| இரா. நாறும் பூ நாதன்
கோயமுத்தூருக்கு ஒரு திருமண நிகழ்வுக்கு சென்று இருந்தேன்.
ஆர்.எஸ்.புரம் வழியாக கார் சென்று கொண்டு இருந்தது. மரங்கள் அடர்ந்த அழகான அந்த சாலைக்கு பெயர்: D.B.சாலை.
அந்தப் பெயரை அறிந்து கொள்ளவேண்டும் என ஆவல் ஏற்பட்டது.(நமக்கு வேற சோலி என்ன.)
ஒரு பெட்டிக்கடைக்காரரிடம் சாதாரணமாக விசாரிப்பது போலக்கேட்டேன்.
” டி.பி. ரோடு ன்னு போட்டுருக்கே..அதுக்கு என்ன அர்த்தம்.”
” தெரியாதுங்க..” என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டார்.
அருகில் நின்ற ஒரு ஆட்டோக்காரரிடம் விசாரித்தேன்.
” டி.பி.சாலைதானுங்க..முன்னாடியிருந்தே அப்படித்தானுங்க” என்றார்.
இதென்னடா ஒருத்தருக்கும் தெரிய மாட்டேங்குது ..
ரொம்ப படிச்ச ஆளு போல ஒருத்தர் எதிரே வந்து கொண்டிருந்தார்.
” எஸ்.. இட் இஸ் டி.பி.ரோடு.. பட் ஐ டோன்ட் நோ தி டீடெயில்ஸ் சார்..”
மத்தவங்க சொன்னதை அவர் ஆங்கிலத்தில் சொன்னார்.அவ்வளவுதான். மொத்தத்தில் யாருக்கும் தெரியவில்லை.
வீட்டுக்கு வந்து எனது பெரியப்பா தமிழாசிரியர் அருணாச்சலம் அவர்களிடம் விபரம் கேட்டேன்.
அவர்களுக்கு அப்போது வயது 102 . கோவையில் அதிக காலம் வாழ்ந்த பெருமைக்குரியவர்.(பின்னால் அவர்கள் இறக்கும்போது வயது 105 ) மெலிதான ஒரு சிரிப்பை உதிர்த்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார். விபரம் கேட்ட பின்பு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
திவான் பகதூர் சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார் சாலை என்பது தான் முழுப் பெயர். இடையில் சாதிப் பெயர் நீக்கி விட வேண்டும் எனச் சொல்லப்பட்ட போது திவான் பகதூர் ரத்தினசபாபதி என்றாகி, பின்னர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அது திவான் பகதூர் சாலையாகி, பின்னர் மேலும் சுருங்கி D.B.சாலையாகி விட்டது. திவான் பகதூர் என்பது பிரிட்டிஷ் காரர்கள் கொடுத்த ஒரு பட்டம்..நாட்டில் பல திவான் பகதூர் இருக்கிறார்கள்..
இந்த ரத்தினசபாபதி முதலியார் 20 வயதில் கோயமுத்தூர் முனிசிபாலிடி கவுன்சிலர் ஆனவர் .பின்னர் படிப்படியாய் உயர்ந்து 1921 இல் கோவை முனிசிபல் தலைவர் ஆனார் . கோயமுத்தூர் நகருக்கு சிறுவாணி தண்ணீரை அந்த காலத்தில் 50 லட்சம் ரூபாயில் (1921 இல் ) கொண்டு வந்தவர்.அதற்காகபிரிட்டிஷ் சர்க்காரிடம் வாதாடிப் பெற்றவர். கோவை நகருக்கு பைக்காரா மின்திட்டம் மூலம் மின்சாரம் கொண்டு வந்தவர். தொழிலாளர்களுக்கு உட்கார்ந்து சாப்பிட கான்டீன் வசதி ஏற்படுத்திக் கொடுத்தவர். கோவை நகரம் இன்று ஒரு அழகான நகரமாக திகழ்கிறது என்றால் அதற்கு இவரே காரணம்..
கோவை புற நகர் வளர்ச்சிக்கு திட்டம் தீட்டி, அழகுற வடிவமைத்தவர். நல்ல சிந்தனையாளர்.கோவையில் தமிழிசை சங்கம், கோவை சேக்கிழார் சங்கம் தோன்றக் காரணமாக இருந்தவர்.
இவரது நினைவாக உருவாக்கப் பட்ட நகரே R.S.புரம் (ரத்தின சபாபதி முதலியார் புரம்)
பெரியப்பா கோயமுத்தூரில் 75 ஆண்டுகாலம் வாழ்ந்தவர். அவர் விஷயங்களை சொல்லச்சொல்ல எனக்கு வியப்பு கூடிக்கொண்டேபோனது.
ஒரு ஆர்.எஸ்.புரம் என்ற பெயருக்குப் பின்னாலும், D.B.சாலைக்கு பின்னாலும் இப்படி ஒரு சரித்திரம் இருக்கிறது என்பது எத்தனை கோயமுத்தூர்காரர்களுக்கு தெரியும்?..ஏனுங்கோ..உங்களைத் தானுங்கோ…எல்லாம் பெயரைச் சுருக்கியதால் வந்த வினை..அவரவர் ஊரின் வரலாறை ஓரளவாவது தெரிந்து கொள்ளணும். சரிதானே ஐயா ? | |
ரொம்ப சரி. நம் முன்னோர்கள் பெருமை நமக்கு அவசியம் தெரியவேண்டும்.