ரா.ஸ்ரீனிவாஸன்/கணத் தோற்றம்

கணத் தோற்றத்தைக் கைப்பிடித்து
நனவெனும் நூலிற் கோர்த்தெடுத்து
மனனம் செய்து உருவேற்றுகிறேன்

கனவாகி ஜனனமாகும் ஓருலகு
நுரைத்து நுரைத்து
ஊதிப்பெருத்து உருவாகி உருவாகி
விரிவடைந்து வேறாகித் ததும்ப அங்கே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கணப்பொழுதுக் குமிழிகள்…

கணத்துக்குள் கணமாகி
நழுவும் கணத்தைக் கணக்கிடுகிறேன்
அதுவென் வசப்படவில்லை

தோன்றித் தோன்றி மறையும்
இடைவெளிகளுக்கிடையே
அதனைக் கைப்பற்றுகிறேன்
மறுகாட்சியாக்கி மீட்டுக் கொள்கிறேன்

முதற்காட்சி என்னவாயிற்று என வியக்கிறேன் ஆனால்
மறுகாட்சியில் முதற்காட்சியின்
மிஞ்சிய சாயையை நினைப்பாக்கி அதற்கு மேலும்
சாயமேற்றுகிறேன்

வண்ணங்கள் இடம் மாற
முதற்காட்சியின் நிறங்கள்
தலைகீழாக
முன்னெப்போதும் இல்லாத மனக்காட்சியாகிறது
புதுக்காட்சியென மயங்குகிறேன் அதனை
ஆனால் கணத்தோற்றத்தின் கடைசிப் பிரதி அது.