செ.புனிதஜோதி கவிதை

அவனின் ஒவ்வொரு பெயரையும்
அரோகரா கோஷத்தோடு
மெய் உருக
பெண்கள்
விளம்பிக்கொண்டிருந்தனர்.

மலரிடம் தேன் அருந்தும் வண்ணத்துப்பூச்சியின் சிறகாய்
திறந்தும்,மூடியும்
தன் சொரூப விளையாட்டைக்
காட்டின
ஒவ்வொரு இதழும்.

அவனின்
ஒவ்வொரு பெயரிலும்
தேன் குழைந்த தித்திப்பை
கவிதை உணரத்தொடங்கியதை
அவன் உணந்தானோ
என்னவோ?

எம் தமிழ் புலவர்கள்
உணர்ந்திருந்தனர்
அந்த ஆன்மா
எங்கிருந்தோ
எனக்குள்ளும்
எழுதத் தொடங்கியிருந்தது

இப்போது
மழை விழுந்த
நிலமென
மாறிகொண்டிருந்தேன்.

அந்தக்
கந்தன்,கடம்பன்
இன்னும்,இன்னும்
அழகாய் தெரிந்தான்
எம் தமிழால்.