பாகற்காய்/கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்


ஆசிரியர் கலைமகள்………………….

பாகல் என்றும் இது
அழைக்கப்படுகிறது.
பூக்கும் நிலைத்திணைப் பிரிவைச் சேர்ந்த கொடியில் காய்க்கும் கசப்புச் சுவையுடைய ஒரு காயாகும். தெவச சமையலுக்கு இதனை அவசியம் எடுத்துக் கொள்கிறார்கள்.

பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் உணவில் அடிக்கடி பாகற்காயைச் சேர்த்து கொள்வது நல்லது!

பாகற்காயை வதக்கிச் சாப்பிட்டாலும், ஆவியில் வேகவைத்து சாப்பிட்டாலும் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். இதனுடன் எலுமிச்சை, இஞ்சி, மிளகு போன்றவற்றைச் சேர்த்து சாப்பிட்டால் அதன் கசப்புத் தன்மை மட்டுப்பட வாய்ப்புண்டு. தினசரி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லதல்ல!

பாகற்காயை பச்சையாக ஜூஸாக்கி அருந்தும்போது கிடைக்கும் பலன்கள் சமைத்த பாகற்காயில் கிடைக்கும் பலன்களை விட அதிகம் என்றாலும் வாரத்திற்கு இரண்டு முறை தான் இது போன்று செய்யலாம்!

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச் சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம். அதேபோல திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கு
தூதுவளைக் கீரையும் பாகற்காயும் நைவேத்தியமாகப்
படைக்கப்படுகிறது.

சிப்ஸ் வகையறாக்களில் பாகற்காய் சிப்ஸ் தனி சுவையானது.
சமைப்பதற்கு முன், பாகற்காய் துண்டுகளை உப்பு நீரில் 15-30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது சில கசப்பான தன்மைகளை வெளியேற்றுகிறது. பின்னர்
பாகற்காய் துண்டுகளைத் தயிரில் 15-நிமிடங்கள் ஊற வைக்கவும். தயிர் கசப்புத் தன்மை அளவோடு இருக்க உதவுகிறது!

வறுக்கும்போது, கடாயில் போட்டு அதிக வெப்பம் இல்லாத படி பார்த்துக் கொண்டு எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இது இந்திய வம்சாவழி காய்கறியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்!! சங்க இலக்கியத்தில் மதுரைக்காஞ்சியில் பாகற்காய் பற்றிய குறிப்பு உள்ளது!