வினோத் பரமானந்தன்/தீபாவளி

நரகாசூரனை
கொன்னதுக்கு
கொண்டாடுறோம்
தீபாவளி ன்ணு
பாட்டி சொல்ல…

“கொன்னதுக்கு” என்ன
கொண்டாட்டம்
என்ற குழப்பதுடனே
கொண்டாடத் தொடங்கினேன்
பால்யத்தின் தீபாவளியை …

மூணு மீட்டர் துணி எடுத்து
முக்கு கடை டெய்லர் கிட்ட
கொடுத்து
அடுத்த சில தீபாவளிக்கும்
போடுறாப்புல
அளவு குடுத்து…அதுக்காக
காத்திருந்தது
அம்புட்டு சொகம்…

தைச்சு வந்த சட்டையை
தினம், தினம்
வச்ச கண்ணு வாங்காம
அலமாரியில
வச்சு..வச்சு..பார்த்தேனே
அதுவொரு சொகம்…

சேர்த்து வச்ச காசுல..விளக்கு படம் போட்ட
வாழ்த்து அட்டை வாங்கி,
காந்தி படம் போட்ட 5 ரூபாய் stamp ஒட்டி..
மதுரை அக்காவுக்கும்,
மிலிட்டரி இருந்த அண்ணனுக்கும்
தனித்தனியா அனுப்பி வைச்சது
அம்புட்டு சந்தோசம்.

ஊரே வெடிக்குற
வெடி வெடிக்க…
தீபாவளிக்கு மொத
நாள்.. கைபிடிச்சு கூட்டிப்போய்
அம்மா வாங்கி தரும்
வெடிக்காமல்..
வெளிச்சம் தரும்
கம்பி மத்தாப்பு,
சங்கு சக்கரம்…
பூந்தொட்டி மாதிரி
பட்டாசுல..பாசம் தெரியும்…

அதிகாலை அஞ்சு
மணிக்கு..
எண்ணெய் தேய்ச்சு
குளிச்சு..

“இனி அடுத்த தீபாவளிக்கு தான்
குளிப்ப” என்ற அண்ணனின்
கிண்டலில் சிரிக்க..

அதே நேரத்தில் அம்மா
உளுந்த வடை பொறிக்க…

அவளுக்கு தெரிஞ்சு ஒன்னும் ,
தெரியாம ஒன்னும்
நான் எடுத்து கொறிக்க..

வானத்தில் சூரியன்
சோம்பலை முறிக்க..

பொல.. பொல.. ன்ணு விடிஞ்சு
வந்துடுச்சு தீபாவளி…

வரிசையா காலில்
விழுந்து…
வரிவசூல் செய்ததில்
ஒரு நூறு தேறும்…

அதே நேரம் அம்மா
ஆக்கி முடிச்சிருப்பாங்க
பொறிச்ச கோழி சோறும்..

நமக்கு.. பண்டிகைனாலே
பட்டாசு சத்தத்தோடு
பாப்பையா சத்தமும் இருக்கணும்ல…(அவர் தொனியில் படிக்கவும் )

வேல்முருகன் கொட்டாயில
டிக்கெட் வாங்க வேர்த்து,
மத்தியானம் காட்சி பார்த்து..

சாயங்காலம் சன் டிவில
இந்திய தொலைக்காட்சியில்
முதன் முறையாக ஓடாத ஒரு
படம் பார்த்து…

பாதி படம் பார்த்த
பிறகு தான்,

நாளைக்கு அறிவியலில்
கிளாஸ் டெஸ்ட்
அடிவயிற்றில்
புளியை கரைக்கும்…

படிப்பை பத்தி பயம்
வந்தும்..
“பண்டிகைக்கு யாராவது
படிப்பாங்களா “ன்ணு
எனக்கு நானே பதிலைச்
சொல்லி…

களைச்சு போய்
உறங்கிப்போன
உற்சாக தீபாவளி போல
இல்லை இப்போ…

வருஷமெல்லாம்
ஓடி…

Whatsapp இல்
தீபாவளி வாழ்த்து பாடி..

Zomatto வில்
சோறு தேடி…

போர்வைக்குள்ள
பொழுது போகும்
இன்றைய தீபாவளிகளில்

ஏனோ அன்றைய ஆனந்தம்
அணுவளவும் இல்லை…

ஆனாலும்
சொல்லிக்கொள்கிறேன்

“தீபாவளி வாழ்த்துகள் “..

       - 

2 Comments on “வினோத் பரமானந்தன்/தீபாவளி”

Comments are closed.