணிவேலின் கண்கள் அவளை உறுத்து நோக்கின. 
சந்துரு, “பார்வையே சரியில்லையே ஆன்ட்டி. இன்னிக்கி காலையிலேயே போட்டுட்டாறா?" என்று ஆள் காட்டி விரலை வாய்க்கு அருகே கொண்டு சென்று கேட்டான். 
“எல்லாம் என் தலைவிதி” என்றாள் சௌந்தரம்.      


     .

.
.