
மனிதனின் வெறித்தனம் முற்றிலும் மாறுவதற்கான வழி தியானம் தான். இலட்சியங்கள், கொள்கைகள் ஆகியவற்றுள் கட்டுண்டு கிடக்கும் மனிதனால்
பிறருடன் ஏற்படும் சச்சரவுகளுக்கு முடிவு கட்ட முடிய வில்லை. குறுகிய தேசீயக் கொள்கைகள், மதக் கொள்கைகள், போலி கௌரவம், ஆணவம் ஆகியவை
மனிதனை அழிக்கிறது. இம்மாதிரியான அழிவிற்கு அடிகோலும் செயல்கள் உலகம் பூராவும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கின்றன.
சகிப்புத் தன்மை, உடன்பாடு, பேச்சு வார்த்தை, சந்தர்ப்பத்தை சமாளிக்கும் நடவடிக்கைகள் இவைகளைக் கொண்டு வெளியுலகத்தின் அழிவினைத் தடுத்து நிறுத்த மனிதன் முயல்கிறான். ஆனால் தனிப்பட்ட முறையில் தன் மனதின் வரையறைகளுக்குள் பதுங்கிக் கொண்டு, சுதந்திரமில்லாமலிருக்கிறான்!
அன்பு, நல்ல குணம் என்பது கொள்கைகளாலோ இலட்சியங்களாலோ, சூத்திரங்களாலோ, வருவது இல்லை. மேற்கூறியவைகளில் அன்பு மறுக்கப்படுகிறது. தியானம் என்பதுதான் அன்பின் மலர்ச்சியாகும்.
இளங்காலைப் பொழுதில், அந்த பள்ளத்தாக்கு மிகவும் நிசப்தமாக இருந்தது. ஆந்தை கூட அதன் துணையை அழைப்பதை நிறுத்தி விட்டது. அதன் கனத்த குரலொலி ஒரு மணி நேரம் முன்பு கேட்டுக் கொண்டிருந்தது. கதிரவன் இன்னும் உதயமாகவில்லை. நட்சத் திரங்கள் இன்னும் மின்னிக் கொண் டிருந்தன. சிறிது நேரத்தில் மேற்கிலிருந்த மலைப் பக்கமாக ஒரு நட்சத்திரம் மறைந்தது. கிழக்கிலிருந்து வெளிச்சம் லேசாகப் பரவத் தொடங்கி யது. சூரியன் உதயமானதும், பனித் துளி படர்ந்திருந்த அந்தப் பாறைகள் தகதகவென்று மின்னத் தொடங்கின. கற்றாழை, மெருகுபோட்டுக்
கொண்டு விட்டது போல வெள்ளியாய் ஜொலித்தது. அந்த நிலப்பகுதியின் அழகு விழித்தெழுந்தது.
குரங்குகள் வராந்தாவிற்கு வந்து விட்டன. அவைகளில் இரண்டு, சிவந்த முகத்துடனும், பழுப்பு நிறத் தேகத்துடனும் மிகவும் நீளமாக இல்லாத வாலுடனும் காணப்பட்டன. மற்றதை பேன் ஒன்று, எடுக்கச் சொறிந்தது. பேன் கிடைத்ததும் அதை போட்டு ஜாக்கிரதையாக வாயில் முழுங்கியது. அமைதியாக இருக்க முடியாமல், அவைகள் வராந்தாவிலிருந்து ஒரு பெரிய மரத்தின் கிளைக்குத் தாவி வாய்க்காலைச் சென்றடைந்து இங்கு மங்குமாக அலைந்து திரிந்தன.
