என் வீட்டுப் பால்கனி வழியே…..

ஜெ.பாஸ்கரன்

காலையில் எழுந்தவுடன், டைனிங் டேபிளில் அமர்ந்து காபி குடிப்பது வழக்கம். மேற்கு பார்த்து இருக்கும் அந்த நாற்காலியில்தான் உட்காருவேன் என்பது எழுதப்படாத சட்டம்!

ஒரு தம்ளர் சுடுநீர் குடித்து, நேரே இருக்கும் கிரில் போட்ட பால்கனி வழியே பார்த்தால், அடர்ந்து, விரிந்து, பரந்து கிடக்கும் வேப்ப மரம் அரைத் தூக்கத்தில் நின்று கொண்டிருக்கும்!

மரக்கிளையில் வேகமாக அலைபோல உடல் நெளித்து ஓடும் அணில், ஒரு நொடி நின்று, முன்னங்கால்களை முகத்தருகில் கொண்டு சென்று, கழுத்தைச் சொறிந்து, இடது பக்கம் திரும்பி, எட்டிப் பார்ப்பதுபோல் தோன்றும் –

‘குட் மார்னிங்’ என்பேன் – வெட்கத்தில் ஓடி மறைந்து விடும். மாரி பிஸ்கட்டோ, முதல் நாள் தயிர் சாதமோ – காலையில் பால்கனி கதவு திறந்தவுடன் ‘கா கா’ என்று கரையும் காகங்களுக்கு உண்டு. வேப்ப மரக் கிளையில் கவனமாக நடந்து,

கிழக்கு மேற்காகத் திரும்பி, எங்கள் சமையலறையைப் பார்த்துக் கரையும் அந்தக் காகங்கள் அன்றைய விடியலை ரம்யமாக ஆக்கிவிடும்!பக்கத்து வீட்டு கேடரிங் சர்வீஸ் உணவைத் திருடித் தின்று விட்டு, அந்த வேப்ப மரமேறி, பாலகனி வழியே எங்கள் வீட்டில் குடித்தனம் நடத்த வரும் எலிகள், சில நேரங்களில் எலிப் பொறியில் மாட்டிக்கொண்டு விழிப்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்!

மேல்மாடி காலி என்பதால் – என் வீட்டைச் சொல்கிறேன் – வெயில் அதிகம் தெரியாமல் குளிர்ச்சியாக இருப்பதற்கும், மாலை வெயில் ‘பளிச்’ சென்று கண்களைக் குத்தாமலிருப்பதற்கும், காற்று இதமாய் வீசுவதற்கும் அந்த வேப்ப மரம் எங்களுடன் இருபது வருடங்களாக நட்புடன் இருந்து வந்திருக்கிறது!

சமையலறையை ஒட்டிய மொட்டை மாடியின் மூலையில், பெரிய அத்தி மரம் தனது கிளைகளை விரித்து, அடர்த்தியான கரும்பச்சை இலைகளுடன் பெரிய குடை போல – கோவர்த்தன கிரி போல – நிழல் கொடுத்துக்கொண்டிருக்கும். மரத்தைத் தாண்டி, அந்தப் பக்க வீடுகள், ஃப்ளாட்டுகள் எதுவுமே கண்ணுக்குத் தெரியாது. பக்கத்து வீட்டை வாங்கியவர்கள், ஒரு மாதமாக மராமத்து செய்து வீட்டைப் புதிப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு வாசலில் கேட்டை மறைக்கும் அளவிற்கு வளர்ந்து, பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்த இருவாட்சி மரம் மொத்தமாக வெட்டப்பட்டு, சாலையில் மலர்ந்தும் மலராத பூக்களுடன் கிடந்தது – வீட்டின் முகப்பு பளிச்சென்று எடுப்பாகத் தெரிகிறது –

குளிர்ச்சியும், நிழலும் கொடுத்து வீட்டிற்கு வருவோரை வரவேற்று நின்ற அந்த மரம் கொடுத்த நட்புக் கரங்களும் பூக்களும்தான் மிஸ்ஸிங் – கூடவே அழகும்!அத்தி மரம் வேரோடு சாய்க்கப்பட்டு, துண்டுகளாக அறுக்கப்பட்டு, சின்ன வேனில் சென்று விட்டது

– அது இருந்த மூலையில் ஒரு கிணறு, மூன்றடி உயரப் பிடிச் சுவருடன், நீல பிளாஸ்டிக் மூடியுடன் இருக்கிறது! மொட்டை மாடியில் வெளிச்சம் இப்போது கண்ணைக் கூசுகிறது – பின்னால் ஒரு வெள்ளை நிற இரண்டு மாடிக் கட்டிடமும், அதைத் தாண்டி, கேவா கலரில் ஐந்தடுக்குக் கட்டிடம் ஒன்றும், வெகு தொலைவில் வடபழனியில் உள்ள உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் நியான் விளக்கு போர்டு ஒன்றும் தெளிவாகத் தெரிகின்றன!

பக்கத்திலிருந்த வேப்ப மரமும், கிளைகள் கழிக்கப்பட்டு, மொட்டையாக நிற்கிறது – காலையில் கிளையில் ஓடிய அணில், திரும்பிப் பார்க்காமல் காற்றில் பறந்து மாடிக் கைப்பிடிச் சுவர் மீது குதித்துப் போனது!

காக்கைகள் கத்தியபடி மொட்டை மாடியில் சுற்றி வந்தன. பக்கத்து வீட்டு மாடியின் அந்தப் பக்கமும் ஒரு மரம் – மாமரம் – கிளைகள் கழிக்கப்பட்டு, சோகமாய் நின்றுகொண்டிருந்தது.

