
எந்த முகம் கண்டதாலே
எழுவினைகள் நீங்கிடுமோ
அந்த முகம் முன்புவந்து
இப்போது தோன்றிடுமோ
இன்று காணும் எந்தன்முகம்
எழில்வடிவாய் வந்தமுகம்
இணையிலாத ஆறுமுகம்
இன்பமினி ஏறுமுகம்
ஈசன்விழி யாத்தமுகம்
எனதன்னை பூத்தமுகம்
பாசமுடன் இவரிருவர்
பாலருக்குத் தந்தமுகம்
கதிரின்முகம் அக்னிமுகம்
காப்பதிலோ மாலின்முகம்
விதிஞானம் அனைத்துமாகும்
வித்தகனார் வேலின்முகம்
அஜமுகியைத் தண்டித்த
ஐயனார்க்கு அண்ணன்முகம்
கஜமுகனை க்ரௌஞ்சத்தைக்
கதறவைத்த கந்தன்முகம்
கஜமுகனார் மூத்தவராம்
கடவுளுக்குத் தம்பிமுகம்
த்வஜமெனவே பகைவனையும்
செய்தகருணை நம்பிமுகம்
ஆணவமாய் ஆடிவரும்
அடடா! இங்கு ஊழிமுகம்
ஆண்டவனை வேண்டிநிற்கும்
அலைக்கரத்தால் ஆழிமுகம்
கானமரும் மயிலேறிக்
காக்கவிரையும் செல்வமுகம்
பேணியெமை வாழவைக்கப்
பெருமான்தந்த பிள்ளைமுகம்!
அகந்தையெனும் சூரன்முகம்
அகந்தனிலே ஆடிவர
அகம்நீக்கும் வேலின்முகம்
அதையெய்யும் வீரன்முகம்
அகந்தனிலும் அருகினிலும்
அனுதினமும் ஆறுமுகம்
இகபரமும் இலங்கட்டும்
இதையருள்க வேலன்முகம்
