நண்பர் ராஜ் கௌதமன் மறைந்தார்/எம்.டி.முத்துக்கமாரசாமி

நண்பர் ராஜ் கௌதமன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 1990 களில் அவர் என்னை அழைத்து புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் தொடர் உரைகள் வழங்க ஏற்பாடு செய்தார். அப்போது அவர் என்னை அவர் வீட்டில் விருந்தினராகத் தங்க வைத்திருந்தார். அந்த நாட்களில் தினசரி அவரோடு உரையாடியவை இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. ராஜ்கௌதமனும் அவரது மனைவி திருமதி பரிமளம் அவர்களும் என்னைத் தங்கள் வீட்டுப் பிள்ளை போல பார்த்துக்கொண்டார்கள். ராஜ்கௌதமன் என்னிடம் காட்டிய வாஞ்சை அளப்பரியது.

கோவை ஞானி அவர் நடத்திய ‘நிகழ்’ இதழில் ராஜ் கௌதமனின் சங்க இலக்கிய வாசிப்பை வைத்து ஒரு விவாதத்தைத் தொடங்கினார். அந்த விவாதத்தில் பங்கேற்க இருவரும் என்னையும் அழைத்தனர். கடிதப் பரிமாற்றங்கள் மூலம் நடந்த அந்த உரையாடல்கள் எனக்கு மிகவும் முக்கியமானவை.

ராஜ் கௌதமனின் “பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்”, “அறம் அதிகாரம்”, “கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு” ஆகிய நூல்கள் தமிழ் வாசகர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டியவை. அவருடைய “அ. மாதவையா” நூலும் எனக்கு மிகவும் முக்கியமானது.

பேராசிரியர், அறிஞர், நண்பர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி.