
- பாரிஸ்டர் ஆனார்
பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக அல்லவா மோகன்தாஸ் இங்கிலாந்துக்குப் போனார்? அது என்ன ஆயிற்று என்று இப் போது சொல்லுகிறேன்.
பாரிஸ்டர் ஆவது மிகவும் சுலபம் என்று ஜோஷிஜி கூறியது முற்றும் உண்மை. இந்தியாவில் உள்ளதுபோல் இங்கிலாந்தில் சட்ட கலாசாலைகளுக்குச் சென்று படிக்கவேண்டியதில்லை.
பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்கு ஒரு மாணவன் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யவேண்டும். அவை என்ன வென்று சொல்லட்டுமா? தம்பி ! (1) மாணாக்கர்களும் பாரிஸ்டர் – நீதிபதிகளுமாகச் சேர்ந்து உட்கார்ந்து பலமுறை விருந்து சாப்பிட்டாக வேண்டும். (2) குறிப்பிட்ட சில முக்கிய பரீட்சைகளில் மட்டும் தேறவேண்டும்.
விருந்து சாப்பிடுவது என்னத்திற்கு என்று நீ அறிய விரும்பலாம். முற்காலத்தில் சட்ட மாணாக்கர்களின் தொகை மிகக் குறைவாயிருந்தபோது பாரிஸ்டர்களும் நீதிபதிகளும் சட்ட மாணாக்கர்களும் கலந்து பழகுவதற்காகவும் சட்ட விஷயங்களைப் பற்றிச் சர்ச்சைகள் செய்வதற்காகவும் இந்த விருந்துகள் ஏற்படுத்தினார்களாம். இப்போது மாணாக்கர்களின் தொகை மிக அதிகம். பாரிஸ்டர்களும் நீதிபதிகளும் எங்கேயோ ஒரு மூலையில் உட்கார்ந்து தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். மாணவர்களுடன் அவர்கள் பேசுவதற்கே வசதி இராது. எனவே, இந்த விருந்துகள் ஏற்படுத்திய நோக்கம் இப்போது நிறைவேறுவதேயில்லையாம். ஆனாலும் சம்பிரதாயத்தை மட்டும் விடாமல் அனுஷ்டித்து வருகிறார்களாம்.
தம்பி! இந்தியா தேசத்திலே தான் நாம் பழைய சம்பிரதாயங்களை அதிகமாய்க் கட்டிக்கொண்டு அழுகிறோம் என்று சாதாரணமாய் நினைக்கிறோமல்லவா? ஆங்கிலேயர் நம்மை விடப் பழைய சம்பிரதாயங்களில் அதிகப் பற்று உள்ளவர்கள், நம்மை விட அதிகமாக ஆங்கிலேயர் குருட்டு நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் உள்ளவர்கள் என்றுகூடச் சொல்லலாம்.
ஒரு காலத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 200 அங்கத்தினர்தான் இருந்தார்களாம். ஆகையால் 200 ஆசனங்கள் மட் டும் பார்லிமெண்டில் போடப்பட்டிருந்ததாம். இப்போது 650 அங்கத்தினர்கள் இருந்தபோதிலும் பழைய சம்பிரதாயப்படி 200 ஆசனங்கள் தான் இருக்கின்றனவாம். முன்னால் வந்தவர்கள் தான் ஆசனத்தில் உட்காரலாம். மற்றவர்கள் பின்னால் நிற்கவேண்டியதுதான் ! எப்படியிருக்கிறது கதை ! பாரிஸ்டர் ஆவதற்காக விருந்துகள் நடக்கும் விஷயமும் இப்படிப்பட்ட சம்பிரதாயந்தான்.
பாரிஸ்டர் விருந்துகள் மூன்று மாதத்துக்கு இருபத்துநாலு நடைபெறும். இவற்றில் குறைந்த பட்சம் ஆறு விருந்துகளுக்கு மாணவர்கள் கட்டாயம் போகவேண்டும். இம்மாதிரி மூன்று வருஷ காலம் விருந்துகளுக்குப் போய்த் தீரவேண்டும்.