அந்தக் கிராமம் இந்தக் காலைப் பொழுதில் விழித்துக் கொண்டு விட்டாலும் இரவின் நிசப்தம் இன்னமும் அங்கு நீட்டித்துக் கொண்டிருந் தது. இது ஒரு அசாதாரணமான அமைதி இரைச்சல் இல்லாததால் மட்டும் ஏற்பட்டதல்ல. மனம் இந்த அமைதியைத் தானே உருவாக்கிக் கொள்ளவில்லை. முடிவற்ற தனது தொணதொணப்பிலிருந்தும் மனம் இந்த அமைதியை தோற்றுவிக்கவில்லை. எவரும் கேட்காமலே, எந்தவித காரணமும் இல்லாமலேயே வந்தது இந்த அமைதி. இந்த சலனமற்ற நிலை. இந்த மலைகள், இந்த மரங்கள், இந்த மனிதர்கள், கரையும் இந்த காக்கைகள் எல்லாம் இந்த அமைதியில் அடக்கம். இந்த நிலை, மாலை வரை தொடரும். மனிதன் மட்டும் மட்டும் இதைப் புரிந்து கொள்வதில்லை. இரவிலும் இந்த அமைதி அது அந்த பாறைகளுக்குத் தெரியும் – ஏன், புதிதாக நடப்பட்ட ஆலமரத்திற்கும் பாறைகளுக்கு நடுவேயிருக்கும் பல்லிக்கும் புரியும்.
நாலைந்து பேர் அந்த அறையில் இருந்தனர். அதில் ஒரு சிலர் மாணவர்கள், மற்றவர்கள் வேலையிலிருக்கும் பட்டதாரிகள். ஒரு மாணவர் கேட்டார்: “நான் உங்கள் சொற் பொழிவுகளைப் போன வருடமும் கேட்டேன். மறுபடியும் இந்த வருடமும் கேட்டேன். நாம் எல்லோரும் ஏதோ ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கிக் கிடக்கும் மனம் கொண்டவர்கள். பழமையில் ஊறிப் போன, பழக்கப்படுத்தப்பட்ட மனம் கொண்டவர்கள் என்று நான் அறிகிறேன். சமூகத்தில் நடைபெறும் கொடூரச் செயல்களையும் பார்க்கிறேன். எனக் குள்ளிருக்கும் பொறாமை, கோபம் போன்ற குணங்களையும் அறிவேன். மாதா கோயில்களின் வரலாற்றில், சண்டைகள், அவைகள் நடத்திய நேர்மையற்ற நடவடிக்கைகள் பற்றி யெல்லாம் படித்திருக்கிறேன். மனங் களை ஆக்கிரமித்து விட்ட நம்பிக்கைகளுக்காகவும், கொள்கைகளுக்காகவும் நடந்த தேவையில்லாத போர்களைப் பற்றி வரலாற்று நூல்களில் படித்திருக்கிறேன். நம்பிக்கைகளும் கொள்கைகளும் எண்ணிலடங்கா பிரச்சினைகளை உலகில் உருவாக்கி விட்டு விடுகின்றன. மனிதனின் கொள்கை வெறி, நம்பிக்கை வெறி – என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் அவனைப் பிடித்து உலுக்குகிறது. இந்தச் சாபக் கேட்டினால் ஒரேயடியாக அழிந்து விடுவோம் போலத் தோன்றுகிறது. நம்மிடம் ஒரு மாற் றத்தை வரவழைத்துக் கொள்ளா விட்டால் இந்த அழிவிலிருந்து தப்ப முடியாது போலத் தோன்றுகிறது. வெறித்தனத்தை நீக்கி நல்ல மாற்றம் அடைந்தவர்கள் மிகச் சிலரே என்றாலும், அந்த சிறுபான்மையினர் முக்கியமானவர்கள். அவர்களால், இந்த வன்முறை சமுதாயத்தின் நன்மைக்காக ஏதாவது செய்ய முடியும். மற்றவர்களின் பிரதிநிதிகளாக, இந்த விஷயத்தை உங்களுடன் கலந்து பேச, நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். எங்களில் சிலர் மாற்றம் அடைய வேண்டி தீவிரத்துடன் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கிருக்கும் தீவிரம் எங்களை எவ்வளவு தூரம் கொண்டு செல்லும் என்று தெரியவில்லை! முதலாவதாக, அரை குறை தீவிரம், உணர்ச்சி வசப்படும் நிலை, அடா வடித்தனம், தான் நினைத்ததை சாதிக்கும் குணம், போலி கௌரவம், தற்பெருமை போன்ற குறைபாடுகளுடைய குணங்களை யுடையவர்கள் இந்நிலையிலிருந்து கொண்டு, எங்களால் மாற்றம் அடைய முடியுமா? மாற்றம் ஏற்படுவது இயலாது என்றால், ஒருவர் மற்றொரு வரை அழித்து, மனித இனமே இல்லை
என்ற நிலை ஏற்படும். பயங்கர விளைவுகளை உண்டாக்கும் நட வடிக்கைகளை சிறிதளவு கட்டுப் படுத்தும் வகையில் சமரச முயற்சிகள் செய்யப்பட்டாலும்,
எங்கோ ஒரு வெறிக்கும்பல் அணு குண்டினைவெடிக்கச் செய்து நம்மெல்லோரையுமே அழித்து விடும் அபாயம் எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கிறது சமூகவியல் நிபுணர்களாலும், அரசியல்வாதிகளாலும் விளக்கப்படும், வெளிப்படையாகவே
நன்றாகத் தெரியும் இந்த அபாயத்தைக் கண்ட பிறகு மாற்றம் அடைய நினைக்கும் எங்களால் முற்றிலுமாக மாற முடியுமா?”
