கோபிகிருஷ்ணன்/காணி நிலம் வேண்டும்

அக்டோபர் 1980. திருமணமாகி தாராவுடன் மயிலையிலுள்ள ஒரு சிறு சந்தில் உள்ள வீட்டில் ஒரு பகுதியில் குடியேறினேன். சந்தில் பல நாய்கள், நாய்க்குட்டிகள், பசுக்கள், எருமைகள், கன்றுகள், வழிநெடுக புழுதி நிறைந்த மண், சகதி, ஆவினங்களின் கழிவுகள், மிகவும் ஓரமாக நடந்து சென்றால் குழந்தைகளின் நரகல். இரவில் மாதத்தில் 20 நாட்கள் எரியாத தெரு விளக்குகள்.
வீடு என்பது ஒரே ஒரு அறை. ஜன்னல் என்பது வெளிச்சம் வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு திறப்பு. அதற்குக் கதவு இல்லை. வெளிச்சம் சிறிதளவு எப்படியோ உள்ளே வரும். காற்று என்பது விந்தை. மழை பெய்தால் திறப்பின் வழியே தாராளமாக உள்ளே தண்ணீர் வரும். மழை நீர் சுத்தமானது.
துணி காயப் போட வேண்டுமென்றால் வீட்டுக்காரர்கள் மாடியில் போட வேண்டும். இரண்டு கழிப்பறைகள், ஒன்று வீட்டுக்காரர்களுக்கு. இன்னொன்று குடித்தனக்காரர்களுக்கு. கழிப்பறையில் வாந்திதான் வரும். கார்ப்பரேஷன் கட்டணக் கழிப்பறை எவ்வளவோ மேல். ஒரே ஒரு பம்ப். வரும் தண்ணீரைக் குடிநீராகப் பயன் படுத்த முடியாது. தெருக் குழாயில்தான் ஒரு தவலை பிடித்துக்கொள்ள வேண்டும். வேலைக்காரி ஒரு தொண்டு கிழம். அவள்தான் அதைச் செய்தாள். அதைச் செய்வதற்கு அவளுக்கு மாதம் ரூ. 5 சம்பளம். உடலுழைப்புக்கு ஏனோ நம் நாட்டில் அதிக ஊதியம் தருவதில்லை. எனக்கு அதைவிட அதிகம் தர இயலாத நிலை. சமூகம் பரவலாக அங்கீகரிக்கும் உழைப்புச் சுரண்டலில் நானும் சேர்ந்துகொள்ள வேண்டிய அவல நிலை. அந்தக் கிழத்தைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் ஒரு குற்ற உணர்வு, அதைப் போக்கிக்கொள்ளவே வாரம் இரு முறையாவது அவள் டீ செலவுக்கு 30 பைசா கொடுத்து வந்தேன்.
குளியலறை இன்னொரு விந்தை. ஒரு குறுகிய பாதை. நான் மேற்கூறியபடி இது பம்ப். பம்புக்குப் பின்னால் சிறிது வெற்றிடம். வெற்றிடத்தின் பக்கவாட்டில் கழிப்பறைகளின் பின் பக்கச் சுவர். வெளியேயிருந்து பார்த்தால் பம்ப் தெரியும். கதவு என்பது வீட்டுக்காரர்களுக்கு அனாவசியச் செலவு. குளிக்க வேண்டுமென்றால் ஒரு பக்கெட்டை குறுகிய பாதை உள்ளே முடியும் இடத்திலும் கழிப்பறைகளின் சுவர் பாதையின் சுவரைத் தொடும் இடத்திலும் வைக்க வேண்டும். வெளியிலிருந்து பார்த்தால் பாதி பக்கெட் தெரியும். யாராவது குளியலறைக்குள் வருமுன் பக்கெட் வெளியே தெரிகிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, ‘யாரது?’ என்றோ, ‘யார் உள்ளே?’ என்றோ அவரவர் விருப்பப்படி கனிவாகவோ, அதட்டியோ அவரவர் மன நிலையைப் பொறுத்துக் குரல் கொடுக்க வேண்டும். குளிப்பவர் உள்ளேயிருந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வது பிறிதொரு விந்தை. ஆணாக இருந்தால் மனைவியின் பெயரைச் சொல்லி அவளது கணவன் என்று சொல்ல வேண்டும். உதாரணமாக நான் ‘தாரா வீட்டுக்காரர்’ என்று சொல்வேன். பெண்ணாக இருந்தால் பெயர் சொல்வாள். தாயாக இருந்தால் குழந்தையின் பெயர் சொல்லி, அதன் அம்மா என்று சொல்வாள். இந்தக் கட்டுக்கோப்பையும் மீறி எனக்கு ஒரு தடவை விபரீதம் நிகழ்ந்துவிட்டது. அம்புச்சம்மாள் என்ற மூதாட்டி எதிர்ப் பகுதியில் குடியிருந்தாள். அவள் நான் குளிக்கும்போது திடீரென்று உள்ளே பிரவேசித்து, பேயறைந்தாற் போல முகம் மாறி வெளியேறினாள். அத்துடன் விட்டிருக் கலாம். தாராவிடம், ‘இனிமேல் உன் புருஷனை ஜட்டி போட்டுக் கொண்டு குளிக்கச் சொல்’ என்று வேறு சொல்லி வைத்தாள். தான் செய்த குற்றத்தை மறைக்க மற்றொருவன் மேல் குற்றச்சாட்டு. வீடு முழுவதும் செய்தி பரவிவிட்டது. ஏனோ இந்த விபரீதம் அங்கு குளித்த மற்ற ஆண்களுக்கு ஏற்படவில்லை. வீட்டுக்காரம்மாள் ஒரு கட்டளை பிறப்பித்தாள். எல்லா ஆண்களும் ஜட்டி போட்டுக் கொண்டுதான் குளிக்க வேண்டும். எனக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது.
சிறு வயதிலிருந்தே நிர்வாணமாகத்தான் குளித்துக் கொண்டிருந்தேன். அதில் எந்தக் கேடும் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை. இவர்கள் செய்த ரகளையில் நான் ஏதோஅம்புச்சம்மாளுக்காகப் பிரத்தியேகமாக அவ்வாறு முறை கேடாக நடந்துகொண்டு விட்டதாக ஒரு எண்ணம் தோன்றி, மகத்தான ஒரு குற்ற உணர்வை என்னுள் ஏற்படுத்தி, ஒரு வாரம் தலையைக் குனிந்து தரையைப் பார்த்து நடந்து கொண்டிருந்தேன், என்னுள் ஒரு பிரகாசமான எண்ணம் உதித்தது. அதன் படியே குளிக்கும்போது சற்று உரக்க ஒரு ஹிந்திப் பாட்டைப் பாடிக்கொண்டு குளிக்க ஆரம்பித்தேன். எந்த வேளையில் ஆரம்பித்தேனோ, அடுத்த நாள் அவ்வாறு செய்து கொண்டிருக்கையில் வீட்டுக்காரம்மாளுடைய குரல் கணீரென்று ஒலித்தது. ஜமீன்தாரிணிகள் குரல் வேறு எவ்வாறு இருக்கும்? ‘யாரது பாத்ரூமிலே பாட்றது?’ ஹிந்திப் பாட்டும், குளியலும் கசந்தே விட்டன. வாழ்க்கை சத்தியமாக வெறுத்துவிட்டது.
அலுவலகத்திலிருந்து அப்பொழுதுதான் திரும்பியிருப்பேன். திடீரென்று வீட்டுக்காரம்மாள் மகளுக்கு ஆங்கிலப் பாடத்தில் சந்தேகம் வந்துவிடும். அவள் 10 + 1 படித்துக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் அவள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க வேண்டியிருக்கும். எனது கேடுகாலம், அந்த வீட்டில் மிகவும் கல்வித்தகுதி பெற்றவன் நான்தான்.