விருந்து என்றால், இலவசச் சாப்பாடு அல்ல. இரண்டு அல்லது மூன்று ரூபாய் ஒவ்வொரு மாணாக்கனும் கொடுக்க வேண்டியிருக்கும். பணம் கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் சாப்பிடுவது கட்டாயம் அல்ல ; சும்மா உட்கார்ந்திருந்துவிட்டுத் திரும்பலாம். பொதுவாக விருந்தில் நல்ல உணவு வகைகளும் மதுபான வகைகளும் கொடுக்கப்பட்ட படியால் மாணவர்கள் ஒரு கை பார்த்து விடுவார்களாம் ! மோகன் தாஸுக்கோ அவருடைய விரதம் இருந்தது. புலால் கலந்த உணவும் மதுபானமும் அவருக்கு உதவா. முதலிலெல்லாம் மோகன்தாஸ் சும்மா உட்கார்ந்து பார்த்திருந்து-விட்டுத் திரும்பினார். எனவே அவருடைய பங்கும் தங்களுக்குக் கிடைக்கும் என்பதற்காக மற்ற மாணவர் கோஷ்டிகள் தங்களுடன் சேர்ந்து உட்காரும்படி மோகன் தாஸை வற்புறுத்தி அழைக்கும்படி ஏற்பட்டது. அப்பொழுதல்லாம் விருந்துகளில் மோகன்தாஸ்க்கு ஏகக் கிராக்கி !
கொஞ்ச காலத்துக்குப் பிறகு மோகன் தாஸுக்குத் தைரியம் பிறந்து, பாரிஸ்டர் – நீதிபதிகளுக்காகத் தனியாகக் கொடுக்கப்பட்டு வந்த பழங்களையும் கறிவகைகளையும் தமக்கும் கொடுக்க வேண்டுமென்று கேட்டு பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டாராம்.
‘சாப்பாட்டு ராமன்’ என்று நம் ஊரில் வேடிக்கையாகச் சொல்கிறோமல்லவா? இதுபோலவே இங்கிலாந்தில் சாதாரணமாய்ச் ‘ சாப்பாட்டு பாரிஸ்டர்’ என்று சொல்லுவதுண்டாம்.
விருந்து விஷயம் இப்படியிருக்க ; பரீட்சை சமாசாரம் என்ன வென்று கேள். இரண்டே இரண்டு விஷயம் பற்றிய பரீட்சைகள் நடக்கும். ஒன்று ரோமன் சட்டம் ; இன்னொன்று ஆங்கில நாட்டின் பழமைச் சட்டம். இவற்றில் தனித் தனிப் பகுதிகளுக்குப் பரீட்சைக்குப் போகலாம். பரீட்சைகளுக்குப் பாடபுத்தகங்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் யாரும் சிரமப்பட்டுப் படிப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று மாதம் இலேசாகக் குறிப்புகளைப் படித்துவிட்டுப் பரீட்சைகளில் தேறிவிடலாம். பரீட்சைக் கேள்விகள் மிகவும் சுலபமானவை. பரீட்சைப் பரிசோதகர்களோ தாராள மனம் உள்ளவர்கள். ஆகையால் பரீட்சைக்கு எழுதுகிறவர்களில் 100-க்கு 95 பேர் முதல் 99 பேர் வரையில் தேறிவிடுவார்-களாம்!
இப்படி இங்கிலாந்தில் பரீட்சைகளைச் சுலபமாய் வைத்திருந்தார்கள் ; இதனாலே தான் படிப்பு முடிந்ததும் ஆங்கில இளைஞர்கள் பல அரிய காரியங்களைச் சாதிப்பதற்கு முடிந்தது.
நம்முடைய நாட்டிலோ, பரீட்சைகளை எவ்வளவு கஷ்ட மாகச் செய்யலாமோ அவ்வளவு கஷ்டமாகச் செய்து வைத்தார்கள்! இதனால் பரீட்சைகளில் தேறி ஒரு மாணாக்கன் வெளியே வருவதற்குள் அவனுடைய அறிவின் சக்தியெல்லாம் செலவழிந்துபோய் உடலும் அறிவும் சோர்ந்து விடுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுங்கூட இன்னமும் அத்தகைய பரீட்சைகளையே நமது நாட்டில் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் உன்னிடம் சொல்வதில் பயன் என்ன? பரீட்சைகள் கஷ்டமாயிருக்கவேண்டும் என்று நீயா சொல்லுகிறாய்? போகட்டும் !
பாரிஸ்டர் பட்டத்துக்குரிய பரீட்சைகள் இவ்வளவு சுலபமாக இருந்தும் மோகன் தாஸ் அவற்றைக் கூடியவரையில் கஷ்டமாக்கிக்கொள்ள முயன்றார்! குறிப்பிட்ட பாட புத்தகங்களை யெல்லாம் மிகவும் சிரமப்பட்டுப் படித்தார் ! ரோமன் சட் டம், ஆங்கிலச் சட்டம் எல்லாம் படித்தார்.
