
- கவலைக் கடல்
எஸ். எஸ். அஸ்ஸாம் என்னும் கப்பலில் மோகன் தாஸ் தாய் நாடு நோக்கிப் பிரயாணம் செய்தபோது அவருடைய மனம் கவலைக்கடலில் ஆழ்ந்திருந்தது. பாரிஸ்டர் பரீட்சையில் தேறி விட்டாரே தவிர, வக்கீல் தொழில் நடத்தலாம் என்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. சட்ட கோட்பாடுகள் படித்திருந்தாரே தவிர, அவற்றை ஆதாரமாகக் கொண்டு கோர்ட்டுகளில் வாதமிடலாம் என்னும் தைரியம் உண்டாகவில்லை.
மேலும், இந்தியச் சட்டங்களைப் பற்றி இங்லாந்தில் அவர் ஒன்றுமே கற்கவில்லை யல்லவா? இந்தியச் சட்டங்கள் தெரியாமல் இந்தியக் கோர்ட்டுகளில் எப்படி வாதமிடுவது என்று எண்ணி அதைரியப்பட்டார். கடல் நடுவில் ஆதரவு ஒன்றுமில்லாமல் விடப்பட்டவனுடைய உள்ளத்தைப் போல் அவருடைய உள்ளம் தவித்தது. பம்பாயில் அதற்கு முன்னாலேயே பிரசித்தி யடைந்திருந்த ஸர் பிரோஸிஷா மேத்தா என்னும் தேசபக்தப் பிரமுகர் நீதி மன்றங்களில் சிம்மத்தைப்போல் கர்ஐனை செய்வார் என்று மோகன் தாஸ் கேள்விப்பட் டிருந்தார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்ததைக் கொண்டு இந்தியக் கோர்ட்டுகளில் ஸர் பிரோஸிஷா மேத்தா எவ்விதம் கர்ஜனை செய்திருக்க முடியும் என்பது மோகன் தாஸுக்கு ஒரே வியப்பாயிருந்தது. ஸர் பிரோஸிஷா மேத்தாவைப் போன்ற பிரபலமும் வருமானமும் அடையும் எண்ணம் லவலேசமும் மோகன் தாஸுக்கு இருக்கவில்லை. ஜீவனத்துக்கு வேண்டிய பணமாவது சம்பாதிக்க முடியுமா என்பதே அவருக்குச் சந்தேகமா யிருந்தது.
இந்த விஷயத்தைப் பற்றி இங்கிலாந்திலிருந்தபோதே மோகன் தாஸுக்குக் கவலை ஏற்பட் டிருந்ததாம். இந்திய மாணாக்கர்களிடம் அன்பு கொண்டு புத்திமதி கூறிவந்த மிஸ்டர் பிரடரிக் பிங்கட் என்னும் ஆங்கிலேயரைப் பார்க்கும்படி ஒரு நண்பர் கூறினாராம். அவ்விதமே மோகன் தாஸ் சென்று பிங்கட் என்பவரைப் பார்த்தாராம். மோகன் தாஸின் கவலை இன்னதென்பதைப் பிங்கட் தெரிந்து கொண்டதும் பின் வருமாறு புத்திமதி சொன்னாராம் :- “ஒவ்வொரு வரும் பிரோஸிஷா மேத்தா ஆக முடியாது. வக்கீல் தொழில் செய்வதற்கு மேத்தாவைப்போல் மேதாவியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சாதாரண முயற்சித் திறமையும், நாணயமும் இருந்தால் போதும். உம்முடைய கஷ்டம் என்ன வென்று தெரிந்து கொண்டேன். உமக்குப் பொதுப் படிப்பு ரொம்பக் குறைவு. வக்கீல் தொழில் செய்வதற்கு உலக ஞானம் அவசியம். மனித சுபாவம் தெரிந்திருக்க வேண்டும். ஒருவனுடைய முகத்தைப் பார்த்தே அவனுடைய குணங்களை அறியும் திறமை வேண்டும். அதோடு சரித்திர அறிவு மிகவும் அவசியம். நீரோ இந்தியாவின் சரித்திரம் கூடப் படித்ததில்லை. ஊருக்குப் போனதும் இந்திய சரித்திர புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். மனித சுபாவத்தை அறிவதற்கு இன்னும் சில நூல்களை வாங்கிப் படியுங்கள். அதைரியப்பட வேண்டாம்!”