அம்புச்சம்மாளும் அவள் உறவினர்களும் வீட்டைக் காலி செய்தார்கள். புதுக்குடித்தனம் ஒன்று வந்தது. திருமணமாகாத இரு வாலிபர்கள் அந்தப் பகுதியில் குடியேறினர். ஒரு நாள் மாலை, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினேன். வாசலிலே வீட்டுக்காரம்மாள் ‘தம்பி, ஒரு விஷயம்’ என்றாள். சிறிது நிடுக்கிட்டேன். ‘என்னப்பா இந்த அநியாயத்தைப் பாத்தியா? புதுசா வந்த அந்தப் பசங்க ஜட்டி போட்டுண்டு ஒம் பொண் டாட்டி கிட்டே பேசறாங்க. இவளும் சிரிச்சி சிரிச்சி பதில் சொல்றா. அவளெக் கொஞ்சம் கண்டிச்சி வை. காலம் கெட்டுக் கெடக்கு’ என்றாள். நான் உள்ளுக்குள் திடீரென்று அமைதியை ஏற்படுத்திக்கொண்டேன். முகத்தில் வீட்டுக்காரம்மாள் எதிர்பார்த்த கலவரத்தை வரவழைத்துக்கொண்டு, ‘அப்படியா, என்ன அநியாயமாக இருக்கு. அவகிட்டே கேக்கறேன்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நகர்ந்தேன். தாராவிடம் ஒரு வார்த்தைகூட இதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை; பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஆடையின்றி அந்த வாலிபர்கள் தாராவிடம் அரட்டை அடித்திருந்தால் ஒரு வேளை எனக்கு ஏதாவது வித்தியாசமாகப் பட்டிருக்கலாம். மேலும், இந்த இரு வாலிபர்களும் லாட்ஜில் மட்டுமே இருக்க உகந்தவர்கள். சாதாரணமாக லாட்ஜில் இதெல்லாம் சகஜம்.
திருமணமாவதற்கு முன்னால் நானும் லாட்ஜில் தங்கியிருந்தவன்தான். நான் இவர்களைப் போல் வக்கிர progressiveவாக, நடந்து கொள்ளவில்லையென்றாலும் நடப்புகளைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். அந்த லாட்ஜில் ஒரு முதியவர் ஒரு அறையில் தங்கியிருந்தார். என்னிடம் சற்று கண்ணியமாகவே நடந்துகொண்டார். ஓரிரு முறை அவருக்குக் கீழே உள்ள ஹோட்டலிலிருந்து சிற்றுண்டி வாங்கி அவர் அறைக்குக் கொண்டு கொடுத்திருக்கிறேன். என் அறைத் தோழர் கூடக் கேட்டார். ‘நீங்கள் ஏன் ஒரு பியூன் மாதிரி இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று. பாவம், அவர் தனிக்கட்டை ஒரு pensioner. மேலும் வயதில் மூத்தவர். ஏதோ நம்மால் முடிந்த சிறு உபகாரங்கள் – என்று நான் என்னுள் சொல்லிக்கொண் டேன். அந்த முதியவர் சாதாரணமாக 4-30 மணிக்கே எழுந்து குளியல் துவையல்களை முடித்துக்கொண்டு கோவிலுக்குப் போய்விடுவாராம். ஒரு நாள் தற்செயலாக நான் 4-45க்கே எழுந்துவிட்டேன். ஒரு டம்ளர் பச்சைத் தண்ணீர் குடித்துவிட்டு ஒரு பீடி பற்ற வைத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தேன். கீழே இருக்கும் டீக்கடை 5-00 மணிக்குத்தான் திறக்கும். 15 நிமிடங்கள் டீ இல்லாமல் எப்படிக் கழிப்பது. ஒரு வேளை இன்றைக்குச் சீக்கிரமே திறந்திருக்கலாம். இந்தச் சர்ச்சைகளுடன் போராடிக்கொண்டு கீழிறங்கும் படிக்கட்டின் அருகே வந்து கொண்டிருந்தேன். அந்த வயதானவரின் அறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தற்செயலாகத் திரும்பிப் பார்த்தேன். அவர் உடம்பில் துணியே இல்லாமல் குளியலறையிலிருந்து தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்து விட்டது அவருக்குத் தெரிந்துவிட்டது. உடனே அறைக்கு ஓட்ட மாக ஓடி கதவைத் தாளிட்டுக் கொண்டார். எனக்குச் சற்று அருவருப்பாக இருந்தது. அதிகாலையில் பரந்து கிடக்கும் நீல ஆகாயத்தைப் பார்த்தாலோ அல்லது ஒரு அழகிய இளம் பெண்ணின் முகத்தைப் பார்க்க நேர்ந்தாலோ மனம் சற்று சந்தோஷமாக இருக்கும். ஆனால் இவ்வளவு அதிகாலையில் அழகான இளம் பெண் ஒரு அரிதான சமாச்சாரமே. எனக்கு அன்று முழுவதும் வயிற்றைக் குமட்டிக்கொண்டிருந்தது. அறைத் தோழரிடம் சொல்லலாம் என்று தோன்றியது. செய்யவில்லை. அப்படிச் சொல்லி, அவர் மற்றவர்களிடம் சொல்லி, அந்த நற்செய்தி லாட்ஜ் பூராவும் பரவி, வயதானவரை எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்து, அப்படிப் பார்ப்பதன் காரணம் அவருக்குத் தெரிந்துவிட்டு, அவர் மனத் திடம் இல்லாதவராக இருக்கும்பட்சத்தில், அனைவருக்குமே தான் நடந்துகொண்ட விதம் தெரிந்திருக்கிறது என்று ஒரு பெரிய ஐயம் ஏற்பட்டு, அதன் காரணமாக அவருக்கு paranoia மன நோய் பிடித்து, அதைப் போக்கிக்கொள்ள மனநல மருத்துவர்களிடம் சென்று transquilizersஐக் காலம் பூராவும் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் நிச்சயம் என்னை மன்னித்துக் கொண்டிருக்க மாட்டேன். வேண்டாம். ஆண் பாவம் பொல்லாதது. நான் கல்லூரியில் கற்ற உளவியல் எந்த உ வகையிலும் பயன்படாவிட்டாலும் இந்த மாதிரி சமயங்களில் பயனுள்ளதாக இருந்தது. உளவியல் மீது எனக்கு சொந்த வகையில் ஒரு வெறுப்புதான். எதற்கெடுத்தாலும் அலசல், ஆய்வு. வாழ்க்கையில் உள்ள romance செத்துதான் போய்விடுகிறது. எதையுமே சாதாரண மனிதன் அனுபவிப்பது போல் ரசனை யுடன் அனுபவிக்க முடிவதில்லை. உளவியல் படிப்பு ஒரு சாபக்கேடே. லாட்ஜின் குடிமகன்கள் பற்றி சற்று நிறுத்திக் கொள்கிறேன். இந்த வீட்டுக்காரம்மாளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை.
