ஷண்முக சுப்பையா/அழகு

குழந்தை

வண்ண வண்ண மலரி லெல்லாம்
வந்தமரும்
வண்ணத்துப்பூச்சி
உன் பட்டுமேனியைத்
தொட்டுப் பார்க்க
ஒட்டி வந்தால்
எட்டிப் போவதேன்
வண்ணத்துப்பூச்சி !

வண்ணத்துப்பூச்சி

புழுதியான புழுதியெல்லாம்
அளைந்துவரும்
குழந்தையே
உன் அருமந்தக் கரங்களால்
என் உருவையே மாற்றிடுவாய்
ஒருவேளை
என் உயிரையே எடுத்திடுவாய்
ஆதலாலே
என் அருமந்தக் குழந்தையே
என்னை நீ
எட்டிநின்றே பார்த்திடுவாய்
என் அழகையெல்லாம்
பருகிடுவாய்.

ஷண்முக சுப்பையா/வாழ்க்கை – விருட்சம் நாளிதழ்