அதைத் தாண்டிய பால்கனியில், ஒரு பெண்மணி – காலை அலங்காரம் பார்த்தால், அந்த வீட்டு சர்வண்ட் மெய்ட் என்று தோன்றியது – காப்பி குடித்தபடி நின்றுகொண்டிருந்தது – கையில் மாப், ஆரஞ்சு நிற வாளியுடன், அரைக் கை பனியன் மாமா ஒருவரும் கண்ணில் தெரிந்தார்!அணில்களுக்கும், காக்கைகளுக்கும் இருக்கும் கோபத்தில் கொஞ்சமும் குறைந்ததல்ல என் கோபமும் – ஆனாலும் என்ன செய்ய! ‘குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்ததாம்’ என்பது போல,

மரம் நின்ற மண் தரையில் கான்கிரீட் ஸ்லாபுகள் பதிக்கப்பட்டு, (என் ஃப்ளாட்டிலும் இதே கதைதான் – ஆனாலும், மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் ஊறுவதற்கு என்றெல்லாம் வழி வைத்திருக்கிறார்கள்) அழகாக இருக்கின்றன – உஷ்ணக் காற்று வீசுகிறது! நான் இப்போதெல்லாம், கிழக்கு பார்த்த நாற்காலியில் அமர்ந்துதான் காலைக் காபி குடிக்கிறேன்! எதிரே தெரியும் சுவரில் பெரிய மரம் இருக்கும் – முடிந்தால் ஒரு அணிலுடன் – போஸ்டர் ஒன்றை ஒட்டி வைக்கலாம் என்று தோன்றுகிறது.

5 Comments on “என் வீட்டுப் பால்கனி வழியே…..”

  1. நெஞ்சை என்னென்னவோ செய்யும் ஒரு கட்டுரை

    யாரையும் ஏதும் பழிக்காமல் எல்லாவற்றையும் மரங்கள் மூலமும் பிராணிகள் மூலமும் சொல்லி விடுகிறது உங்கள் எழுத்து.

    மேற்கில் இருந்து கிழக்கு வரை.

    வேணு

  2. நாற்காலி மேற்கிலிருந்து கிழக்கில் நகர்வதற்குள் எத்தனை மாமனிதர்கள்…அணில் வேப்பமரம் காக்கைகள் எலி அத்தி என. வாய் பேசாமலேயே உரக்கச் சொல்லிவிடுகிறாரகள் சாதாரண மனிதர்களின் ‘மற்றோர் வளம் பறித்துண்ணும்’ வாழ்க்கையை. அருமை.

  3. நா.முத்துக்குமாரின் “அணிலாடும் முன்றில்” நினைவுக்கு வருகிறது. இனிமேல் பாஸ்கரனாரின் நினைவலைகளை “அ.மு.” “அ.பி.” — அணிலுக்கு முன், அணிலுக்கு பின் –என்று பிரித்து ப் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

  4. நான் திடுதிப்பென்று சம்பந்தமேயில்லாமல் பூனாவில் வீடு வாங்கியதே அதன் அழகான நீண்ட பால்கனிக்கும், அதை ஒட்டி வரிசையாக நீண்டு வளர்ந்து இருக்கும் மரமல்லி மரங்களுக்காகவும் தான். எத்தனை வருட மரங்கள் என்பது என் அனுபவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும், கொத்துக் கொத்தாக அனுதினம் வீழ்ந்து கொண்டே இருக்கும் மிக அழகான மரமல்லிப் பூக்கள் எங்கள் ஏரியாவையே வாசனையில் ஆழ்த்தும். பூக்களை ரசிக்கும் மனிதர்கள் கவனிக்காமல் போய்விடப் போகிறார்களே என்ற முன்யோசனையில் தான் மரங்கள் அவைகளை அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே உதிர்க்கின்றன என்று தோன்றும்.

    ஒரு சிறு சாரலில் சிலிர்ப்புற்று மரங்கள் செழித்து இருந்த வேளையில், எங்கிருந்தோ ஒரு கார்ப்பரேஷன் கமிஷனர் சாலையோரம் சீந்துவாரின்றி இருந்த மரங்களை, ஒரு காரணமும் இல்லாமல் வெட்டி எடுத்துப் போனான்.

    ஊரே வெறிச்சென்று போய்விட்டது. எவ்வளவு மலர்கள், விதவிதமான பறவைகள், அவ்வப்போது வந்து போகும் ஓரிரு வானரங்கள், அணில்கள் என்று எல்லாம் ஒரு தனிமனித சுயநலத்தில் விழுந்து விட்டன.

    வெறுமையான அந்த வெளி காலப்போக்கில் கண்களுக்குப் பழகிவிடும் என்று சொன்னார்கள். கடைசிவரை அந்த வெறுமை பழகவே இல்லை. அழுகுரல் வெளியே கேட்காது விழுந்த அந்த அழகான மரங்கள் நம்மிடம் விட்டுவிட்டுப் போன அந்த வலியும் மறையவில்லை.

    லேசாக மறைய எத்தனிக்கும் இந்தப் பத்து வருடங்களில், டாக்டரின் ஊசிபோல அந்த வலி திரும்பவும் ஏற்பட்டு விட்டது.

    வெறும் காட்சியமைவில் நிறையப் பேரின், ஜீவன்களின் இழப்பைத் தானாகப் புரிந்து கொள்ள வாசகனின் பார்வைக்கே விட்டு விட்ட கதைசொல்லியின் உத்தி அபாரமானது.

Comments are closed.