Paranoia பற்றி சில கருத்துகள். சந்தேகம்தான் இதன் அடிப்படை. இந்நோய் மனத் திடம் அதிகமாக இல்லாத எவருக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்படலாம். சமூகம் அங்கீகரிக்காத ஒன்றை ஒருவன் (உதாரணமாக மாற்றான் மனைவியுடன் படுப்பவன்) பிறருக்குத் தெரியாமல் செய்யும் போது மற்றவர்கள் அதைப் பார்த்துவிட்டதாகச் சந்தேகம் எழுந்தாலும், மற்றவர்கள் தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள், தான் செய்த இழிசெயலைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்ற நினைப்பு வந்துவிட்டால் இந்த மன நோய் ஏற்படுகிறது. தன்னைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக்கொள்பவன் தன்னை வீழ்த்த சதிகள் நிகழ்வதாக நினைத்தாலும் இது ஏற்படுகிறது. பிறர் தன்னை ஏமாற்றுவதாக நினைப்பதே paranoiaவின் அறிகுறி தான், பார்க்கப் போனால் இந்த வியாதி நம் சமூகத்தில் மிகவும் பரவலாக வியாபித்திருக்கும் ஒன்று. காய்கறிக்காரன் அநியாய விலை சொல்கிறான். நாம் குறைத்துக் கேட்கிறோம். அவன் உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று ஒரு மத்திய விலையைச் சொல்லிக் காய்கறிகளை நமக்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறான். நிகழ்ச்சியில் அடிப்படை அவநம்பிக்கை இழைந்தோடுகிறது. சாமி கண்ணைக் குத்தும் என்று பயமுறுத் தும் மதமும், உன் வீட்டில் நடக்கும் சம்பாஷணைகளை ஆண்டவர் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் என்று சொல்லும் மதமும் paranoia நோய்க்கு வித்திடுகின்றன. சமூகம் என்று ஒன்று இருக்கிறது. ‘நான்’ என்று ஒன்று இருக்கிறது. தனக்கு சமூகத்தில் ஒரு image இருக்கிறது. தனக்கு self image என்று ஒன்று இருக்கிறது என்று நாம் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வரையில் இந்த மனநோய் நம்முடன் சற்றுத் தாராளமாகவே சிநேகம் கொள்ளும். ஆண்டவா, ஏன்தான் உளவியல் படித்தேனோ? உளவியல் படித்தவன் ஆண்டவனை விளிக்கக் கூடாது. அது அபசாரம்.
மற்றொரு நாள். இதே மாதிரிதான் நடந்துகொண்டாள் வீட்டுக்காரம்மாள். இன்னொரு பகுதியில் குடியிருக்கும் சாயபுவிடம் தாரா பேசினாளாம். எனக்கு ஆத்திரமாக இருந்தது. நீ மட்டும் என்னுடன் பேசவில்லையா என்று நுனி நாக்கு வரை வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு உள்ளே சென்றேன்.
தாரா வேறு ஒன்று சொல்லி வைத்தாள். பக்கத்துப் பகுதியில் குடியிருக்கும் பிரமிளா இரவில் எப்பொழுதுமே அம்மணமாகத்தான் தூங்குவாளாம். பிரமிளா தாராவிடம் அதைச் சொல்ல, தாரா அதை என்னிடம் சொல்ல, எனக்கு இரண்டு இரவுகள் படு அவஸ்தையாக இருந்தது. நான் பார்க்காத பிரமிளாவின் வெற்றுடம்பு கண்முன் தோன்றிச் சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது. நான் அயோக்கியன் என்பதற்கு இது ஒரு சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. அயோக்கித்தனத்தைக் காரண ரீதியில் நியாயப்படுத்திக் கொள்ள விருப்பமில்லை. நியாயப்படுத்திக் கொள்ளும் அயோக்கியத்தனம் படுயோக்கியத் தனம் ஆகிவிடப் போவதில்லை. ஆனால், பிரமிளாவும் அதற்கு ஈடாக தாராவும் விவஸ்தை கெட்ட ஜன்மங்களே. எதை யாரிடம் சொல்வது என்று தெரிந்திருக்கக் கூடாதா இவர்களுக்கு? பிரமிளாதான் சொன்னாள். தாரா ஏன் இதை என்னிடம் சொல்ல வேண்டும்? என்னைப் போன்ற உத்தமனின் மாசற்ற உள்ளத்தில் (ஒரே புளுகு) கள்ளத்தை உண்டுபண்ணி என் தூய்மை, கற்பு (!) பறிபோகுமாறு அவள் ஏன் செய்ய வேண்டும்? எல்லோருக்கும் மற்றவர்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்புவதில் ஒரே குறி. பிரமிளாவின் கணவனை நினைத்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. நான் பார்த்திருக்கிறேன். பிரமிளாவின் உத்தியோகம் typist. அவளுக்கு விரலெல்லாம் வலிக்குமாம். அவள் கணவன் அவள் விரல்களை வெந்நீர் வைத்து உருவிக்கொண்டிருப்பான். நானும் அதே உத்தியோகம் தான் செய்கிறேன். அப்படியெல்லாம் ஒன்றும் நிகழ்ந்ததில்லை. ஒரு வேளை அவளது அலுவலகத்தில் இரும்பு டைப்ரைட்டர் வைத்திருக்கிறார்களோ என்னமோ? பிரமிளா தன் சுகக்கேடு
தன் கணவனுக்குத் தெரிய வேண்டும், அவன் தன்மீது பச்சாதாபப்பட வேண்டும் என்ற எண்ணங்கள் கொண்ட மன நோயாளியாகவே எனக்குத் தோன்றினாள். மற்றவர்கள் தன்னைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும் என்று நினைப்பவனும், தன் தோற்றத்தைப் பல பேர் ஏற இறங்கப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று எக்கச்சக்க அழகாக உடுத்திக் கொள்ளும் பெண்ணும், நடனக் கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கவர்ச்சி நடனக்காரியும் மனநோய் பிடித்தவர்களே. Hiysteria மனநோய் பிடித்தவனுக்கு மற்றவர்கள் தன்னைச் சூழ்ந்திருக்கும் போதுதான் வலிப்பு வரும். மறுக்க முடியாத உளவியல் உண்மை. உளவியல் ஒருவனது கண்ணோட்டத்தை எவ்வளவு சுசப்பாக இருக்கச் செய்துவிடுகிறது!
நான் தாஸ்தாவஸ்கியின் இரு கதைகள் கொண்ட ஒரு புத்தகத்தை வைத்திருந்தேன். அதைப் பிரமிளா படிக்கக் கேட் டாள்; கொடுத்தேன். நிச்சயமாக அவளுக்கு தாஸ்தாவஸ்கியைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் இருக்குமா என்பது எனக்குச் சந்தேகமாக இருந்தது. எனக்கு மட்டும் இருக்கிறதா என்ன? மற்றவர்களிடம் குறை காண்பதில் நான் நிறைவுடையவனாக இருப்பதாகத் தோன்றும் ஒரு மகத்தான மாயை.
ஒட்டினாற்போல உள்ள அடுத்த பகுதியில் ஸ்வர்ணலதா என்ற ஒரு இளம்பெண் இருந்தாள். எனக்கு அன்று விடுமுறை மதியம், அவளுக்கு M.B.B.S.ன் விரிவு தெரிய வேண்டியிருந்தது. தாரா மூலம் எனக்குத் தெரியுமா என்று கேட்டாள். நானும் சொன்னேன். அத்துடன் விட்டிருக்கலாம். மற்ற மருத்துவக் கல்வித் தகுதிகளின் விரிவும் தெரிந்துகொள்ள ஆவலுண்டா என்று கேட்டு, அவளும் தாரா மூலம் ஆம் என்று சொன்னாள். நேராக ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக்கூடாது.o rgasm வந்துவிடுமோ என்ன இழவோ இந்த வீட்டுக்காரம்மாள் கண்ணோட்டப்படி. ஆண் + பெண் = நெருப்பு + பஞ்சு. கற்பு: அந்தப் பரிசுத்தச் சொல்லின் சரியான அர்த்தம் எனக்கு இன்னும் சத்தியமாகப் புரிந்தபாடில்லை. நான் ஒரு 30 கல்வித் குதிகள் மற்றும் Fellowshipsன் விரிவுகளை அவசரப்படாமல் எழுதிக் கொடுத்தேன். தனக்குத் தெரிந்ததை மற்றவரிடம் பறைசாற்ற சந்தர்ப்பம் கிடைத்தில் pedantry என்ற ஒரு வக்கிர இன்பம் எனக்கு.