இந்த வன்முறையை ரசிக்கும் நம்மில் சிலர், மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இல்லை. சிலருக்கு இது லாபகரமாகக் கூட உள்ளது. ஒரு சிலருக்கு தேவைப் படுவதெல்லாம், அவர்கள், பாதுகாப்பு என்று கருதி பதுங்கியுள்ள இடத்தில் இருப்பது மட்டுமே. ஒரு சிலர். மாற்றத்தின் மூலம் பெற நினைப்ப தெல்லாம், ஒரு உள்ளக் கிளர்ச்சி, கிளுகிளுப்பு, மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்கள் அவ்வளவே. நம்மில் பலருக்கு ஏதோ ஒரு விதத்தில் பலம், சக்தி, அதிகாரம் தேவைப்படுகிறது. தன் மனதை அடக்கத் தெரிந்ததால் ஏற்படும் பலம், பிறரை அடக்குவதால் கிடைக்கும் அதிகார பலம், புதிய அருமையான கருத்துக் களிலிருந்து பெறும் கருத்து பலம், தலைமையேற்று நடத்துதல், புகழ் இவற்றால் கிடைக்கும் செல்வாக்கு பலம் என்பன போன்று பல வகைகள் உள்ளன. சமய அதிகாரம் எவ்வளவு தீமையானதோ அவ்வளவு தீமையானது அரசியல் அதிகாரம்.
வல்லரசாக இருப்பதாலோ, கொள்கை பிடிப்பு இருப்பதாலோ கிடைக்கும் பலம் மனிதனை மாற்றுவதில்லை. அதுபோலவே, மாற்றம் வரவேண்டும் என்ற விருப்பத்துடன் செய்யும் தீர்மானமோ, மாறிவிட நினைக்கும் மன வைராக்கியமோ மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. “என்னால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. திட வைராக்கியமோ, கொள்கைகளோ, நியமங்களோ, மாற்றம் ஏற்படுத்துவதற்கான வழிகள் இல்லையென்றால், அதற்கான வழி எது? எது உந்துசக்தியாக இருக்க வேண்டும்? மாற்றம் எப்படியாக இருக்க வேண்டும்?” என்று அந்த மாணவர் கேட்டார். அந்த அறையிலிருந்த மூத்தவர்கள், தீவிர கவனத்துடன் இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நிறத்தில் பச்சையும் மஞ்சளுமாக கலந்திருந்த அந்த பறவை மரக் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அந்த இளங்காலைப் பொழுதில், அது வெய்யிலில் காய்ந்து கொண்டே அலகினால் இறகுகளை ஒழுங்கு படுத்திக் கொண்டு, ஓங்கி உயரமாய் வளர்ந்திருந்த அந்த மரத்தின் உயரத் திலிருந்துகொண்டு, கீழே பார்த்துக் கொண்டிருந்தது. அறையிலிருந்தவர்களில் ஒருத்தர் கூட ஜன்னல் வழியாக அந்தப் பறவையைப் பார்க்கவில்லை.
