கூட்டம்

அதங்கோடு அனிஷ்குமார்



அவர்கள் சிலரின்
கட்டளைக்கு கட்டுப்பட்டு
இவர்கள்
பலரும் கூடுகிறார்கள்.

ஆமாம் ஆமாம் என
தலையசைக்கும்
பெரும்பாலானோரும்
ஆமென் என ஒரு சிலரும்
எதிர்க்க திராணியற்று
முக்கல் முனகலாய்
மிகச் சிலரும் என
கூட்டம் கூடி
பேசுகிறார்கள்.

ஏன் கூட்டம்
கூட்டுகிறார்கள்?
எதற்கு கூட்டம்
கூட்டுகிறார்கள்?
அவர்களுக்கே வெளிச்சம்.
ஆனால்
கூடுகிறார்கள்.
கூடிக்கூடி
எதையெதையோ
பேசுகிறார்கள்.

நேற்றைய கூட்டத்தில்
நாளைய கூட்டம் குறித்தும்
நாளைய கூட்டத்தில்
நாளை மறுநாள்
கூட்டம் குறித்தும்
பேசுவதென முடிவாயிற்று.

தீர்மானிக்க ஏதுமில்லை
என்பதால்
ஒத்திவைப்புத் தீர்மானங்கள்
ஒருமனதாய்
நிறைவேறுகின்றன.

ஆனாலும்
முடிவற்றுப் போகின்றன
கூட்டங்கள்
முடிவுகள் ஏதுமற்று.