மதிப்பிற்குரிய வீட்டுக்காரம்மாளுக்கு இது எப்படித்தான் தேரிந்ததோ? அடுத்த நாள் தாராவிடம் சொல்லியிருந்தாள்:
‘அந்தப் பொண்ணுக்கு ஒம் புருஷன்கிட்டே என்ன வேண்டியிருக்கு? என்ன சுத்த விவரம் புரியாதவளா இருக்கே. ஏடா கூடமா ஏதாச்சும் நடந்துட்டா? மொதல்லேயே கட் பண்ணி வை. இதெல்லாம வம்பு. ஒனக்கு இதெல்லாம் தெரியாது. நான் வயசுலெ மூத்தவ. ஒனக்கு நல்லதுக்குத்தான் சொல்றேன்.’ வீட்டுக்காரம்மாள் அறிவுரைகளின் சிகரம். இதில் ஒரு double standard. இவளுடைய மகள் என்னிடம் ஒரு மணிநேரம் பாடம் சொல்லிக்கொள்ளலாமாம். ஆனால், ஸ்வர்ணலதா கிட்டத்தட்ட தூர இருந்து அதைச் செய்தால் அது பெருங்குற்றம். Double Standard schizophrenia (split personality) மன நோயாளிகளே. இதில் ஐயப்பாடு ஏதுமில்லை. இந்தக் கண்ணோட்டப்படிக் கணக்கெடுத்தால் ஜனத் தொகையில் 85%ஐ இந்தச் சீக்குபிடித்தவர்களாகவே கொள்ளலாம்.
ஸ்வர்ணலதாவும் அவளுடைய உறவினர்களும் வீட்டைக் காலி செய்தனர். புதிதாகக் குடித்தனம் ஒன்று வந்தது. ஒரு நடுத்தர வயது அம்மாள், ஒரு 10 வயதுப் பையன், ஒரு கைக் குழந்தை, ஒரு தடி ஆண். அந்த ஆண் அவளுடைய Visting husband. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருவார். சிறிது நேரம் இருந்துவிட்டுப் போய்விடுவார். இந்த அம்மாள் அவரது மூன்றாவது மனைவி. மற்ற இரண்டு மனைவிகளும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். இவர் அவர்களைத் தனித்தனி வீட்டில் வைத்துக் குடித்தனம் செய்கிறார். எனக்கு இது படு ஆச்சரியமாக இருந்தது. மனிதனுக்கு இதற்கெல்லாம் அசாத்தியத் திறமை தேவை. மன்னரும் பட்டத்தரசியும், அந்தப்புரமும் அதில் இரண்டு சேடிப் பெண்களும் மன்னரால் மணக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தார்கள். அவர் ஒரு அச்சுக்கூடம் வைத்து நடத்துகிறார். அந்த அச்சுக்கூடத்தை அடகு வைத்து சில செல்வந்தர்களின் உதவியுடன் ஒரு சினிமா தயாரிக்கிறார். காவிய நாயகி. முந்தின தினம் ஒரு கவர்ச்சி நடிகையுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்ட சுவையான ஆனந்தத்தைத் தன் மனைவியிடம் சொல்லி மகிழ்வாராம். நண்பர் சம்பத் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘தேவடியாளிடம் படுப்பதற்கு ஏன் சினிமாப்படம் எடுக்க வேண்டும்? படம் எடுக்காமலேயே அதைச் செய்யலாமே!’ சம்பத்தைப்போல் எனக்கும் எந்தக் குறிப்பிட்ட காரணமும் தோன்றவில்லை. படத் தயாரிப்பாளரின் மனைவி பாலுறவு பற்றிய ஜோக் ஏதாவது அவரிடம் சொல்வாளாம். ஜோக் எவ்வளவு தரம் வாய்ந்ததோ அவ்வளவு சன்மானம் பொருள் வடிவில் சகதர்மிணிக்குக் கொடுத்துவிட்டுச் செல்வாராம் அந்தத்
தாராள மனம் கொண்டவர். நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் என்னைப் பார்த்த பார்வை, ‘சீ, நீயெல்லாம் என்ன மனுஷன், பொடியன்’ என்று சொல்வது போல இருந்தது. கலைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள கனவான் ஒரு சாதாரணப் பிரஜையை வேறு எவ்வாறு பார்க்க முடியும்!
ஒரு நாள் கக்கூஸ் பக்கெட்டைத் தூக்கினேன். ஒரு தேள். எனக்குப் பூச்சிகளைக் கொல்வதென்றாலே அருவருப்பு. நான் சற்று பலமாகச் சொல்லியதை அந்தச் சாயபு கேட்டு, கையில் விளக்குமாறுடன் வந்து அதை நையப் புடைத்துக் கொன்றார், என்னை ஒரு துரும்பைப் பார்ப்பது போல ஒரு முறை முறைத்து விட்டு. அந்தப் பார்வை ‘நீ ஒரு நபும்சகன்’ என்று கூறியது. என்ன இருந்தாலும் சாயபு ஒரு ஆண் வீரரே.
1981 நவம்பர். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மொத்தமாக ஒரு மூன்று மாத காலம் பிறந்தகத்தில் இருந்துவிட்டு 1982 ஜனவரியில் பொங்கல் அன்று தாரா வீடு திரும்பினாள். பிரசவத்திற்கு முன்னால் நான் நிலைகுலைந்து போயிருந்தேன். ஒருவேளை கருச் சிதைவு ஏற்பட்டுவிடுமோ, பிரசவத்தில் தாரா இறந்துவிடுவாளோ, குழந்தை இறந்து பிறந்துவிடுமோ என்றெல்லாம் பயங்கரக் கிலிகள் என்னைப் பிடித்தாட்டிய போது நண்பர் ரமேஷ்தான் என் கிலேசங்களைப் போக்கி ஓரளவு நம்பிக்கையூட்டி என்னைப் பார்த்துக்கொண்டவர். தாரா குழந்தையுடன் வீடு திரும்பிய போதுதான் நான் என் பழைய நிலையை அடைந்தேன்.
வீட்டுக்காரர்களின் பகுதியின் ஓரத்தில் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு. படிக்கட்டுக்குக் கீழே ஒரு வெற்றிடம். அதற்கொரு கதவு. அதாவது அது ஒரு சிறிய அறை. வாடகை ரூ.20. அதில் நெடுங்காலமாக ஒரு வயதான அம்மாள் குடியிருந்தாள். அவளை எல்லாரும் ஐயப்பன் மாமி என்றே அழைத்தனர். அவள் சுமங்கலி. அவள் கணவரைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அவள் ஒரு பிராமணக் குடும்பத்திற்குச் சமையல்காரியாக இருந்து காலம் தள்ளி வந்தாள். அதிகாலையில் குளித்து விடுவாள். குளித்து விட்டுத் தன் அறைக்குத் திரும்பும்போது பார்க்க வேண்டும். புடவையின் கீழ்ப் பகுதியைச் சற்று தாராளமாகவே தூக்கி இடுப்பில் செருகிக் கொண்டு வழிநெடுக நடப்பாள். எனக்கு அது மிகவும் அநாகரிகமாகப் பட்டது. யாரும் அவளைத் தொடக் கூடாது. மடி. பாதையோ மிகவும் குறுகலானது. எதிரே யாராவது வந்தால்’ உடலைக் குறுக்கிக் கொண்டு அதன் பிறகும் போதிய இடைவெளி விட்டு மாமிக்கு இடம் அளிக்க வேண்டும். ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடம் ஒரு பழக்கம். மருமகன் மாமியாரைக் கண்ணால் பார்க்கக் கூடாது. பாதையில் அவ்வாறு நேர்ந்தால் மருமகன் உடனே திரும்பி வேறு திசையில் செல்ல வேண்டும். அல்லது ஒரு புதருக்குப் பின்னால் மறைந்துகொள்ள வேண்டும். இந்தப் பழங்குடி மக்களின் Avoidance behaviourஐத்தான் இந்த மாமி எனக்கு நினைவூட்டினாள். நாகரிக வளர்ச்சி அடைந்துவிட்ட தாகக் கற்பனையில் நினைத்துக் கொண்டிருக்கும் நம்முள்ளும் இன்னும் பழங்குடி மக்கள் நிலவி வருகிறார்கள் என்பதற்கு மாமி ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.