இவ்வளவு படித்தும் நேரம் பாக்கியிருந்தது. வீண் பொழுது போக்க மனமின்றி லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்குப் போகத் தீர்மானித்தார். அந்தப் பரீட்சைக்குப் பழைய லத்தீன் பாஷையும், புதிய ஐரோப்பிய பாஷை யொன் றும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது! லத்தீன் பாஷை பாரிஸ்டர் வேலைக்கு மிகவும் பயன்படும் என்று மோகன் தாஸ் கேள்விப்பட்டார் ; எனவே லத்தீன் படிக்கத் தொடங்கினார். ஆனால் முதல் தடவை பரீட்சைக்குப் போனதில் லத்தீன் பாஷையில் தேறவில்லை. இன்னும் அதிகப் பிடிவாதத்துடன் படிக்கத் தொடங்கினார். படிப்பதற்கு அனுசரணையாக வாழ்க்கை முறையை மேலும் எளியதாக்கிக் கொண்டார். எண்ணெய் அடுப்பு ஒன்று வாங்கித் தினம் காலையில் அவரே உணவு தயார் செய்து கொண்டார். காலை உணவு ஓட் தானியக் கூழும் கோக்கோவுந்தான். மாலையில் மீண்டும் அறையிலேயே ரொட்டியும் கோக்கோவும் தயாரித்துச் சாப்பிட்டார். மத்தியான த் தில் மட்டும் வெளியில் சைவ போஜன சாலை ஒன்றில் சாப்பிட் டார். இவ்விதம் வாழ்வு முறையை எளியதாக்கிக் கொண்ட காரணத்தினால், பணமும் மிச்சமாயிற்று ; படிப்பதற்குச் சாவகாசமும் அதிகம் கிடைத்தது. தினமும் ஒரு ஷில்லிங் மூன்று பென்ஸ் செலவில் காலட்சேபம் நடந்தது. மாதம் ஐந்து பவுன் மிச்சமாயிற்று. கடைசியில், லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையிலும் (லத்தீன் பாஷை உள்படத்) தேறிவிட்டார் !
தம்பி ! லண்டனில் மேற்கண்டவாறு எளிய வாழ்க்கை நடத்தியது மோகன் தாஸுக்குக் கஷ்டமாயிருக்கவில்லையாம்; சந்தோஷமாகவே இருந்ததாம். இதைப் பற்றிக் காந்திஜி தம் சுய சரிதத்தில் எழுதியிருப்பதைக் கேள் :-
“எளிய வாழ்வு முறையைக் கைக்கொண்டதால் என் வாழ்க்கை சந்தோஷமற்றதாயிற்று என்று யாரும் எண்ணவேண் டாம். அதற்கு மாறாக இந்த மாறுதல் மூலம் என் அகநிலைமையும் புற நிலைமையும் ஒற்றுமைப் பட்டதைக் கண்டேன். ஆகவே புதிய வாழ்க்கை உண்மையோடு ஒட்டிய வாழ்க்கையாயிற்று. இதை நான் உணர்ந்தபோது என் ஆத்மா (எல்லையற்ற) ஆனந்த சாகரத்தில் மிதந்தது.”
இவ்வாறு மோகன்தாஸ் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையிலும் பாரிஸ்டர் பரீட்சையிலும் தேறுவதற்குப் பிரயத்தனம் செய்துகொண்டு அதே சமயத்தில் தமக்குத் தாமே ஆத்ம பரீட்சைகளும் நடத்திக் கொண்டிருந்தார். அவற்றில் வெற்றியடைந்து வந்தார்.
மூன்று வருஷ காலம் லண்டனில் வசித்த பிறகு கடைசி யில் 1891-ம் வருஷம் ஜூன்மீ 10௳ மோகன்தாஸ் காந்தி பாரிஸ்டர் ஆனார். மறுநாள் 11௳ இந்தியாவின் ஹைக்கோர்ட்டு களில் வக்கீல் தொழில் நடத்தும் உரிமை பெற்றார். பிறகு ஒரு தினங்கூட இங்கிலாந்தில் அவர் தாமதிக்கவில்லை. ஜூன் 12௳ யன்றே இந்தியாவுக்குப் பிரயாணமானார்.

One Comment on “கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்”
Comments are closed.