ப.மதியழகன்/பட்டாசு கனவு

எனக்கு புத்தாடைகளில்
விருப்பமில்லை
பட்சணங்கள் கூட
இரண்டாம்பட்சம் தான்
எனக்கு தீபாவளியென்றால்
வானத்தில் வெடித்துச் சிதறும்
ராக்கெட்டுகள் தான்
ஞாபகத்திற்கு வரும்
திரும்பும் திசையெங்கும்
ஒளி வெள்ளம்
நட்சத்திரங்கள் மின்னி
மறைவதைப் போல
ஊரெங்கும் கேட்கும்
சற்றும் இடைவெளிவிடாத
வெடிச் சத்தம்
தலைக்கு எண்ணெய்
வைத்த பின்பு
சாமி படத்தின் முன்பு
அம்மா பலகாரங்கள்
எடுத்து வைப்பாள்
அப்பா புத்தாடைகள்
எடுத்து வைப்பார்
நான் பட்டாசுகளை
எடுத்து வைப்பேன்
பால்யத்தில் தீபாவளியென்றால்
விதவிதமாக வெடித்துச் சிதறும்
பட்டாசுகள் தான்
கனவில் வரும்
எவ்வளவோ பண்டிகைகள்
இருந்தாலும்
அப்போதும் இப்போதும்
கொண்டாட்டங்களில்
முதன்மையானது
தீபாவளி மட்டும் தான்!