‘தரையில் ஸ்டவ்வை வைத்து நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள்?’ என்று திடீரென்று ஒரு நாள் வீட்டுக்காரம்மாள் எங்கள் மீது கரிசனப்பட்டாள். அவளுக்குத்தான் என்ன அக்கறை என்று வியந்தேன். சிமென்டும் காரையும் சேர்ந்த கலவையில் மேடை மாதிரி ஒரு அமைப்பைச் செய்து கொடுத்தாள். வீட்டு வாடகையில் ரூ. 15 ஏற்றிவிட்டாள். வாடகை ரூ. 115 மொத்தத்தில் ரூ. 50 தான் மேடை போடுவதில் செலவாகி யிருக்கும். அதற்கு மாதா மாதம் நிரந்தரமாக ரூ. 15 கொடுக்க வேண்டுமாம். நாங்கள் தரையில் சமைப்பதை அசௌகரியம் என்றே நினைக்கவில்லை. சமைப்பதற்கு ஒரு மேடை இல்லை என்று நாங்கள் அழவும் இல்லை. வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணத்தினால் விரக்தியடைந்து cynical ஆகவும் வருத்தத் துடனும் இருக்கும் ஒருவனை ஒரு உளவியல் மருத்துவர் பேட்டி கண்டு ‘உனக்கு morbid depression, இது neurasthenia என்ற மன நோயின் அறிகுறிகள். நான் சொல்லும் மருந்துகளைச் சாப்பிடு’ என்று அறிவுரை கூறி அவன் வாழ்நாள் முழுவதும் மருந்துகளுக்கு அடிமையாகும் அவல நிலை. எங்கள் பாஷையில் ஒரு முதுமொழி உண்டு. சும்மா இருந்த கோழியை உமியைப் போட்டுக் கெடுத்தானாம்.
திடீரென்று ஒருநாள் அட்வான்ஸ் ரூ. 500 ஆக உயர்த்தினாள் வீட்டுக்காரம்மாள். எல்லோருக்கும்தான். பாரபட்சம் இல்லாதவள். ரூ. 200ஐ எப்படியோ புரட்டிக் கொடுத்தேன். இந்த ரூ.200ஐ மாதா மாதம் ரூ. 25ஆக வாடகையில் குறைத்துக் கொடுத்துக் கழித்துக் கொள்ளலாமாம். என்ன பரந்த நோக்கு, சலுகை! எப்படியோ வட்டியில்லாமல் பணம் வந்தால் சரி.
வீட்டு மின்விளக்கு மாலை 6.00லிருந்து இரவு 9.00 மணி வரையில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷம். 8.45க்கே ‘லைட் ஆப், லைட் ஆப்’ என்று வீட்டுக்காரம்மாளின் குரல் கேட்கும். நாம் இரவுப் பொழுது கழிய சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் உடனே விளக்கை அணைக்க வேண்டும். சிம்னி விளக்கில்தான் இரவில் நாம் கண்ணை மூடிக்கொள்வதாலும் அப்படிச் செய்யுங்கால் பூலோகம் நமக்கு இருண்டு விடுவதாலும், பூச்சிகள், எலிகளின் அரவங்கள் நம்மை கிலிக்குள்ளாக்குவதில்லை. வேண்டுமானால் தனி மீட்டர் போட்டுக்கொள்ளுங்கள். மீட்டர் போட்டுக் கொள்வதென்றால் ரூ. 250ஐ என்னிடம் முதலிலேயே டெபாசிட்டாகக் கொடுத்துவிட வேண்டும். Logic எல்லாம் வீட்டுக்காரம்மாளிடம் பிச்சை வாங்க வேண்டும்.
வீட்டுக்காரர் மிகவும் நல்லவர். தினமும் வஞ்சனை வில்லாமல் நிறையக் குடிப்பார். சாதுவானவர். இந்த மாதிரி மனைவி வாய்த்தால் ஒரு மனிதனால் வேறெவ்வாறு இருக்க முடியும்? மேலும் புறச்சூழலின் உபாதைகளிலிருந்து குடி அவரை நிச்சயம் பாதுகாத்தது.
நவம்பர் 1982. ஒரு விடுமுறை. தாராவுக்கு ஓரளவு நாகரிகமாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற நப்பாசை தோன்றியது. அவளுக்கு அப்படித்தான் எப்போதாவது சற்று வித்தியாசமாக நடந்துகொள்ள வேண்டும் என்று தோன்றும். பாவாடையையும் என் சட்டையையும் அணிந்து கொண்டிருந்தாள். எங்கள் அறையை விட்டுக் குப்பையைக் கொட்ட வாசல்வரை போனாள். வீட்டுக்காரம்மாள் பயங்கரமாகச் சத்தம் போட் டாள்: ‘இதென்ன ட்ரஸ். இது குடும்பஸ்தர்கள் இருக்கிற வீடு. மொதல்லே போய் சேலையைக் கட்டிக்கோ.’ எனக்கு இது உண்மையிலேயே உறுத்தியது. தாரா எந்தத் தவறும் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. இதில் மீண்டும் ஒரு double standard. பிரமிளாவைப் பார்ப்பதற்கு அவளது தோழர்கள் வீடு தேடி வருவார்கள். பிரமிளா, ‘ஹாய் சந்துரு’, ‘ஹாய் ஜேகப்’ என்று உரக்க உணர்ச்சி ததும்பக் கூவி, அன்பு பிரவாகம் கரைகளையுக உடைத்து வெள்ளத்தை உண்டுபண்ண, அவர்களைப் பரவசத் தால் ஆரத் தழுவாத குறையாக உள்ளே அழைத்துச் செல்வாள். இதெல்லாம் நான் தவறு என்று சொல்லவில்லை. நவீன சமூகத்தில் இந்த மாதிரியான அங்கீகாரம் பெற்ற ஓரளவு இ permissiveness இருக்கத்தான் செய்கிறது. இதில் விரசம் ஒன்றும் இல்லைதான். ஆனால் எங்கோ ஏதோ நெருடுகிறது. இந்த வீட்டுக்காரம்மாளுக்கு இதெல்லாம் வித்தியாசமாகவே தோன்ற வில்லை. தாராவின் உடையில் மாற்றம் அவளை எப்படிப் பேச வைத்துவிட்டது!
தாரா ஒரு பதிவிரதை. பீச்சில் கண்ணகிக்கு அடுத்தாற்போல் தாராவின் சிலையொன்றைச் செய்து வைக்க ஆசைதான். பொருள் வசதி இல்லாத காரணத்தினால் இந்த உயரிய அவா பகற்கனவு அளவிலேயே இருந்து வருகிறது. உள்ளுக்குள்ளே இன்னொரு பயம். எனக்குப் பணவசதி ஒரு காலத்தில் கிடைக்கும் பட்சத்தில் நிறையச் சிலைகள் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. தாராவின் சிலைக்குப் பீச்சில் இட மில்லாமல் போய்விட்டால் என் ஆசையை எப்படி நிறைவேற்றிக் கொள்வது? இப்படிப்பட்டவளுக்குத் தேவடியாள் பட்டம் கட்டத் தன்னால் இயன்ற போதெல்லாம் முயன்று கொண்டிருந்த வீட்டுக்காரம்மாளை, குறிப்பாக இந்தப் பாவாடை – சட்டை நிகழ்ச்சிக்குப் பிறகு, நினைக்க நினைக்க எனக்குள் தாங்க முடியாத கசப்புணர்வு எழுந்தது. சம்பவம் நடந்த மாலை அவ ளிடம் போய்ச் சொல்லிவிட்டேன். ‘நாங்கள் வேறு வீடு பார்க் கிறோம்’ என்று. அவளுக்கு அது சிறிது அதிர்ச்சியாகவே இருந்திருக்கக்கூடும். முகமாற்றத்திலிருந்து ஊகித்துக்கொண்டேன்.