வயதில் மூத்தவர் ஒருவர்,
“எனக்கு மாற்றம் தேவை தானா என்று உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. மாற்றத்தினால் நிலைமை இன்னும் மோசமாகப் போனால்கூட போக லாம். நிச்சயமற்ற தன்மை, நிரந்தர பாதுகாப்பின்மை, குழப்பம் ஆகியவற்றைக் கொண்டுவரக் கூடிய ஒரு ஒழுங்கு நிலையை விட இந்த ஒழுங்கான ஒழுங்கீனம் எவ்வளவோ மேல். நண்பரே, மாற்றம் எப்படிக் கொண்டு வர வேண்டும்? மாற்றம் கொண்டு வருவதற்கான அவசியம் என்பதைப் பற்றி நீங்கள் பேசும்போது, எனக்கு உங்கள் பேச்சில் உடன்பாடு உள்ளதா என்று சொல்ல முடிய வில்லை. ஒரு துணிகரமான சிந்தனை, ஊகம் என்பதாக உங்கள் கருத்துக்களை ரசிக்கிறேன். எனது தொழில், என் வீடு, என் குடும்பம் இன்ன பலவற்றை இழக்கச் செய்யும் புரட்சி எனக்கு வேண்டாம். உங்கள் கருத்து, என் மனதிற்கு இதமானதாக இல்லை. நீங்கள் இளைஞர்கள் உங்களால் இந்த மாதிரி கருத்துக்களுடன் விளையாட முடியும். இருந்தாலும் தொடர்ந்து, இந்த விவாதத்தைக் கேட்டு, எம் மாதிரியான தீர்மானத் திற்கு வருகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்” என்று கூறினார்.
” சுதந்திரமாக இருக்கும் பெருமிதத்துடனும், குடும்பம், கூட்டம், அரசியல் கட்சி, மதம் என்று எதற்கும் கட்டுப்பட்டுக் கிடக்காத நிலையிலிருக்கும் உணர்வுடனும் மாணவர்கள் அவரைப் பார்த்தனர். “நாங்கள் முதலாளித்துவ வாதிகளுமில்லை. கம்யூனிஸவாதிகளுமில்லை. அரசியல் நடவடிக்கைகள் பற்றி எங்களுக்கு அக்கறையே கிடையாது” என்று மாணவர்கள் கூறினார்கள். பொறுமையுடனும், மூத்தவர்கள் பேச்சால் கொஞ்சம் தர்மசங்கடப்பட்ட உணர் வுடனும் புன்னகை செய்தனர். மூத்த தலைமுறையினருக்கும், இளைய தலை முறையினருக்கும் இடையே உள்ள இடைவெளி அது – அதை அவர்கள் பாலம் அமைத்து இணைக்க முற்பட வில்லை.
மாணவர் தொடர்ந்தார்:
“நாங்கள் எதற்கும் சத்தியவாக்கு கொடுத்துவிடவில்லை. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேஷம் போடும் வேஷதாரிகளும் நாங்கள் இல்லை. என்ன செய்ய விரும்புகிறோம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை தான் ஆனால் எது சரியில்லை என்பது எங்களுக்குத் தெரியும். சமூக வேற்றுமைகள், இன வித்தியாசங்கள் போன்றவை எங்களுக்கு வேண்டாம். குழந்தைத்தனமான மத நம்பிக்கைகள், மூடப்பழக்கவழக்கங்கள் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. போர்களைத் தடுக்கும் விதமாக செயல்படும் அரசியல் தேவை என்றாலும் இந்த அரசியல் தலைவர்கள் எங்களுக்கு வேண்டாம். மனிதன் முற்றிலும் மாற்றம் அடைவது சாத்தியமா என்ற விஷயத்தில் தீவிரக் கவனம் செலுத்துவோம். மாற்றம் ஏற்படுத்தும் அவ்வழிகளில் எங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொள்வோம். ஆக, மறுபடியும் இக்கேள்வியைக் கேட்கிறேன். முதலாவதாக, நம்மிடம் மாற்றம் உண்டாக்கக் கூடிய அந்த செயல் என்ன? இரண்டாவது, எப்படிப்பட்ட மாற்றம் ஏற்படவேண்டும்?”
இரண்டாவது கேள்வி, முதற் கேள்வியில் அடக்கம் இல்லையா? என்னவாக மாறப் போகிறீர்கள் என்று இப்போதே தெரிந்துவிட்டால்,
அதனை மாற்றம் என்று சொல்ல முடியுமா? நாளை இருக்கப் போகிறோம் என்பது இன்றே ஒருவருக்குத் தெரிந்துவிட்டால், நாளைய மாற்றம் நிகழ்காலத்திலேயே இருக்கிறதே! தெரிந்த எதிர்காலம் என்பது தெரிந்த நிகழ்காலமே. எதிர் காலம், நிகழ்காலத்தில் இருக்கிறது. எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் அறிந்தவைகள் தீட்டும் ஒரு திட்டமே.
