
இந்த வருட லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் என் இஷ்ட தெய்வம் முருகன் ஐ மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. அட்டைப்படத்திலிருந்து தொடங்கி, கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட கவிதை/கட்டுரைகள் என முருகன் பேரில். இருபத்தொரு சிறுகதைகளின் ஊர்வலமும் இந்த இதழில். ஒருவராக நின்று இத்தனை படைப்புக்களைத் தொகுத்து, தீபாவளிக்கு முன்னர் வெளியிடவும் வேண்டும். அதையும் செய்திருக்கிறார் திருமதி கிரிஜா ராகவன். ஒரு பெரிய திருவிழாவைப் போல் பணிபுரிந்து அதைக் வெளிக்கொண்டு வந்ததும் சற்றும் ஓய்வின்றி, தீபாவளி அன்றே குவிகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவின் ‘சூம்’ நிகழ்வில் கலந்து கொண்டார். அதன்பிறகு, தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் முதன்முறையாக , தீபாவளி மலரில் பங்களிப்புச் செய்த 40 எழுத்தாளர்களையும் கௌரவிக்கும் பொருட்டு நவம்பர் இரண்டாம் தேதி கோட்டூர்புரம் நூலக அரங்கில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். சிறப்பாக வந்துள்ள மலரை அறிமுகம் செய்து, ஒரு விமர்சனமும் செய்யும் விழாவில், எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்யும் இனிய பணியினையும் சேர்த்து, வித்தியாசமாகக் கொண்டாடினார் கிரிஜா ராகவன்.
ஆறு மணிக்குத் தொடங்கிய விழாவில், திருப்புகழை இறைவணக்கமாகப் பாடினார் திருமதி ரேவதி பாலு (இவர் எழுத்தாளர் ரஸவாதியின் மகள்)

தலைமை ஏற்றுப் பேசிய திரு நல்லி செட்டியார், தீபாவளி மலர் குறித்த தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தீபாவளி மலரைத் தயாரிப்பதில் உள்ள சிரமங்களை நகைச்சுவை கலந்து பேசினார் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன். மலரில் வந்துள்ள கட்டுரைகளில் சிலவற்றை எழுதியவர்களையும், சிறுகதை எழுதிய சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டார். நீண்ட காலமாக அவரது எழுத்து மற்றும் பத்திரிக்கைப் பணியின் அனுபவம் அவரது பேச்சில் தெரிந்தது.
படைப்பாளிகளின் தொடர்பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி அருமையானதொரு உரையாற்றினார் ஶ்ரீராம்.
திரு நல்லி செட்டியார் நிகழ்ச்சியின் நிறைவு வரை இருந்து, எல்லா எழுத்தாளர்களுக்கும் சால்வை போர்த்தி, நினைவுப் பரிசும் வழங்கி கெளரவித்தார். கல்கி மேனாள் ஆசிரியர் திரு ரமணன், ‘எழுத்தாளர்களுக்கு மரியாதை’ செய்த கிரிஜா ராகவனின் இந்த அரிய முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். அது முற்றிலும் உண்மையே. மூத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்த இந்நிகழ்வு அடியேனுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது. அதிலும், தலைதீபாவளிக்கு வந்திருந்த எனது மகன், மருமகள் மற்றும் மனைவி என குடும்பத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி.
விழாவினை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து, நடத்திய கிரிஜாராகவன் பாராட்டுக்குரியவர்.