இம்மாதிரி பிங்கட் என்பவர் சொன்ன புத்திமதியை மோகன் தாஸ் மறக்கவேயில்லை. முக்கியமாக, வக்கீல் தொழிலில் வெற்றி பெறுவதற்கு முயற்சியும், நாணயமும் இருந்தால் போதும் என்று கூறியது அவருடைய மனத்தில் ஆழப் பதிந்திருந்தது. எனவே, மனத்தில் கவலை அதிகமாகும்போ தெல்லாம் பிங்கட் கூறியதை ஞாபகப் படுத்திக் கொண்டு மோகன் தாஸ் தைரியம் பெற முயன்றார்.
பாரிஸ்டர் மோகன் தாஸ் இந்தியாவுக்குப் பிரயாணமானது ஜூன் மாதத்தில் என்று சொன்னேனல்லவா? ஜூன் ஜூலை மாதங்களில் அரபிக் கடலில் கொந்தளிப்பு அதிக மாயிருக்கும். ஏடன் துறைமுகத்திலிருந்து அலைகள் வர வரப் பெரிதாகிக் கப்பலைப் பாடாய்ப் படுத்தின. இது காரணமாகப் பிரயாணிகளில் பலர் நோய்வாய்ப் பட்டார்கள். ஒருவருமே அறையை விட்டு வெளிவருவதில்லை. ஆனால் மோகன் தாஸ் பூரண செளக்கியத்துடன் இருந்தார். கப்பலின் மேல் தட்டிலே நின்று பெரிய பெரிய அலைகள் வந்து கப்பலை மோதும் காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அம்மாதிரி பெரும் அலைகள் அவருடைய உள்ளத்திலேயும் அடித்துக் கொண்டிருந்தன. கப்பல் இந்தியாவை நெருங்க நெருங்க உள்ளத்தின் அலைகளும் பெரிதாயின. பம்பாயிலிருந்து இங்கிலாந்துக்குப் புறப்படும் தறுவாயில் சாதிக் கட்டுப்பாடு என்னும் தொல்லை வந்து குறுக்கிட்டது அவர் நினைவில் இருந்தது. திரும்பித் தாய்நாட்டை அடைந்த பிறகும் அந்தத் தொல்லைக்கு ஆளாகும்படி நேருமோ என்னமோ? – இதுபோன்ற குருட்டு வழக்கங்களை யெல்லாம் ஒழித்து இந்தியாவின் சமூக வாழ்க்கையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டு மென்று. மோகன் தாஸின் இளம் உள்ளத்தில் பற்பல சிந்தனைகள் தோன்றிக் கொண்டிருந்தன.
ஆம் ; தம்பி ! மோகன் தாஸ் பின்னால் மகாத்மா காந்தி ஆவதற்கு அவசியமான அஸ்திவாரம் அப்போதே அவருடைய உள்ளத்தில் போடப்பட்டு வந்தது. இதுபோல் இன்னும் எத்தனையோ தடவை மோகன் தாஸ் கப்பல் பிரயாணம் செய்யும் படியாக நேரும். ஒவ்வொரு தடவையும் வெளியே கடல் அமைதியா இருந்தாலும் அவர் உள்ளத்தில் சிந்தனை அலைகள் மோதிக் கொண்டிருக்கும். கப்பலிலிருந்து கரையிலே இறங்கியதும் மிகவும் கஷ்டமான நிலைமைகளை அவர் சமாளிக்க வேண்டி யிருக்கும். மோகன் தாஸ் சிறிதேனும் அதைரியப் படாமல் நின்று சமாளிப்பார். இதையெல்லாம் இந்தச் சரித்திரத்தின் பின் பகுதிகளில் நீ பார்ப்பாய்.