வீடு தேடும் படலம் ஆரம்பித்தது. மூன்று வாரங்கள். பல வீடுகள். இரண்டு தரகர்கள். ஒரு வீடு சற்று வசதியாக இருந்தது. வாடகை ரூ. 140 அட்வான்ஸ் ரூ. 1000 ஒரு அறை. ஒரு சமையலறை. பிடித்திருந்தது. வீட்டுக்காரர் முதலில் சொன்னது: ‘உங்களைப் பார்த்தால் பிராமணர்கள் மாதிரித் தோன்றுகிறது. நாங்கள் non-brahmins. உங்களுக்கு ஒத்துவருமோ அதெல்லாம்?’ நீங்கள் Bushmen ஆக இருந்தாலும் சரி, ஆட்டை நீங்களே கொன்று தோலுரித்து இடையில் இரும்புக் கம்பியைச் செருகி மேலே தொங்க வைத்து, கீழே அக்னியை எழுப்பி அதைச் சமைத்து உணவு உட்கொள்பவர்களாக இருந்தாலும் சரி; பரவாயில்லை. வீடு வசதியாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டு ‘அதெல்லாம் பரவாயில்லை. நாங்கள் பிராமணர்கள்தான். ஆனால் கறி சாப்பிடுவோம். எல்லாம் ஒத்துப்போகும்’ என்றேன். அடுத்த கேள்வி, ‘நீங்கள் ஐயரா, ஐயங்காரா?’ நான் என்னால் இயன்ற அளவு பொறுமையை வரவழைத்துக் கொண்டு, எங்கள் ஜாதியில் இந்தச் சிக்கலான பிரிவுகள் இல்லையென்றும் சாரிகளும், ஐயர்களும், ராவ்களும் ஒரே குடும்பத்திலேயே கூட இருக்கிறார்கள் என்றும் அவருக்கு விளக்கினேன்.
நான் முழு நேரக் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு வேலை தேடும் சமயம் நடந்த முதல் பேட்டி எனக்கு நினைவுக்கு வந்தது. பெயர், படிப்பு எல்லாம் கேட்டு விட்டு, ‘நீ எந்த communityயைச் சேர்ந்தவன்?’ என்று கேட்டார் அதிகாரி. எனக்கு ஏனோ அவரைச் சீண்ட வேண்டும் என்று ஆத்திரமாக இருந்தது. காலையில் 10-00 மணிக்குப் பேட்டிக்கு அழைத்திருந்தார்கள். பேட்டி ஆரம்பித்தது மாலை 4-00 மணிக்கு. கேவலம் கால தாமதத்திற்கு ஒரு sorry கூடச் சொல்லவில்லை என்னைப் பேட்டி கண்ட கனவான். நான் உட்கார்ந்திருந்த நாற்காலிக்கும் அவர் அமர்ந்திருந்த சுழல் நாற்காலிக்கும் நடுவே பெரிய மேஜை. என் கை அவரது கன்னத்தை எட்ட நிச்சயம் எந்தவித சௌகரியமும் இல்லாத ஒரு எரிச்சல் வேறு. ‘நான் ஆனமலைக் குன்றுகளைச் சார்ந்த டோடா இனத்தின் சக்கிலியப் பிராமணன், பேட்டிக்கு வரும் அவசரத்தில் நெற்றிக்கு இட்டுக் கொள்ள மறந்துவிட்டேன். அந்தத் தவறுக்காக பேட்டிக்காகக் காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் குறைந்தது மூன்று முறைகளாவது என் குலதெய்வத்திடம் மன்னிப்புக் கேட்டுகொண்டு விட்டேன்’ என்று அமைதியாகப் பதில் சொன்னேன். அந்த அதிகாரி நிச்சயமாக காண்டாமிருகத் தோல் படைத்தவராகத் தான் இருந்திருக்க வேண்டும். என் நக்கலை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை. என்னிடம் சற்று வகையாகவே மாட்டிக் கொண்டார். ‘பார்த்தால் அந்த மாதிரித் தெரியவில்லையே’ என்று வியந்தார். நான் ‘நீங்கள் டோடர்களைப் பார்த்திருக் கிறீர்களா?’ என்றேன். அவர் ‘இல்லை’ என்று சொல்ல, நான் ‘பிறகெப்படி அவ்வாறு சொல்கிறீர்கள்? வெளித் தோற்றங்களெல்லாம் மாயையே’ என்று உடனே சொன்னேன். அப் பொழுதுதான் அந்தக் காண்டாமிருகத்திற்கு நான் அதை நையாண்டி செய்வது கொஞ்சம் புரிந்தது. இருந்தாலும் அவருள் ஒரு ஐயம். என்னுடைய சான்றிதழ்களைப் புரட்ட ஆரம்பித்தார். என்னுடைய S.S.L.C. புத்தகத்தைப் பார்த்தார். எந்த இனத்தைச் சார்ந்தவன் என்று புரிந்துகொண்டிருக்க வேண்டும். ‘நீ மிகவும் திமிராகப் பதில் சொல்கிறாய். பேட்டி சமயத்திலேயே இப்படி நடந்துகொள்கிறாய். வேலை தந்தால் எப்படி நடந்து கொள்வாயோ?’ என்று கோபாவேசப்பட்டார். எனக்கு ஆத்திரம் அதிகரித்துக்கொண்டிருந்தது. அவரிடம் அந்த அறையில் குடிதண்ணீர் கிடைக்குமா என்று கேட்டு, அவர் ஆச்சரியத்துடன் மூலையிலிருந்த ஃபில்டரைச் சுட்டிக் காண்பிக்க, நான் மூன்று டம்ளர் தண்ணீரை நிதானமாகக் குடித்துவிட்டு, திரும்பவும் என் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். ‘Prevention is better than cure. தயவுசெய்து அடுத்து வரும் அப்பாவியிடம் communityயைப் பற்றிக் கேட்காதீர்கள். என் நேரத்தை வீணடித்ததற்கு உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி. உங்கள் ஆண்டவர் உங்களுக்கு நல்ல புத்தியைத் தரட்டும்’ என்று அவரை வாழ்த்திவிட்டு வெளியேறினேன். 20 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நம் நாட்டில் ஒரு காந்தி பிறக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இந்தச் சம்பவத்தைத்தான் வீட்டுக்காரக் கிழவனார் என் நினைவுக்குக் கொண்டு வந்தார்.
டிசம்பர் 1982. மூன்றாவது வாரம். புது வீட்டில் புதுமனை புகும் எல்லாச் சடங்குகளும் என் கசப்புடன் நிறைவேறிக் குடியேறினோம். பல முறைகள் பூரான்கள் வந்தன. இரவில் கொசுக்களின் ஆதிக்கம். அடுத்த பகுதியில் ஒரு நாள் முன்னிரவு ஒரு பாம்பு வந்தது. அவர்கள் அலறியே விட்டார்கள். அதைப் பிடித்து உயிரோடு கொளுத்தினார்கள். சம்பவத்தைப் பார்த்த வீட்டுக்காரர் ‘குட்டிப் பாம்புதானே பின்னால் புளிய மரம் அதான்’ என்று சமாதானம் சொல்லிவிட்டுச் சென்றார். அவரைப் பொறுத்தவரை படமெக்கும் நாகப் பாம்போ, ராட்சத மலைப் பாம்போ வந்தால்தான் பெரிய விஷயம். மேலும் எல்லாப் பாம்புகளும் விஷமுடையவை அல்ல. அது கடித்து யாராவது மண்டையைப் போடும் வரை காத்திருந்தால்தான் நமக்குப் பாம்புகளைப் பற்றிய உயிரியல் அறிவு ஏற்படுகிறது. மேலும் நாம் மனிதர்களாக இருப்பதால் சக ஜீவிகள் வாழ் வதைவிட நாம் வாழ்வதே நமக்கு முக்கியம். அங்கீகரிக்கப்பட்ட அநியாயங்கள்தான் மனிதனுடைய வன்முறைகள் வெளிப் படுவதற்கு எவ்வளவு சௌகரியத்தைச் செய்து கொடுத்திருக் கின்றன! நாம் அமைதியைத் தவிர வேறு எதையும் நாடாத சாந்தஸ்வரூபிகள் என்று நினைத்துக் கொள்வதில்தான் என்ன பரமானந்தம்! சுறாப்புட்டுத்தான் எவ்வளவு சுவையாக இருக் கிறது! வேட்டைக்காரர்கள் இன்னும் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்! விலங்குகளின் சுதந்திரத்தைப் பிரக்ஞையே இல்லாமல் பறித்து, கூலி கொடுக்காமல் வித்தைகளைச் செய்யச் சொல்லி கூட்டங்களுக்கு மகிழ்வூட்டி ஊர் ஊராகச் சென்று திரவியம் தேடவில்லையா? யானைகளும் ஒட்டகங்களும் கோவில்களை அலங்கரிக்காவிட்டால் புனிதம் குறைந்துவிடுகிறது நமக்கு. எத்தனை கூண்டுக் கிளிகள்! எத்தனை தொட்டி மீன்கள்! சமூக அரசியலைச் சற்றே நிறுத்திக்கொள்கிறேன்.

