
தலைக்கு மேல் உரசிச்செல்லும்
பறவையின் நிழலொன்று
ஞாபகமுற்ற நெஞ்சை சிறகு விரிக்க
சொல்கின்றது
முகில்யானை கூட்டங்களின்
காலடியில் விம்மி மிதிபடச் சொல்கிறது
உருத்தெரியாமல் மழையாய் பொழிந்து
பின்பு
மறைந்து போ என்கிறது
தூக்கனாங்குருவி கூட்டுக்குள் உருளும்
வெண்முட்டைகளுக்கு
இரவெல்லாம் காவல் இரு என்கிறது
ஒரு கோடையில் தண்ணீரற்ற துளசி செடியாய்
பட்டுப்போ என்கிறது
உறங்கவிடாத இராத்தெரு நாய்களின்
சிநேகிதத்தை வளர்த்தெடு என்கிறது
இரவுத் திரைச்சீலைகளை பித்தேறி
கிழித்துவிடாமல்
நிம்மதியாய் அவைகளை
காற்றில் அசையவிடு என்கிறது