சிறிதளவு மாற்றப்பட்டவை அவ்வளவே. எதிர்காலம் நிகழ்காலத்தில் இருக்கிறது.
“ஆமாம். நீங்கள் சொல்வதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அதனால், இப்போது ஒரு கேள்வி தான் உள்ளது. என்னவாக மாறப் போகிறோம் என்பதின் வர்ணனை தேவையில்லை.
முதற் கேள்வியை மட்டும் கவனிப்போம். மாற்றம் எப்படி உண்டாகும்? எல்லா தளைகளையும் உடைத்தெறிய எந்த உந்துசக்தியால், எந்த நோக்கத்தால், எந்த சக்தியால் முடியும்?”
மாற்றம் ஏற்பட செயல்படவே தேவையில்லை. கருத்து, கொள்கை, நம்பிக்கை போன்ற ‘உள்ளதை’ மறுப்பதின் மூலம் மாற்றம் நிகழும். மறுப்பதில் உள்ள சக்தியை நீங்கள் அறியவில்லை. ஒட்டுமொத்தமாக கொள்கைகளையும் வழிமுறைகளையும் மறுக்கும்போது, அச்செயலிலிருந்து ஒரு சக்தி பிறக்கிறது. எண்ணங்களின் விளைவான கொள்கைகளையும் சூத்திரங்களையும் மறுக்கத் தெரிந்த உங்களுக்கு, எண்ணத்தின் கட்டமைப் பையும் உடைக்க சக்தி கிடைக்கிறது. கொள்கைகள், சூத்திரங்கள், எண்ணங்கள் என்கிற தளைகளை நீக்கிய உங்களுக்கு, மாற்றம் அடைவதற்கு வேண்டிய பலம் கிடைக்கிறது. மறுதலிப்பதே அந்த பலம்.
“கருத்துக்கள், கொள்கைகள் என்று காலங்காலமாகச் சேர்த்து வைத்திருக்கும் நினைவுகளாக, அறிந்தவைகளாக இருக்கும் இந்த நிகழ்காலத்திற்கு “இறந்து விடுதல்” என்று குறிப் பிடுகிறீர்களே, அது, இது தானா?”
ஆமாம், அவ்வாறு ‘இறத்தலே புதிதாகப்’ ‘பிறப்பதற்குத்’தான். அப்போது அறிந்தவைகளிலிருந்து விடுதலையாகி, அறிந்தவைகளுக்கு ‘இறந்து’ புதிய மனதுடன் இருப்பதால், மாற்றத்தின் முழு இயக்கமும் உங்களுக்குக் கிடைக்கிறது.
‘இந்த மறுப்பு, ஆக்கப்பூர்வமான, நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்மானமான செயலா?’
