
ஆசிரியர் கலைமகள்……………….
பஞ்ச தருக்கள்(ஐந்து மரங்கள்)பாதிரி, மா, வன்னி, மந்தாரை,வில்வம் இவை தேவலோக தருக்கள் என அழைக்கப்படுகின்றன! சிவ பூஜைக்கு விசேஷமானது வில்வ பத்திரமாகும். வில்வம் லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது…………
வில்வத்தை சிவனுக்கு சமர்பித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை ஆதிசங்கரர் வில்வாஷ்டக மகா மந்திரமாக நமக்கு அருளி உள்ளார். இதை பில்வாஷ்டகம் என்றும் சொல்லுவார்கள்.
கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலுரம் எனப் பல பெயர்களில் தமிழில் வில்வம் அழைக்கப்படுகிறது!. கூவிளம் என்னும் சொல் வில்வ மரத்தைக் குறிக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் கூவிளம் என்பதும் காட்டப்பட்டுள்ளது. (குறிஞ்சிப்பாட்டு 65)
“நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத் தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த ததுவனார் தங்குங் கோயில் காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார் வீதித் தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவை யாறே.” திருஞானசம்பந்தர் பாடிய பதிகமாகும் இது. வில்வத்தை கூவிளம் என தேவாரம் சொல்வதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்!
பல சிவன் கோயில்களுக்கு வில்வ மரம் தான் ஸ்தல விருட்சமாக இருக்கிறது! சில கோயில்களைக்(பட்டியல்) கீழே தந்துள்ளேன்…………………..…
திருவையாறு, திருவெறும்பியூர், திருமயேந்திரப்பள்ளி திருத்தென்குடித்திட்டை திருக்கலிக்காமூர் , திருமூக்கீச்சரம், திருச்சத்திமுற்றம் , திருக்குரக்குக்கா, திருவியலூர் , திருக்கருக்குடி, திருவிளமர் திருக்குருகாவூர் வெள்ளடை ,திருக்கழிப்பாலை , திருக்குரங்கணில்முட்டம், திருவேட்டக்குடி ,திருநன்னிலம்(திருநன்னிலத்துப் பெருங்கோயில்) திருகோகர்ணம்
(கோகர்ணா), திருக்கருவிலிக்கொட்டிட்டை, திருப்பள்ளியின் முக்கூடல் ,திருவிடைவாய்,
திருக்கோடி(கோடிக்கரை), திருக்கொள்ளிக்காடு திருஇராமேச்சரம், திருவைகாவூர், திருஇலம்பையங்கோட்டூர்,
திருஆனைக்கா,திருஆப்பனூர்,
திருப்பரங்குன்றம்,திருவெஞ்சமாக்
கூடல், திருக்கோழம்பம், திருத்தென்குரங்காடுதுறை,திருநனிபள்ளி,
திருநெல்வெண்ணெய் , தருமபுரம் ,
திருநள்ளாறு, திருக்கோட்டாறு
திருஅறையணிநல்லூர்,திருமீயச்சூர் இளங்கோயில், திருக்கடவூர் வீரட்டம் , திருக்கடவூர் மயானம் திருக்கருவூர் ஆனிலை(கரூர்)
திருக்கானப்பேர்(காளையார் கோயில்) , ,திருவேதிகுடி,திருகற்குடி, திருநெடுங்களம், திருக்கோணமலை திருக்கண்டியூர்,சக்கரப்பள்ளி, திருநல்லூர், திருச்செம்பொன்பொள்ளி , திருப்பறியலூர் திருவலஞ்சுழி, திருநீலக்குடி, திருத்தெளிச்சேரி, திருமீயச்சூர், திருச்சிறுகுடி, திருஅரிசிற்கரைப்புத்தூர், திருக்கொண்டீச்சரம், திருவெண்டுறை,திருக்கொள்ளம்பூதூர், திருக்கோவலூர் வீரட்டம்,திருவல்லம், திருமாற்பேறு, திருஇடைச்சுரம், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் , திருக்கானூர், திருவடுகூர், திருப்பூந்துருத்தி, திருப்பாற்றுறை, திருக்கூடலையாற்றூர், திருப்பழனம் திருநெய்த்தானம் திருத்தெங்கூர், திருவிற்கோலம்(கூவம்) ,திருப்பெரும்புலியூர் ,திருஅழுந்தூர் ,திருவக்கரை, திருவெண்காடு , திருப்பழையாறை வடதளி முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது.
வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. சித்த மருத்துவர்கள் வில்வத்தை சரியானபடி பயன்படுத்துகிறார்கள்.
வில்வப்பழத்தைப் பிழிந்து சர்பத் போன்ற பானங்கள் செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும். வில்வப்பழத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், மாவுச்சத்துக்கள், சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் நியாசின் ஆகியவை உள்ளன.
மூன்று தள வில்வம் திரிசூலத்தை உணர்த்துகிறது. எவராலும் எதிர்க்க முடியாத ஆயுதம் சிவனின் திரிசூலம். அதேபோல வில்வம் தீர்க்காத வியாதியே இல்லை. சிறந்த ஒளஷதம்.
பிரளய காலத்தில் வேதங்கள் ஒன்று கூடி ஈஸ்வரனிடம் “நாங்கள் அழியாமல் நீ காக்கவேண்டும்” என்று வேண்டி யபோது, ”நீங்கள் திருவைகாவூர் ( திருகருகாவூர்) ஸ்தலம் சென்று அங்கே வில்வ மரத்தின் வடிவில் தவம் செய்யுங்கள்” என்று ஈஸ்வரன் கூறியதால் அந்த ஊருக்கே வில்வாரண்யம் , வில்வக் காடு என்ற பெயர் உண்டு என்கிறது திருகருகாவூர் ஸ்தல புராணம்.
.வில்வத்தில் பலவகைகள் உண்டு. மஹா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என்பவை அவை. அவற்றில் மூன்று தள வில்வமே சிவபூஜைக்கு உகந்தது. ஐந்து, ஏழு தள வில்வங்கள் இருக்கின்றன ஆனால் இவைகளை வைத்து பூஜை செய்வதில்லை!
சிவபூஜைக்கு வில்வம் சூரியோதயத்துக்கு முன்பே பறித்து வைப்பது வழக்கம்.
வில்வ மரத்தில் இலை பறிக்கும் போது வில்வமரத்தின் அனுமதி பெற்று பறிக்க ஒரு ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
“நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே”
”முக்தி அருள்வதும், மோக்ஷ உருவமாகவும், த்ரிமூர்த் திகளின் வடிவமாகவும் அளவற்ற ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாக்ஷம் அருளுவதுமான வில்வ மரமே உன்னை மனப்பூர்வமாக நமஸ்கரிக்கிறேன். ஹே வில்வ விரு க்ஷமே , நீ இறப்பு பிறப்பு வியாதிக்கு ஒளஷதமல் லவா.? உன்னிடமிருந்து உன்னுடைய கிளைகளிலி ருந்து த்ரிதளமான மூன்று இதழ் வில்வ இலைகளை பரமேஸ்வரன் பூஜைக்காக கிள்ளி பறிக்கிறேன். உன் அனுக்ரஹத்தோடு பறிக்கிறேன்” என்பது இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்.
வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் திருப்பதியில் சீனிவாச பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது என்ற தகவலும் உண்டு!
வில்வ மரத்துக் காயை பூஜையில் வைத்து வழிபடலாம். தினசரி பூ போட்டு சிவனாகவே பாவித்து நைவேத்தியங்கள் செய்யலாம். வில்வ காய் பின்னப்பட்டால் (சிதைந்து போனால்)உடனே அதனை பூஜையில் இருந்து எடுத்து வில்வ மரத்திற்கு அடியில் கொண்டு போய் போட வேண்டும். வேறொரு காயை எடுத்துக் கொண்டு பூஜையில் வைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு விதி இருப்பதாகவும் சொல்கிறார்கள்…………
