
என் சகல ஆட்டங்களையும்
ஆடியில் இருந்தே கற்றேன்.
எனக்குப் பல புதிர்முடிச்சுகளைக்
கற்றுத் தந்தது இந்த ஆடி
பல வித்தைகளை சொல்லித் தந்ததும் அதுதான்
ஒரு கண்ணாடிச் சில்லுவை
தெருவில் வைத்தபடி
சூரிய ஒளிக்காக காத்திருந்த நாட்களில்
என் கனவின் முதல் ஆட்டம் தொங்கியது
பல ரசாயன மாற்றங்களை அதைக் கொண்டு செய்தேன்
அதுதான் என்னை மாதிரி ஒரு நிழல் மனிதனை எனக்கே பரிசளித்தது
நான் தீட்டாத ஓர் ஒளியுருவை அதிலிருந்தே பெற்றேன்
அதிசயம் என்பதன் பொருள்வடிவம் புரிந்ததும் அதில்தான்
சின்னஞ்சிறிய பருவத்தில் ஒரு சிறு ஆடியைக் கொண்டு மிகப்பெரிய ஒளியை சுவரில் வரைந்து இன்புற்றேன்
ஒரு ஒளி வட்டத்தை உருவாக்கினேன்
அதற்குள் சில மனிதர்களை நடமாடவிட்டேன்
வீடேறி வந்த சூரிய வெண் கதிர்களில் என் வாழ்வை படமாக்கினேன்
பூதக் கண்ணாடி பரிசளித்த ஒளிச்சூட்டைக் கொண்டி காகித்தை கருக வரவைத்தேன். சூரியனின் உதவியைக் கொண்டு நான் தான் இந்தப் பூமிப்பந்தை நெருப்பாக மாற்றினேன்
அதை உதைத்து உருளவைத்தேன்
அதற்கு ஒரு விசையையும் ஏற்பாடு செய்தேன்
அதுவே கொஞ்சம்போல உயிரை இந்த அண்டத்திற்கு கொடையாக கொடுத்திருக்கிறது
நவ 2024, காலை 8:40