  1. மழை பெய்ததில் அடுத்த பகுதி வீட்டில் சுவர்கள் ஷாக் அடித்தன. நான் வாங்கி வைத்திருந்த ‘பொய்த்தேவு’ம், ‘நீலக்கடலும்’ கறையான்களால் படிக்கப்பட்டு ஜீரணிக்கப் பட்டன. கறையான்கள் இலக்கியம் படிக்கக் கூடாதென்று
    எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. அடுத்த பகுதியில் இருந்தவர்கள் வீட்டைக் காலி செய்தனர்.
    1984 ஜூன். அடுத்த பகுதியில் ஒரு பிராமணக் குடும்பம் குடியேறப் போகிறதாம். நாம் மீன், முட்டை முதலியவைகளை ரகசியமாகத்தான் சமைத்துச் சாப்பிட வேண்டுமாம். தாராவின் கண்ணோட்டப்படி ஒவ்வொரு கிழமையும் ஒரு கடவுளின் கிழமையாக இருப்பதாலும், ஹிந்துக் கடவுள் தொகை எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலும், தெய்வீக தினங் களில் புலால் உணவு சாப்பிடுவது குற்றமாதலாலும், இது எங்களுக்குச் சமாளிக்க முடியாத ஒரு பெரும் பிரச்சனையாகப் படவில்லை. குழந்தைக்கு தினமும் ஒரு அவித்த முட்டை கொடுப்பதோடு சரி. மீனோ, கறியோ நான்கு மாதமொரு முறை செய்தால் அதுவே பெரிது. பாவங்களைச் சில நாட்களில் மட்டும் செய்தால் எப்படி அது புண்ணியமாகிவிடப் போகிறது என்று எனக்கு இன்றும் புரிந்ததில்லை.
    ஒரு வங்கியில் வேலை செய்து வந்த ஒரு தனவந்தரும் அவர் குடும்பமும் புதிதாக அந்தப் பகுதியில் குடியேறினர். தனவந்தர் வீட்டுக்காரரிடம் ‘மழை பெய்தால் வீடு ஒழுகுமா?’ என்று கேட்டார். ‘ஒரு துளி உள்ளே சொட்டினால் செருப் பெடுத்து அடியுங்கள்’ என்று உணர்ச்சி வசப்பட்டார் முதியவர். என் செருப்புகளில் ஒன்றைத் தனவந்தரிடம் கொடுக்கலாம் என்று என்னுள் ஒரே துடிப்பு. எல்லாச் சமயத்திலும் உண்மையாக நாம் நடந்துகொள்ளச் சாத்தியப்படுமா என்ன?குடி வந்தது சங்கீத ஞானம் பெற்ற குடும்பம். இரண்டு பெண் குழந்தைகள். அந்தத் தனவந்தரின் மனைவியின் தாயார் அந்த இரண்டு குழந்தைகள் எங்கள் குழந்தையுடன் விளையாடுவதைப் பார்த்து, ‘பெண் குழந்தைகள் லட்சுமி கடாக்ஷம்’ என்று சொல்லி விட்டுப் போனாள். அவர்கள் பழகுவதற்கு மிகவும் நல்லவர்கள் என்பதில் எனக்கு ஒரு நிம்மதி. ஆனால் அவர்கள் முறை வரும் போது அந்தப் பெண்மணி வாசல் பெருக்கிக் கோலம் போடவில்லை. லச்சி வந்தால் கழிப்பறைக்குத் தண்ணீர் ஊற்ற மாட்டேன் என்றாள். பிராமணர்களாம். என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. தாராவே அவர்களுக்காக இவைகளைச் செய்தாள். என் குழந்தையோடு அவர்களது குழந்தை கள் வாஞ்சையோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களை எந்த விதத்தில் கண்டிப்பது?
    ஒரு நாள் வீட்டுக்காரம்மாள் அந்தப் புதிய பெண்மணி யிடம் மெதுவான குரலில் ‘அவுங்களா, ஃபான் போன மாசம்தான் போட்டாங்க. முந்தியெல்லாம் அவுங்க வீட்லெ அதெல்லாம் ஒண்ணுமில்லெ’ என்று சொல்லிக்கொண்டிருந்தாள். நாங்கள் சமீப காலத்தில்தான் வசதி பெற்றவர்களானோம் என்று பிறருக்கு அறிவிப்பதில் வீட்டுக்காரம்மாளுக்கு என்ன லாபம் என்று எனக்கு விளங்கவில்லை. ‘நேற்று வரை ரிக்ஷா இழுத்தவன், இன்றைக்கு கார் என்ன, பங்களா என்ன, எடுபிடி ஆட்கள் என்ன’ என்று அங்கலாய்ப்பதிலோ, தெருவில் தன் பாட்டுக்குக் குடித்து விட்டு யாருக்கும் கேடு விளைவிக்காது சற்று தள்ளாடி நடந்து செல்பவனைப் பார்த்து ‘போராம் பார், குடிகாரத் தேவடியாப்பிள்ளை’ என்று வசைச் சொற்கள் உதிர்ப் பதிலோ என்ன அர்த்தம் இருக்கக் கூடும் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
    வீடு வசதியில்லை. இயற்கைக் காற்று துளிகூட உள்ளே வருவதற்குச் சந்தர்ப்பம் இல்லை. தன் ஆஸ்த்மாவுக்கு இயற்கைக் காற்று அத்தியாவசியம் என்ற பிரக்ஞை தோன்ற தனவந்தருக்கு இரண்டு மாத காலம் பிடித்தது. மனிதர் கொஞ்சம் மந்தம் என்று நினைக்க வேண்டியதாயிற்று. எதையும் அனுபவரீதியில் ஆழமாகப் புரிந்துகொண்டுதான் முடிவெடுப்பவர் போலும். வீட்டைப் பார்த்த புதிதிலேயே உடனே புரியக்கூடிய சமாச்சாரங்கள் அவருக்குச் சொந்த அனுபவம் ஏற்பட்ட பிறகே தெரிந்தன. அவர்களும் வீட்டைக் காலி செய்தனர்.
    ஒரு மாதத்திற்குப் பின் வேறொரு குடித்தனம் வந்தது. இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். எதற்கு, வேண்டாம்; ஒரு இடத்தில் நிறுத்தித்தானே ஆக வேண்டும். அது இந்த இடமாக இருக்கட்டுமே.