மாணவர்கள் கிளர்ச்சி செய்யும் போது, அது ஆக்கப்பூர்வமான நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்மானமான செயலே. ஆனால் அத்தகைய கிளர்ச்சி முழுமையற்றதாகவும் பின்னப்பட்டு பிளவுபட்டதாகவும் ஆகிவிடுகிறது. அங்கே முழுமையான மறுப்பு இல்லை. இந்த இறப்பு, ஆக்கப்பூர்வமானதா என்று நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் – ஆமாம், இ ல்லை என்ற இரண்டும்தான். நீங்கள் தீர்மானமாக ஒரு ஒரு வீட்டை விட்டு வெளியேறுகிறீர்கள். ஆனால் மற்றொரு வீட்டில் அல்லவா மறுபடியும் நுழைகிறீர்கள் – ஒரு வகை யான அதிகாரக் கட்டமைப்பிலிருந்து வேறொரு வகையான அதிகாரக் கட்டமைப்புக்கு உட்பட்டு அதிலிருந்து மறுபடியும் வெளியேற வேண்டிய நிலையில் உள்ளதால் உங்கள் செயல் ஆக்கபூர்வமான தில்லையென்றாகி விடுகிறது. நன்மை பயக்கக்கூடிய, நம்பிக்கையுள்ள செயல்
போல் தோன்றும் இந்த மாற்றமில்லாத சுழற்சி, உண்மையில் எதையும் செய்யாமல் இருப்பதற்குச் சமமாகிறது. தற்காப்பிற்காக அலையும் மனதின் ஆசையையும், தேடலையும் நீக்கித் தள்ளிவிடும் முழுமையான மறுதலிப்பே, நன்மை பயக்கும் நம்பிக்கையுள்ள செயலாகும். இந்த செயல் ஒன்றே மனிதனை நல்வழிக்கு மாற்றக் கூடியது. வெறுப்பு, பொறாமை எந்த ரூபத்தில் இருந்தாலும் அவைகளை நீங்கள் நீக்கிவிட்டால், தனக்குள்ளும் வெளியிலும் மனிதன் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட எல்லா கட்டமைப்புக் களையும் நீக்கி விட்டீர்களென்றாகி விடுகிறது. இதைப் புரிந்து கொள்வது எளிது. ஒரு பிரச்சினை மற்ற எல்லா பிரச்சினைகளுடனும் தொடர்பு உடையதாய் இருக்கிறது.
“பிரச்சினையைப் பார்ப்பது” என்று இதைத் தான் நீங்கள் சொல்கிறீர்களா?”
இவ்வாறு பார்ப்பது, பிரச்சினையின் முழுக் கட்டமைப்பையும் தன்மையையும் நமக்குப் புலப்படுத்துகிறது. இப்படி ‘பார்ப்பது’ என்பது பிரச்சினையை ஆராய்ந்து அலசுவதல்ல. பிரச்சினையின் மூலக் காரணத்தையோ அல்லது அதன் விளைவு களையோ வெளிக் கொணர்வது மில்லை. வரைபடத்தில் காட்டப் படுவது போல அவைகள் எல்லாம் தெளிவாக இருக்கிறது. நீங்கள் அதைப் பார்க்க வேண்டும் அவ்வளவே. உங்கள் மனதில் ஏற்கனவே அதைப்பற்றிய ஒரு கருத்து, தீர்மானம் என்றில்லாமலிருந்தால்தான் உங்களால் அதைப் பார்க்க முடியும். அதைப் பற்றிய கருத்து எதுவுமில்லாமல் யதார்த்ததாக இருத்தல்தான் நமக்கு கடினமாக உள்ளது. குடும்பம், நாடு, மதம் என்று இவைகளில் நாம் கட்டுண்டு இருக்கிறோம். எதையாவது சார்ந்திருப்பது, எந்தக் கூட்டத்திலாவது உறுப்பினராக இருப்பது நமக்கு உள்ளூர சந்தோஷம் அளிக்கிறது. நாம் ஏதாவது ஒன்றுடன் நம்மை சொந்தப்படுத்திக் கொண்டால், பிரச்சினையைப் ‘பார்ப்பது’ என்பது நம்மால் முடியாத காரியம். சொந்தம் கருதி, பகுத்தறிவில்லாமல் நடந்து கொள்கிறோம்.
வன்முறை யாளனாக ஆகிறோம், பிறகு வன்முறையை முடிவிற்குக் கொண்டு வர வேறு எதனுடனாவது சொந்தம் வைத்துக் கொள்ள ஓடுகிறோம். நாம் இந்த விஷச்சூழலில் சிக்கிக் கொண் டிருக்கிறோம். கோடிக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் இதை தான் செய்து கொண்டிருக்கிறான் – இதை ‘பரிணாம வளர்ச்சி’ என்று கொஞ்சம் சந்தேகத்துடனே தெளிவில்லாமல் கூறிக் கொள்கிறான். அன்பு என்பது காலத்தின் இறுதியில் வளர்ச்சியால் வருவதல்ல. அது இப்பொழுதே வந்தால் தான் உண்டு. இல்லை யென்றால் எப்போதும் வராது. அன்பு, இல்லையென்றால் அது நரகம் தான் நரகத்தை மாற்றி சீர்திருத்துவது என்பது அந்த நரகத்தை அலங்கரிப்பது போன்றதேயன்றி வேறொன்றுமில்லை!
.
