யார் அந்தப் புதுமனிதர்?

இராய செல்லப்பா 

ஆர்.எம்.மின் அலுவலகம்.  

மாலை மணி நான்கு.  

வந்திட்டார் ஓர் மனிதர் 

அழகான ஆடை – கையில் 

அழகான பெட்டி.  

மலர்ந்த முகம். 

‘வணக்கம்’ என்றார்.

‘ஆர். எம்.மைப் பார்க்கவேண்டும்.’ 

அமர்வித்தேன். 

கண்ணாடி அறைக்குள்போய்க்

கேட்டுவந்தேன்.

வரட்டும் என்றார் 

கன்னடத்து ஆர். எம்.

இவர் சிரித்தார். அவர் சிரித்தார்.

அமர்க வென்றார், இவர் அமர்ந்தார்.

ஆர்.பி. ஐ. ஆளோ, சி.பி. ஐ.  ஆளோ 

உபத்திரவம்  கொடுக்கவந்த 

ஊடகத்து ஜாக்கியோ?

‘கீரை வடை காப்பி’ என்றார். 

ஆர். எம். சொன்னதால் 

அக்கணமே வந்தது.

இனிப்பு மட்டும் 

இல்லையென்றான் 

தேநீர்ப் பையன்.

இடையில் தொலைபேசி 

இரண்டு தரம் சிணுங்கியதில்  

பத்து நிமிடங்கள் ஆகிவிட 

வடையுடை மனிதரோ 

வாயே திறக்கவில்லை!

மேஜைபேசியிலே 

எனை அழைத்தார் ஆர்.எம்.

‘மாத்தாடல்’ கன்னடத்தில்.

‘யார் இந்தப் புதுமனிதர்?

வைப்புநிதி யாளரா? 

வாராக்கடனாளியா? 

புதிய கடன் வாங்கப் 

புறப்பட்ட வாணிகரா?

இந்த நேரம் பார்த்து 

ஏ.சி. யும் முடங்கியதே !

கொஞ்சம் வாருங்கள்’ என்றார்.

ஏ.சி.  என்றவுடன் 

எழுந்துவிட்டார் வந்த நபர்.

‘அதற்காகத்தான் வந்தேன்,

ஐயா! உங்கள்  ஏ.எம்.சி.

காலாவதியாகிக்  

காலாண்டு ஆயிற்று!

வாயில்  கீரை வடை       

வார்த்தை  வரவில்லை! 

போகட்டும், 

எங்கே பழுது? 

என்ன பழுதென்று சொன்னால் 

பத்தே நிமிடத்தில் 

பணிசெய்ய வைத்திடுவேன்’

என்றார் அம்மனிதர்.

பாவம் ஆர்.எம். மின் 

பார்வையில் இருந்தது

ஆத்திரமா,

அசட்டுச் சிரிப்பா?

**** 

(விருட்சம் ஜூம் கவியரங்கு 23-10-2020இல் 

வாசித்த நகைச்சுவை கவிதை)