    1984 காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறை. காலையில் நான்கு மணிக்கு எழுந்து ப்ளாக் காஃபி போட்டுக் குடித்துவிட்டு, ஒரு ‘புளிய மரத்தின் கதை’யை வலது கையில் பிடித்துக் கொண்டு, முழங்கையைத் தலையணைமீது வைத்துக்கொண்டு விட்ட இடத் திலிருந்து படித்துக்கொண்டிருந்தேன். கறுப்பாக ஒன்று என் பின்னாலிருந்து முழங்கைக்கும் உடம்புக்கும் நடுவிலிருந்த இடைவெளி வழியே கதவை நோக்கி ஓடி மறைந்தது. சிறிது நேரம் கழித்து அது ஒரு பெரிய எலி என்று புரிந்துகொண் டேன். காலை மணி ஐந்து. வாயில் டீ தாகம் எடுத்தது. வழக்க மாகச் செல்லும் டீக்கடை இந்நேரம் திறந்திருக்கும். நடை விளக்கின் மின்விசையை அழுத்தினேன். விளக்கு வெளிச்சத்தில்
    பூதாகாரமான பல்லி. ஒன்று விசையின் மிகவும் அருகாமை யிலிருந்து விருட்டென்று மேலே சென்றது. கொஞ்சம் பயந்து விட்டேன். வீட்டுக்காரரிடம் இவைகளைச் சொல்லவில்லை. அவருக்கு நான் அதிகாலையில் சந்தித்த சக ஜீவன்கள் பெருச் சாளியாகவோ உடும்பாகவோ இருந்தால்தான் சிறிது அசைவு ஏற்படும். மேலும் எலிகளையும், பல்லிகளையும், பூரான்களையும், கரப்பான்பூச்சிகளையும், கொசுக்களையும், கறையான்களையும், குட்டிப் பாம்புகளையும் அவர் சோறு போட்டு வளர்க்கவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். தான் உயிரோடிருப் பதைத் தவிர அவர் எந்தக் காரியமும் செய்யவில்லை. உயிரோடு இருப்பதற்கு எந்தப் பிரத்தியேகப் பிரயாசையும் செய்ய வேண்டிய அவசியமுமில்லை.
    எனக்குச் சூதாட்டத்திலும் தனிநபர் சொத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. சூதாட்டத்தில் வெற்றியடையப் போதிய திறமைகள் என்னிடம் இல்லாத காரணத்தினாலும், பொருள் வசதி குன்றியவனாகவே இருப்பதினாலும் ஒரு வேளை இவ் வாறு தத்துவம் பேசி என்னை நியாயப்படுத்திக் கொள்கிறேனோ என்னவோ! அப்படியும் நீண்ட காலம் முன்பு ஒரே ஒரு முறை சூதாட்டம் ஆடியிருக்கிறேன். வேலாயுதமும் நானும் ஒரு பந்தயம் கட்டிக்கொண்டோம். தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் சார்மினார் சிகரெட்டுகளை முழுமையாக விரல் சுண்டும் வரை புகைக்க வேண்டும். நடுவில் தண்ணீர் அருந்தக் கூடாது. பரிசு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி. பந்தயம் மேல் சுவையாகவே இருந்தது. வேலாயுதத்தினால் 7க்கு முடியவில்லை. ‘நம்மால் முடியாது சாமி’ என்று இருமிக் கொண்டே நாலு கிளாஸ் தண்ணீரைக் காலி செய்தார். நான் 8 க்குள் முடித்துக் கொண்டிருக்கலாம். 12 வரை கஷ்டப்பட்டுப் புகைத்து விட்டுத்தான் நிறுத்தினேன். வேலாயுதம் செலவில் ஹோட்டல் ஸீலார்டில் பிரியாணி சாப்பிட்டு, அறைக்குச் சென்று வாந்தியெடுத்து அடுத்த நாள் சுகவீனமாகப் படுக்க வேண்டியிருந்தது. அற்ப வெற்றியாயிருந்தாலும் சிரமப்பட்டுப் பெற்றது. அனுபவிக்கத்தான் கொடுத்து வைக்கவில்லை.
    டீக் கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டு, உடனே இந்த மாதத்திலிருந்து லாட்டரி சீட்டு மாதம் ஒன்று வாங்கி, அதில் என்றைக்காவது நிச்சயமாக வரும் அதிர்ஷ்டத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டி யார் தொந்தரவும் இல்லாமல், 6 மாதங்களுக்கு ஒரு முறை Pest Control செய்து பூச்சி பொட்டுக்கள் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பேராசைப்பட்டுக் கொண்டிருந்தேன். டீ தீர்ந்துவிட்டது சற்று நேரம் கழித்துத்தான் தெரிந்தது. வருங்காலப் பேருவுவகையை நினைத்து நிகழ்கால குட்டி சந்தோஷத்தைக் கைவிட்ட எரிச்சலில் இன்னொரு டீயை வரவழைத்துக் கவனமாக ரசித்துக் குடித்துவிட்டு வீடு திரும்பினேன். நாள் கிழமை தெரியாமல் கெட்ட காரியத்தில் நம்பிக்கை ஏற்பட்டது எனக்குச் சற்று வருத்தமாக இருந்தது. காந்தி ஜெயந்தி அன்று ஒரு மனிதனுக்குச் சூதாட்டத்தில் நம்பிக்கை ஏற்படலாமா என்ன?
    தயவுசெய்து என் விலாசத்தைத் தெரிந்துகொண்டு வீட்டுக் காரரிடம் வத்தி வைத்து விடாதீர்கள். லாட்டரி லட்சாதிபதி ஆகும்வரை நான் இந்த வீட்டில் இருந்தாக வேண்டும். இவ்வளவு வசதிகள் கொண்ட வேறு வாடகை வீடு எனக்கு எங்கே கிடைக்கப் போகிறது?
    பின்குறிப்பு:
    இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்றும், சென்னையில் ஒரு வசிக்கும் அறை, ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கையறை, தனிக் குளியலறை, தனிக் கழிப்பறை கொண்ட பங்களாக்கள் ரூ. 40 வாடகையில் நிறையவே கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்றும், வீட்டுக்காரர்கள் ஒட்டு மொத்தமாக அனைவரும் தங்கமானவர்கள் என்றும், தனிக் குடித்தனம் செய்ய வரும் புதுத் தம்பதிகளானால் அவர்கள் ரூ. 20க்கே இப் பங்களாக்களை உவந்தளித்து தாம்பத்தியத்தைச் சுவைக்க எல்லா வகையிலும் உற்சாகப் படுத்துகிறார்கள் என்றும், பங்களாக்களில் எந்தவிதப் பூச்சியும் வாசம் செய்வதில்லை என்றும், சென்னை மாநகர் துப்புரவானது என்றும், ஆவினங்கள் அனைத்தும் மிருகக் காட்சிசாலையில் மட்டும்தான் இருக்கின்றன என்றும், படித்து முடித்தவுடன் கையில் ஒரு இருபது வேலைகளை வைத்துக்கொண்டு ‘உனக்கு எந்த வேலையில் நாட்ட முண்டோ, தெரிந்தெடுத்துப் பணி புரி’ என்று கம்பெனிக் காரர்கள் கூவி அழைக்கிறார்கள் என்றும், காந்தி தீண்டாமையை அறவே பாரத நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டி அதற்கு ஒரு பிரம்மாண்டமான சமாதி எழுப்பி விட்டார் என்றும், தற்பொழுதைய சமுதாயம் ஒரு classless society என்றும், லாட்டரிச் சீட்டு வாங்குவது தேங்காய், பழம் விபூதி, கற்பூரம் வாங்குவது போன்ற ஒரு புனித மான செயல் என்றும், அது நிச்சயம் சூதாட்டம் இல்லை என்றும், ஏழைகளைப் பணக்காரர்களாக்குவதற்காகவே செய்யப்பட்ட பிரத்தியகே ஏற்பாடு என்றும், பூலோக சொர்க்கவாசிகளான சென்னை வாழ் மக்கள் அனை வருக்கும் நன்றாகவே தெரிந்திருப்பதால், கதை அனைத் தும் சரடு என்று நீங்கள் லகுவில் புரிந்துகொள்வீர்கள் என்றும் நம்புவதோடு, கடைசியாக, நான் மிகவும் என்றும், ஆரோக்கியமான யோக்கியமானவன் சிந்தனைகள் மட்டும் கொண்டவன் என்றும் நான் உறுதி யளித்துக் கொள்கிறேன்.